
தமிழ் சமூகத்தில் காதல் வளர்த்த கதைகளுக்கு வர்ணம் தீட்டியது தமிழ் சினிமா என்றே சொல்லலாம். தமிழ் சினிமா வரலாற்றில் 80களின் காலம் காதலுக்கு மகுடம் சூட்டிய காலமாக பார்க்கப்படுகிறது. இயக்குனர் இமயம் பாரதிராஜா, காதலின் பல்வேறு நிலைகளை எடுத்துக் கூறி, காட்சி ஜாலங்களை நிகழ்த்திக் காட்டினார். அதிலும் பாரதிராஜாவின் படங்களில் இளையராஜாவின் பாடல்கள் இணைய, தமிழ் சமூகமே காதலில் கசிந்து உருகியது. சமூக உணர்வுகளை பேசிய தமிழ் சினிமா காட்சிகள் 90களுக்கு பிறகு மெல்ல மெல்ல காதல் குறித்து வகுப்பெடுக்க தொடங்கின.
நடிகர் விஜய்யின் பூவே உனக்காக, லவ் டுடே, காதலுக்கு மரியாதை, யூத் என பல திரைப்படங்களில் அவர் பேசிய வசனங்கள், இளைஞர்களின் காதலுக்கு வழிகாட்டியது. இந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் நிறமே காதலாக மாறிப் போனது. குறிப்பாக காதலை மட்டுமே முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்ட கதைகள் டஜன் கணக்கில் திரைக்கு வந்தன. காதல் தேசம், காதலர் தினம் என முழுக்க முழுக்க காதலை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதைகள் இளைஞர்களை கிறங்கடிக்க செய்தன.
இதையும் படியுங்கள்... காதலர் தின ஸ்பெஷல் “ கோலிவுட்டால் இணைந்த காதல் ஜோடிகள் ஒரு பார்வை!
காதலின் இன்னொரு பரிணாமத்தை திரையில் நிகழ்த்திக் காட்டிய முக்கிய இயக்குனர்களில் முதன்மையானவர் மணிரத்னம். பயங்கரவாதிகளிடம் சிக்கிய கணவனுக்காக ஏங்கும் மனைவியின் காதல் உணர்வை வெளிப்படுத்தும் ரோஜா மற்றும் மற்றொருவரின் மனைவியை கவர்ந்த காதலனின் உணர்வுகளை பேசிய ராவணன், மெளன ராகம், பம்பாய், அலைபாயுதே, ஓ காதல் கண்மணி என அவரது திரைமொழி காலத்திற்கு ஏற்றவாரு மாறுபட்ட காதலை பேசியது. அவரைத் தொடர்ந்து கெளதம் மேனனும் விண்ணைத்தாண்டி வருவாயா, மின்னலே, வாரணம் ஆயிரம் என தன்னுடைய பாணியில் வந்து காதல் படங்களுக்கு மகுடம் சூட்டினார்.
அழகி, ஆட்டோகிராப், ராஜா ராணி, காதல் கோட்டை, 96 என காதலையும், காதலுக்கு பிறகான வாழ்க்கையையும் பற்றி பேசிய படங்கள் தமிழ் சினிமாவில் ஏராளமாக அணிவகுத்து வந்தன. அவற்றில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படம் அனைவரின் வாழ்வியலோடு பொறுந்தி பார்க்கும் படமாக தனித்து இருந்தது. அதேபோல் கடந்த ஆண்டு வெளிவந்த லப்பர் பந்து, மனைவி மீது கணவனுக்கு உள்ள கண்மூடித்தனமான காதலை வெளிச்சம் போட்டு காட்டியது.
அதேபோல் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம், கணவன் இறந்த பிறகும் அவர்மீதுள்ள காதலை மனதில் சுமந்து கொண்டு பயணிக்கும் ஒரு சிங்கப்பெண்ணின் காதலை அற்புதமாக திரையில் காட்டி கலங்க வைத்தனர். இப்படி காலம் மாறினாலும் தமிழ் சினிமாவில் காதல் என்பது என்றும் நிலைத்து இருக்கிறது. அந்த காதலை காதலர் தினம் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் கொண்டாடினால் வாழ்க்கையும் ஹாப்பியா இருக்கும்.
இதையும் படியுங்கள்... காதலர் தின ஸ்பெஷல்; காதலில் ஒன்றிணைந்த சின்னத்திரை ஜோடிகள்