
நடிகர் ஆர்யா, கேரளாவில் பிறந்திருந்தாலும் அவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தது சென்னையில் தான். இவர் கடந்த 2005-ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான அறிந்தும் அறியாமலும் படம் மூலம் ஹீரோவாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். அப்படத்திற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது. இதையடுத்து ஜீவா இயக்கிய உள்ளம் கேட்குமே, கலாபக் காதலன், பட்டியல் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்தார் ஆர்யா. அவரின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் நான் கடவுள்.
நான் கடவுள் படத்துக்கு முன்னர் வரை சாக்லேட் பாய் ஆக இருந்து வந்த ஆர்யா, தன்னுள் இருக்கும் நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்திய படம் நான் கடவுள். இப்படத்தை பாலா இயக்கினார். இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. தொடர்ந்து மதராசப்பட்டினம், அவன் இவன் போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தாலும், இடையிடையே பாஸ் என்கிற பாஸ்கரன், வேட்டை, சேட்டை, ராஜா ராணி போன்ற கமர்ஷியல் படங்களிலும் நடித்து வந்தார் ஆர்யா. இவருக்கு திரையுலகில் நட்பு வட்டாரமும் பெரிது, அதனால் தன் நண்பர்களுக்காக ஒரு கல் ஒரு கண்ணாடி, ஜீவா, ரோமியோ ஜூலியட், இன்று நேற்று நாளை, மதகஜராஜா போன்ற படங்களில் கேமியோ ரோலிலும் நடித்திருந்தார் ஆர்யா.
நடிகர் ஆர்யா நடித்து கடைசியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் என்றால் அது சார்பட்டா பரம்பரை தான். ஆனால் இப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை. நேரடியாக ஓடிடியில் வெளியானது. அதன்பின் எனிமி, கேப்டன், காதர் பாட்ஷா, சைந்தவ், என அவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் படுதோல்வியை சந்தித்தன. இதனால் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் ஆர்யா. அவர் நடிப்பில் தற்போது மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் உருவாகி வருகிறது. இதுதவிர சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க தயாராகி வருகிறார். இப்படங்கள் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாலியான நடிகராக இருக்கும் ஆர்யா அவ்வப்போது சர்சைகளிலும் சிக்கியது உண்டு. அதில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அவர் தொகுத்து வழங்கிய ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்கிற ரியாலிட்டி ஷோ தான். அதில் ஆர்யாவுக்கு வரன் பார்ப்பதாக கூறி அவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படும் 16 பெண்களுக்கு இடையே பல்வேறு போட்டிகள் வைக்கப்பட்டது. அதில் வெற்றி பெறுபவரை ஆர்யா திருமணம் செய்து கொள்வார் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது. ஆனால் இறுதியில் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. அதிலும் அதில் ஆர்யாவை உருகி உருகி காதலித்த நடிகை அபர்ணதி பாதியில் எலிமினேட் ஆனதால் மனமுடைந்து போனார்.
நடிகர் ஆர்யா, கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் டெடி, காப்பான், கஜினிகாந்த் போன்ற படங்களில் நடித்துள்ளனர். படத்தில் நடித்தபோது காதல் ஏற்பட்டதால் சாயிஷாவை கரம்பிடித்தார் ஆர்யா. இந்த ஜோடிக்கு கடந்த 2021-ம் ஆண்டு பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. ஆர்யாவை திருமணம் செய்யும் முன் சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வந்த சாயிஷா, திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டே விலகிவிட்டார்.
நடிகர் ஆர்யா நடிகராக மட்டுமின்றி பிசினஸிலும் கொடிகட்டிப்பறக்கிறார். இவர் சொந்தமாக ஸீ ஷெல் என்கிற ஹோட்டலையும் நடத்தி வருகிறார். சென்னையில் மட்டும் அண்ணாநகர், மற்றும் வேளச்சேரியில் இந்த ஸீ ஷெல் ஹோட்டல் இயங்கி வருகிறது. இதுதவிர தி ஷோ பீப்புள் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் ஆர்யா. அந்நிறுவனம் மூலம் அமரகாவியம், ஜீவா, கேப்டன், டிடி நெக்ஸ்ட் லெவல் போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார் ஆர்யா.
நடிகர் ஆர்யாவுக்கு பெரியளவில் ஹிட் படங்கள் இல்லாததால் அவர் கம்மியான சம்பளமே வாங்கி வருகிறார். அவருக்கு தற்போது ஒரு படத்துக்கு ரூ.10 முதல் 15 கோடி வரை மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறதாம். அவருக்கு பின் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் தற்போது ஒரு படத்துக்கு ரூ.50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகின்றனர். ஆனால் ஆர்யாவுக்கு பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகள் பெரியளவில் இல்லாததால் அவரது சம்பளமும் அதிகரிக்கவில்லை.
சினிமா மற்றும் பிசினஸ் என இரண்டிலும் கல்லாகட்டி வரும் நடிகர் ஆர்யா பல கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கிறார். இவரது மாத வருமானம் மட்டுமே 2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் அவரது சொத்து மதிப்பு ரூ.90 கோடி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் நடிகர் ஆர்யா சென்னையில் நடத்தி வரும் ஸீ ஷெல் உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். வரி ஏய்ப்பு ஏதாவது நடந்துள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தி வருகிறார்கள். பிரபல நடிகரின் ஓட்டலில் ஐடி ரெய்டு நடைபெற்று வருவது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.