நீங்க தடுக்க நாங்க ஒன்னும் ஆறு இல்ல... சூறாவளி! ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய், திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் நேரடியாக விமர்சித்து பேசி இருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய், திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் நேரடியாக விமர்சித்து பேசி இருக்கிறார்.
Vijay Speech in TVK General Meeting : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசுகையில், என் நெஞ்சில் குடியிருக்கும் என் தோழர்களுக்கும், தோழிகளுக்கும் வணக்கம் என சொல்லி பேச்சை தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது : அரசியல்னா என்னங்க... ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழனும் என நினைக்கிறது அரசியலா; இல்ல ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி, நல்லா வாழனும்னு நினைக்குறது அரசியலா? நீங்களே சொல்லுங்க.. எல்லாருக்கும் நல்லது நடக்குறது தானே அரசியல். அதுதான் நம்ம அரசியல்.
தவெகவுக்கு தொடர்ந்து தடைகள் வருது
காட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல்னு, தினம் தினம் மக்கள் பிரச்சனைகளை மடைமாற்றி, மக்கள் விரோத ஆட்சியை மன்னராட்சி போன்று நடத்துறாங்க. நமக்கு எதிராக இவங்க பண்ற செயல் ஒன்னா... ரென்டா; மாநாட்டில் ஆரம்பிச்சு, அதன்பின் நான் கலந்துகொண்ட புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர் போனபோது, அதன்பின் நம்முடைய 2ம் ஆண்டு தொடக்க விழா என அன்றைக்கு எந்த ஆளும் எந்த கல்யாண மண்டபமும் கொடுத்துவிடக் கூடாது தடங்கல் செய்ததால் மகாபலிபுரத்தில் விழாவை நடத்தினோம். இன்று பொதுக்குழு வரை எப்படியெல்லாம் தடைகள் வருகிறது.
மன்னராட்சி முதல்வர் அவர்களே...
ஆனால் அத்தனை தடைகளையும் தாண்டி நம்முடைய தோழர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளும், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடந்துகொண்டு தான் இருக்கும். நம்முடைய தோழர்கள் அர்ஜுன், நிர்மல் குமார், ரமேஷ் இவங்கெல்லாம் போட்டு அடி... அடின்னு அடிக்குறாங்க, நாமலும் அதே மாதிரி அடிக்கனுமானு மனசுக்குள்ள யோசனையா இருக்கிறது என விஜய் சொன்னதும் சொல்லுங்க தலைவா என நிர்வாகிகள் கோஷமிட்டனர்.
அதன்பின்னர் திமுக அரசை விமர்சித்து பேசத் தொடங்கிய விஜய், மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே... மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே... பேரை மட்டும் வீராப்பா சொன்னா பத்தாதவர்களே... செயலிலும் ஆட்சியிலும் அதை காட்டனும் அவர்களே.. ஒன்றியத்தில் உள்ள பாஜக ஆட்சியை பாசிச ஆட்சி என அடிக்கடி அறிக்கைகள் விடுத்துவிட்டு, இங்க நீங்க பண்ற ஆட்சி மட்டும் என்னவாம். அதற்கு கொஞ்சம் கூட குறைவில்லாத அதே பாசிச ஆட்சி தானே இங்கையும் நடக்குது.
இதையும் படியுங்கள்... TVK Meeting | இறால் 65 முதல் கமகமக்கும் பிரியாணி வரை.! த.வெ.க பொதுக்குழு கூட்ட மெனு இதுதான் !
தடை போட நீங்க யாரு?
ஒரு கட்சித் தலைவனா ஜனநாயக முறைப்படி, என் கழக தோழர்களையும் என்நாட்டு மக்களையும் பார்ப்பதற்கும் சந்திப்பதற்கும் தடை போட நீங்க யாருங்க... தடைமீறி நான் போயிடுவேன், சட்டத்தை மதிக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக தான் அமைதியா இருக்கேன். நேத்து வந்தவன்லாம் முதலமைச்சர் ஆகலாம்னு கனவு காண்கிறான்னு சொல்றீங்க. அது நடக்கவே நடக்காதுன்னும் சொல்றீங்க. அப்புறம் ஏன் எந்த கட்சிக்கும் இல்லாத நெருக்கடியை தவெகவுக்கு மட்டும் கொடுக்குறீங்க என விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
நாங்க சூறாவளி.. தடுக்க முடியாது
தொடர்ந்து பேசிய அவர், அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம் காற்றை தடுக்க முடியாது. அதையும் மீறி தடுக்கனும்னு நினைச்சீங்கனா சாதரணமா இருக்கிற காத்து சூறாவளியாக மாறும். ஏன் சக்திமிக்க புயலாக கூட மாறும். என் தவெக தோழர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், இந்த மண் பிளவுவாத சக்திகளுக்கு எதிரான மண். சகோதரத்துவ மண், சமய நல்லிணக்கத்தினை பேணும் சமூக நீதிக்கான மண். இதை நாம் பாதுகாத்தே ஆக வேண்டும்.
மன உளைச்சலா இருக்கு
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து வரும் செய்திகளை கேட்கும்போது மன உளைச்சலாக இருக்கிறது. இங்க சட்டம் ஒழுங்குனு ஒன்னு இருப்பதாகவே தெரியல. அதற்கெல்லாம் இந்த கரப்ஷன் கபடதாரிகள் கவர்ன்மெண்ட் தான் காரணம். இந்த நிலைமை மாறனும் அதற்கு இருக்குற ஒரே வழி, இங்க உண்மையான மக்களாட்சி மலர வேண்டும். அது வரவேண்டும் என்றால் இவங்கள மாத்தனும். அதற்கு வழி என்னவென்றால்... நம்முடைய தோழர்கள் தினமும் மக்களை சந்தித்து பேசுங்கள். மக்களின் பிரச்சனைகளை கேளுங்கள். அதை தீர்ப்பதற்கான வழியை யோசியுங்கள். அப்போ தான் மக்களுக்கு நம்மேல் நம்பிக்கை வரும். அப்படி ஒரு ஆழமான நம்பிக்கையை விதைத்துவிட்டு, அதன்பின் நிமிர்ந்து பாருங்கள். ஒவ்வொரு வீட்டோட உச்சியிலும் தவெக கொடி தானா பறக்கும் என ஆவேசத்துடன் பேசினார் விஜய்.
இதையும் படியுங்கள்... நமது எதிரி இவர்கள் தான்! திமுகவுக்கு வேலை பார்க்கும் அண்ணாமலை! இறங்கி அடித்த ஆதவ் அர்ஜூனா!