
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். இவர் சினிமா மட்டுமின்றி அரசியலிலும் இறங்கி மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். சினிமா மற்றும் அரசியலில் பிசியாக இருந்த நெப்போலியன், திடீரென அனைத்தையும் விட்டுவிட்டு குடும்பத்தோடு அமெரிக்காவுக்கு சென்று செட்டிலாகிவிட்டார். அங்கு சொந்தமாக ஐடி கம்பெனி ஒன்றையும் நடத்தி வருகிறார் நெப்போலியன். அதன்மூலம் அவருக்கு கோடி கோடியாய் வருமானமும் வருகிறது. நெப்போலியன் அமெரிக்காவில் செட்டில் ஆனதற்கு முக்கிய காரணம் அவரின் மூத்த மகன் தனுஷ் தான்.
நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு muscular dystrophy எனப்படும் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது ஒருவித மரபணு குறைபாடு ஆகும். இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டால் தசைகள் படிப்படியாக வலுவிழந்து உடல் இயக்கங்களும் பாதிக்கப்படும். அந்த வகையில் தனுஷுக்கும் 10 வயதுக்கு மேல் நடக்க முடியாமல் போனது. இதையடுத்து இந்த நோய் பாதிப்புக்கு அமெரிக்காவில் தான் உயர்தர சிகிச்சை உள்ளதால், தன் மகனுக்காக குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் நெப்போலியன். அதுமட்டுமின்றி தன் மகனை போல் தசைச் சிதைவு நோயால் அவதிப்படும் ஏழை எளிய குழந்தைகள் இலவசமாக சிகிச்சை பெற மயோபதி என்கிற மருத்துவமனையையும் தமிழ்நாட்டில் கட்டி இருக்கிறார் நெப்போலியன்.
நெப்போலியன் மகனுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பது யூடியூபர் இர்ஃபான் மூலம் தான் வெளியுலகுக்கு தெரிந்தது. இர்ஃபானின் தீவிர ரசிகராம் தனுஷ். ஒருமுறை இர்ஃபான் தனுஷை பார்க்க அமெரிக்கா சென்றபோது தான் தன்னுடைய மகனுக்கு உள்ள பிரச்சனைகள் பற்றி கூறி இருந்தார் நெப்போலியன். அதுமட்டுமின்றி தன்னுடைய மகனுக்காக வீடு முதல் கார் வரை அனைத்தையும் கஸ்டமைஸ் செய்து அழகாக கட்டி வைத்துள்ளார். அவரின் இந்த செயலை பார்த்த ரசிகர்கள், இவர் தான் உலகின் சிறந்த தந்தை என்றெல்லாம் புகழ்ந்து வந்தனர்.
இதனிடையே மகனுக்கு திருமணம் செய்து பார்க்க ஆசைப்பட்ட நெப்போலியன், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தன்னுடைய மகன் தனுஷின் திருமணத்தை ஜப்பானில் கோலாகலமாக நடத்தினார். அந்த திருமணத்தில் கலந்துகொள்ள கோலிவுட் பிரபலங்களும் ஏராளமானோர் ஜப்பானுக்கு சென்றிருந்தனர். தன் மகன் தனுஷை விமானத்தில் அழைத்து செல்ல முடியாது என்பதால் அவரை அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு கப்பலிலேயே அழைத்து சென்றார் நெப்போலியன். இதற்காக அவர் குடும்பத்துடன் 3 மாதங்கள் பயணம் செய்து ஜப்பான் சென்றார். அங்கு திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்கிற பெண்ணுடன் தனுஷுக்கு திருமணம் நடைபெற்றது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் நெப்போலியன், அதில் தன் மகன் தனுஷை பார்க்க வரும் பிரபலங்களை வீடியோ எடுத்து பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் நேற்று, அமெரிக்காவில் தன்னுடைய நண்பர் இல்லத் திருமண விழாவுக்காக சென்றிருந்த சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், நெப்போலியன் வீட்டுக்கு சென்று தனுஷை சந்தித்து உள்ளார். அப்போது உங்களின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறிய தனுஷ், உங்களின் சமையலை சாப்பிடவும் ஆவலோடு இருப்பதாக கூறினார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், இன்று மற்றொரு வீடியோவை பதிவிட்டுள்ளார் நெப்போலியன், அமெரிக்காவில் நடைபெற்ற FeTNA நிகழ்ச்சியில் கலந்து கொள்தற்காக வருகைதந்த பரிதாபங்கள் என்ற நிகழ்ச்சியின் கதாநாயகர்கள், கோபி & சுதாகர் எங்கள் மூத்த மகன் தனுஷுக்கு மிகவும் பிடித்தவர்கள் என்பதால் எங்கள் வீட்டிற்க்கு அழைத்திருதந்தேன். எனது அழைப்பை ஏற்று எங்கள் வீட்டிற்க்கு வருதை தந்து தனுஷுக்கு மகிழ்ச்சியையும், எங்களுக்கு மன நிறைவையும் தந்தார்கள் என்று நெப்போலியன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். உங்களின் வீடியோக்களை மிஸ் பண்ணாமல் பார்ப்பேன் என்று கோபி சுதாகரிடம் தனுஷ் தெரிவித்தார்.