
தமிழ் சினிமாவில் தோல்வியே சந்திக்காத இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். மாநகரம் படம் மூலம் அறிமுகமான இவர், அடுத்தடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என பிரம்மாண்ட வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக உருவெடுத்திருக்கிறார். இவரின் கால்ஷீட்டுக்காக முன்னணி நடிகர்கள் பலர் க்யூவில் நிற்கிறார்கள். அந்த அளவுக்கு பிசியான இயக்குனராக வலம் வருகிறார் லோகேஷ். இவர் இயக்கத்தில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்திற்காக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளார் லோகேஷ். இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், சமீபத்திய பேட்டியில் கூலி படம் பற்றிய அடுக்கடுக்கான அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளார் லோகி.
ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் டிரெய்லரே வெளியிடப்படாமல் ரிலீஸ் ஆக உள்ளதாக செய்திகள் உலா வந்தன. அது பற்றி லோகேஷிடமும் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கூலி பட டிரெய்லர் வருகிற ஆகஸ்ட் 2ந் தேதி ரிலீஸ் செய்யப்படும் என தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஹாலிவுட் ரிப்போர்டர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூலி திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்யுமா என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த லோகேஷ், இப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்யுமா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக கூறுகிறேன். 150 ரூபாய் கொடுத்து படம் பார்ப்பவர்களுக்கு இது ஒர்த் ஆன படமாக இருக்கும். ஆயிரம் கோடி வசூலித்தால் சந்தோஷம் தான். தயாரிப்பாளர்களுக்கும் படக்குழுவுக்கும் அது நல்லது. ஆனால் 1000 கோடி வசூலிக்க வேண்டும் என்பதற்காக என்னால் கதை எழுத முடியாது. அது தானாக நடக்க வேண்டும் என தெரிவித்தார்.
பாக்ஸ் ஆபிஸ் வசூலை பற்றி கவலைப்பட வேண்டிய இரண்டு நபர்கள் என்றால் அது தயாரிப்பாளர் மற்றும் ஹீரோ தான். ஹீரோ தன்னுடைய மார்க்கெட்டிற்காக பாக்ஸ் ஆபிஸை நம்பி இருப்பார்கள். இதற்கு அடுத்து தான் இயக்குனர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூவருக்கும் முந்தைய படத்தின் நிலவரத்தை வைத்து தான் அடுத்த படத்திற்கு சம்பளம் கிடைக்கும். எனக்கு தற்போது கூலி படத்திற்காக 50 கோடி சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது என்றால் அது லியோ படத்தால் தான். அப்படம் 600 கோடி வசூலித்து பிரம்மாண்ட வெற்றி பெற்றதால் தான் அப்படத்திற்கு வாங்கிய சம்பளத்தை விட 3 மடங்கு அதிக சம்பளம் எனக்கு கூலிக்கு கிடைத்தது என லோகி கூறி உள்ளார்.
கூலி படம் ரிலீஸ் ஆனதும் உடனடியாக தான் கைதி 2 படத்தை தான் இயக்க உள்ளேன். இதுதவிர கமல்ஹாசன் உடன் விக்ரம் 2, சூர்யா உடன் ரோலெக்ஸ், இதுதவிர விஜய் அண்ணாவுக்காக லியோ 2 மற்றும் மாஸ்டர் 2 பண்ணும் ஐடியாவும் உள்ளது. ஆனால் அவர் அதற்குள் அரசியலுக்கு சென்றுவிட்டார். இதில் எந்தெந்த படங்கள் எப்போது நடக்கும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. அது நடிகர்களின் கால்ஷீட்டை பொருத்தது. அநேகமாக கைதி 2 படத்தை எடுத்து முடித்ததும் நான் அமீர்கான் படத்தில் பணியாற்றுவேன். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது என லோகேஷ் தெரிவித்தார்.