Sivakarthikeyan : மறைந்த நெல் ஜெயராமன் மகனுக்கு சிவகார்த்திகேயன் செய்த உதவி.! குவியும் வாழ்த்துக்கள்

Published : Jun 18, 2025, 02:06 PM IST

மறைந்த நெல் ஜெயராமனின் மகனுக்கு சிவகார்த்திகேயன் செய்துள்ள உதவி பாராட்டுகளை குவித்து வருகிறது.

PREV
17
Sivakarthikeyan Helped Nel Jayaraman Son

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ ஆகிய இரண்டு படங்களிலும் தீவிரமாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘அமரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மறைந்த விவசாயி நெல் ஜெயராமன் மகனுக்கு உதவிய சம்பவம் குறித்து இயக்குனர் ரா. சரவணன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது பலரையும் நெகிழ வைத்துள்ளது.

27
சிவகார்த்திகேயன் குறித்து பதிவிட்ட இயக்குனர்

‘கத்துக்குட்டி’, ‘உடன்பிறப்பே’, ‘நந்தன்’ போன்ற படங்களை இயக்கியதன் மூலமாக தமிழ் திரை ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இயக்குனர் இரா. சரவணன். இவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “அண்ணன் நெல் ஜெயராமன் மறைந்தபோது, அவர் மகனின் படிப்புச் செலவை ஏற்பதாகச் சொன்னார் தம்பி சிவகார்த்திகேயன். இப்படிச் சொல்கிறவர்கள் அப்போதைக்கு உதவுவார்கள். அடுத்தடுத்த வருடங்களில் நாம் நினைவூட்டினால், கொஞ்சம் சலிப்பு காட்டிச் செய்வார்கள். பின்னர் மறந்தே போவார்கள். ஆனால், தம்பி சிவகார்த்திகேயன் சொன்ன சொல் தவறாமல் கடந்த 7 வருடங்களாக நெல் ஜெயராமன் மகன் சீனிவாசனின் படிப்பு செலவைக் கட்டி வருகிறார். பணம் கட்டுவது மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் தேர்வு நேரத்தில் போன் செய்து விசாரிப்பார். அன்பும் அக்கறையுமாகப் பேசுவார்.

37
7 ஆண்டுகளாக வாக்கை நிறைவேற்றும் சிவகார்த்திகேயன்

இந்த வருடம் சீனிவாசன், கல்லூரி படிப்பில் கால் வைக்கிறார். எந்தக் கல்லூரி, என்ன படிப்பு என்கிற விவரங்களை விசாரித்து, கோவை கற்பகம் கல்லூரியில் பேசி அவரைச் சேர்த்திருக்கிறார் சிவா. நெல் ஜெயராமன் உயிரோடு இருந்திருந்தால் மகன் சீனிவாசனின் படிப்புக்கு என்னவெல்லாம் செய்திருப்பாரோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் அக்கறை காட்டுகிறார் சிவகார்த்திகேயன். அப்பலோ மருத்துவமனையில் மருத்துவர்கள் கைவிரித்த நிலையில், பாண்டிச்சேரி படப்பிடிப்பில் இருந்து ஓடிவந்து, நெல் ஜெயராமனின் கைகளைப் பற்றிக்கொண்டு, ‘நானிருக்கிறேன் அண்ணன்’ என சிவகார்த்திகேயன் நம்பிக்கை சொன்ன காட்சி, அப்படியே நெஞ்சுக்குள் விரிகிறது. நம்பிக்கையாகவே நின்று காட்டும் தம்பிக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு பலரையும் நெகிழ வைத்துள்ளது. சிவகார்த்திகேயனைப் பாராட்டி பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

47
யார் இந்த நெல் ஜெயராமன்?

நெல் ஜெயராமன் “பாரம்பரிய நெல் விதைகளின் பாதுகாவலர்” என போற்றப்படுபவர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு கிராமத்தில் பிறந்த அவர், “நெல் ஜெயராமன்” என்று அன்போடு அழைக்கப்படுகிறார். அழிவின் விளிம்பில் இருந்த தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும், இயற்கை விவசாயம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட மகத்தான தியாகியாவார். 2003 ஆம் ஆண்டு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ‘நஞ்சு இல்லாத உணவு’ குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கிய போது அவரது பயணத்தில் ஜெயராமனும் சீடராக இணைத்துக் கொண்டார். பாரம்பரிய நெல் ரகங்களின் முக்கியத்துவத்தையும், அதை பாதுகாப்பதன் அவசியத்தையும் ஜெயராமன் உணர்ந்தார்.

57
174 நெல் ரகங்களை மீட்டெடுத்த மாமனிதர்

தனது கடுமையான உழைப்பாலும் விடாமுயற்சியாலும் 174-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தார். இலுப்பை பூ சம்பா, காட்டுயானம், கருப்பு கவுனி, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட மருத்துவ குணங்கள் கொண்ட அரிய நெல் வகைகளை மீட்டெடுத்ததில் இவரின் பங்கு அளப்பரியது. 2006 ஆம் ஆண்டு முதல் ‘நெல் திருவிழா’ என்கிற பிரம்மாண்ட நிகழ்வை நடத்தினார். ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த நிகழ்வில் பங்கேற்று நெல் ரகங்களை பற்றியத் தகவல்களை தெரிந்து கொண்டு, தங்களுக்குத் தேவையான நெல் விதைகளை இலவசமாக பெற்றுச் சென்றனர். ஒரு விவசாயிக்கு இரண்டு கிலோ பாரம்பரிய நெல் விதைகளை கொடுத்து, அடுத்த ஆண்டு அதை இரு மடமாக பெற்று பிற விவசாயிகளுக்கு வழங்கி வந்தார். இதன் மூலம் விதைகள் தமிழகம் எங்கும் பரவியது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற பல மாநிலங்களிலும் தமிழகத்தின் பாரம்பரிய நெல் விவசாயம் பரவியது.

67
தோல் புற்றுநோயால் பாதித்த ஜெயராமன்

விதை பாதுகாவலராக மட்டுமல்லாமல் இயற்கை விவசாயத்தையும் தீவிரமாக ஆதரித்து வந்தார். இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் மனிதர்களுக்கு எவ்வாறு தீமை விளைவிக்கிறது என்பதை எடுத்துரைத்து இயற்கை வழி சாகுபடியின் நன்மைகளை கூறி வந்தார். தனது அயராத முயற்சியின் மூலமாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை இயற்கை விவசாயம் பக்கம் திருப்பினார். அவரின் இந்த சேவையைப் பாராட்டி மத்திய அரசு 2015 ஆம் ஆண்டு ‘சிறந்த மரபணு பாதுகாவலர்’ என்ற விருதை வழங்கியது. மேலும் தமிழக அரசின் ‘சிறந்த இயற்கை விவசாயி’ என்ற விருதையும் பெற்றார் .நெல்லதிகாரம், நெல்லுக்கிறைத்த தண்ணீர், மாமருந்தாகும் பாரம்பரிய நெல் உள்ளிட்ட நூல்களையும் அவர் எழுதியுள்ளார். தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் டிசம்பர் 6, 2018 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.

77
பாரட்டுக்களைப் பெறும் சிவகார்த்திகேயன்

தனிமனிதராக நின்று ஒட்டுமொத்த சமூகத்திற்கு மிகப்பெரிய சேவையை செய்த அவரது வாழ்வும், விவசாயப் பணியும் போற்றுதலுக்குரியது. அந்த மாமனிதரின் மகனின் கல்விச்செலவை ஏழு ஆண்டுகளாக நிறைவேற்றி வரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுக்களும், வணக்கங்களும். மறைந்த நெல் ஜெயராமனுக்காக சிவகார்த்திகேயன் செய்து வரும் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories