Madhavan Addresses about Hindi - Marathi Language Debate
இந்தி திணிப்பு எதிராக தமிழ்நாடு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அதேபோல் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்திலும் இந்தி மொழிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அங்கு மும்மொழிக் கொள்கையின் படி இந்தியை மூன்றாவது கட்டாய மொழியாக்க கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த முடிவில் இருந்து பின் வாங்கிய அரசு, அதை விருப்ப மொழியாக மாற்றி இருக்கிறது. இருப்பினும் இந்தி - மராத்தி இடையேயான மொழி சர்ச்சை என்பது மகாராஷ்டிராவில் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில், இந்த மொழி சர்ச்சை பற்றி நடிகர் மாதவன் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
24
மொழி சர்ச்சை பற்றி பேசிய மாதவன்
தனிப்பட்ட ரீதியாகவும் சரி, பல்வேறு மொழி படங்களில் நடிக்கும் போதும் சரி மொழி தனக்கு ஒருபோதும் சவாலானதாக இருந்ததே இல்லை. பல்வேறு மொழிகளையும், கலாச்சாரங்களையும் பற்றி அறிந்து கொள்வதால் அது தன் வாழ்க்கையை மேம்படுத்தி உள்ளதாக மாதவன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நான் தமிழ் பேசுவேன், இந்தி பேசுவேன், கோலாப்பூரில் படித்துள்ளேன். நான் மராத்தி மொழியும் கற்றுக் கொண்டேன். எனவே மொழி தொடர்பாக எனக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்பட்டதில்லை என மாதவன் கூறி உள்ளார். அவரின் இந்த பேச்சு வைரலாகி வருகிறது.
34
மாதவனின் திரைப்பயணம்
நடிகர் மாதவன், தமிழ் மற்றும் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். அவரை அலைபாயுதே படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகப்படுத்தினார் மணிரத்னம். அதன்பின்னர் கோலிவுட்டில் சாக்லேட் பாய் ஆக வலம் வந்த மாதவன், பின்னர் பாலிவுட்டில் பட வாய்ப்புகள் கிடைத்ததால் சில ஆண்டுகள் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்து வந்தார். இதையடுத்து சுதா கொங்கரா இயக்கிய இறுதிச் சுற்று திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார் மாதவன். அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் தொடர்ந்து படங்களில் நடிக்கத் தொடங்கினார் நடிகர் மாதவன்.
அவர் நடிப்பில் இந்த ஆண்டு தமிழில் டெஸ்ட் என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதுதவிர தற்போது ஆப் ஜெய்சா கொய் என்கிற இந்தி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அண்மையில் வெளியானது. அப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் ராஜமெளலி இயக்கத்தில் 1000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் மகேஷ் பாபு படத்தில் நடிகர் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த ரோலில் நடிக்க முதலில் விக்ரமை அணுகினர். அவர் நடிக்க மறுத்ததால் மாதவனுக்கு அந்த ரோல் கிடைத்துள்ளதாம்.