
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து தன்னுடைய விடாமுயற்சியால் பல விஸ்வரூப வெற்றிகளை பெற்றவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் கோலிவுட்டில் சக்சஸ்புல் ஹீரோவாக வலம் வருகிறார். அஜித், விஜய்க்கு அடுத்தபடியாக அதிக மார்க்கெட் உள்ள நடிகராகவும் சிவகார்த்திகேயன் இருக்கிறார். இதனால் இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் கைவசம் உள்ள படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அதன்படி அவர் நடிப்பில் அடுத்ததாக ரிலீஸ் ஆக உள்ள படம் மதராஸி. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஏஸ் பட நடிகை ருக்மினி வசந்த் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு முன்னர் அவர் இயக்கிய சிக்கந்தர் என்கிற இந்திப்படம் படுதோல்வியை சந்தித்தது.
அதேபோல் அவர் நடிப்பில் தற்போது பராசக்தி என்கிற திரைப்படமும் உருவாகி வருகிறது. அப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். அப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா ஆகியோரும் நடிக்கிறார்கள். சுதா கொங்கரா இப்படத்தை இயக்குகிறார். இது மொழிப்போர் தியாகியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படமாகும். இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.
பராசக்தி படத்தில் நடித்து முடித்த கையோடு நடிகர் சிவகார்த்திகேயன், குட் நைட் பட இயக்குனர் விநாயக் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. அப்படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் திடீரென அப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக நடிக்க இருந்த மோகன்லால் கால்ஷீட் பிரச்சனையால் இப்படம் தாமதமாகி உள்ளது.
இதனால் விநாயக் படத்தை கிடப்பில் போட்டுள்ள சிவகார்த்திகேயன், அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. அப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படமும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தான் தயாராக உள்ளது.
இதுதவிர நடிகர் சிவகார்த்திகேயனின் லைன் அப்பில் லேட்டஸ்டாக இணைந்துள்ள படம் ஒன்று உள்ளது. அப்படத்தை விக்ரம் வேதா என்கிற மாஸ்டர் பீஸ் படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி தான் இயக்க உள்ளார்களாம். இப்படத்திற்காக பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறதாம். சிவகார்த்திகேயனுக்கு புஷ்கர் காயத்ரி சொன்ன கதை பிடித்துப் போனதால் அவர் அப்படத்தில் கன்பார்ம் நடிப்பார் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இப்படத்தில் நடிப்பதற்குள் சிவகார்த்திகேயனின் சம்பளம் 100 கோடியை எட்டவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.