
சினிமா பிரபலங்களுக்கு படங்களில் நடிப்பதன் மூலம் கோடி கோடியாய் வருமானம் வரும், அவற்றை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து அதன் மூலமாகவும் சம்பாதித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் அதிகம் முதலீடு செய்துள்ளது ஹோட்டல் பிசினஸில் தான். அந்த வகையில் சென்னையில் சொந்தமாக ஹோட்டல் நடத்தி வரும் தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றியும் அவை எங்கு உள்ளன என்பது பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கோலிவுட்டில் ஹேண்ட்சம் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா. இவர் சினிமாவில் பிசியாக நடித்து வருவது மட்டுமின்றி படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கி பல படங்களை தயாரித்தும் வருகிறார். அண்மையில் ஆர்யா தயாரிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் வெளியானது. சந்தானம் நாயகனாக நடித்த இப்படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் பெரியளவில் சோபிக்கவில்லை.
நடிகர் ஆர்யா சினிமாவை தாண்டி சைடு பிசினஸாக ஹோட்டல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக சென்னை வேளச்சேரி மற்றும் அண்ணாநகரில் ஸீ ஷெல் என்கிற ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்த ஹோட்டல் மூலமும் மாதந்தோறும் கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார் ஆர்யா. அவரின் மனைவி சாயிஷா தான் இந்த ஹோட்டல்களை எல்லாம் நிர்வகித்து வருகிறார்.
நடிகர் சூரி சினிமாவில் காமெடியனாக நடிக்கத் தொடங்கி தற்போது முழு நேர ஹீரோவாக மாறிவிட்டார். வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் சூரி ஹீரோவாக நடித்த பின்னர் அவருக்கு தொடர்ந்து ஹீரோவாக நடிக்க அதிகளவில் வாய்ப்புகள் வருகிறது. அதை ஏற்று நடிக்கும் அவர் அடுத்தடுத்து கருடன், கொட்டுக்காளி, மாமன் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவின் சென்சேஷன் ஹீரோவாக உருவெடுத்துவிட்டார். தற்போது கைவசம் அரை டஜன் படங்களுடன் பிசியாக நடித்து வருகிறார்.
இவ்வளவு பிசியான ஹீரோவாக வலம் வரும் சூரி, சினிமாவை தாண்டி ஹோட்டல் பிசினஸிலும் காலடி எடுத்து வைத்து அதிலும் வெற்றிநடை போட்டு வருகிறார். சூரிக்கு சொந்தமாக மதுரையின் பல்வேறு பகுதிகளில் அம்மன் மெஸ் இயங்கி வருகிறது. இந்த ஹோட்டல் பிசினஸை சூரியின் குடும்பத்தினர் தான் கவனித்து வருகிறார்கள். மதுரையில் பாப்புலரான உணவகங்களில் சூரியின் அம்மன் உணவகமும் ஒன்று.
தமிழ் சினிமாவில் 1990-களில் முன்னணி நடிகையாக கோலோச்சி வந்தவர் சிம்ரன். 1995 முதல் 2005 வரை 10 ஆண்டுகளுக்கு செம பிசியான நடிகையாக வலம் வந்தார் சிம்ரன். அதன் பின்னர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன அவர், தற்போது தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருக்கிறார். அண்மையில் கூட டூரிஸ்ட் ஃபேமிலி என்கிற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றிருந்தார் சிம்ரன்.
இப்படி சினிமாவில் சக்சஸ்புல் நாயகியாக வலம் வந்த சிம்ரனும் சென்னையில் சொந்தமாக ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் நடத்தி வரும் காட்கே பை சிம்ரன் என்கிற உணவகம் சோழிங்கநல்லூரில் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் உணவுகள் காஸ்ட்லியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
கோலிவுட்டில் வலம் வரும் வாரிசு நடிகர்களில் ஜீவாவும் ஒருவர். இவரது தந்தை ஆர்.பி.செளத்ரி சூப்பர் குட் பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தை தற்போது ஜீவா தான் நிர்வகித்து வருகிறார். நடிகர் ஜீவா பல ஆண்டுகளாக வெற்றிக்காக ஏங்கி வந்த நிலையில், கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த பிளாக் என்கிற திரைப்படம் அவருக்கு ஆறுதல் வெற்றியை பெற்றுத் தந்தது.
நடிகர் ஜீவா சினிமாவை தாண்டி ஹோட்டல் பிசினஸிலும் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு சொந்தமாக சென்னையில் ஒன் எம்பி என்கிற ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டல் சென்னை தி நகரில் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலை ஜீவாவின் மனைவி தான் நிர்வகித்து வருகிறார்.
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்குள் வந்து செம பிசியான நாயகியாக வலம் வந்தவர் தான் பிரியா பவானி சங்கர். கடந்த ஆண்டு வரை டஜன் கணக்கிலான படங்களை கைவசம் வைத்திருந்தார் பிரியா. ஆனால் போகப்போக அவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக பிளாப் ஆனதால் தற்போது அதிகளவிலான படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இந்த ஆண்டு அவர் நடிப்பில் இதுவரை ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. கடைசியாக அவர் நடித்த டிமாண்டி காலனி 2 திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
சினிமாவில் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கும் பிரியா பவானி சங்கர், அந்த பணத்தை ஓட்டல் பிசினஸில் முதலீடு செய்துள்ளார். அவர் லயம்ஸ் டின்னர் என்கிற உணவகத்தை நடத்தி வருகிறார். சென்னை மாம்பாக்கத்தில் ரூஃப் டாப் ஹோட்டலாக இது இயங்கி வருகிறது. விரைவில் அடுத்தடுத்த கிளைகளையும் திறக்கும் ஐடியாவில் இருக்கிறாராம் பிரியா.
இதுதவிர நடிகர் ஆர்.கே சுரேஷும் சொந்தமாக ஹோட்டல் நடத்தி வருகிறார். அதேபோல் இயக்குனர் அமீரும் சொந்தமாக கஃபே ஒன்றை சென்னையில் வைத்திருக்கிறார். மேலும் நடிகர் கருணாஸுக்கு சொந்தமாகவும் ஹோட்டல்கள் உள்ளன. அந்த ஹோட்டல்களை அவரது மனைவி கிரேஸ் தான் நிர்வகித்து வருகிறாராம்.