
நடிகை கீர்த்தி பாண்டியன் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் மற்றும் விஜயா பாண்டியன் தம்பதியரின் மூன்றாவது மகளாவார். இவருக்கு கிரானா பாண்டியன் மற்றும் கவிதா பாண்டியன் என்கிற இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர். நடிகை ரம்யா பாண்டியன் இவரது பெரியப்பா மகளாவார். பள்ளிப்படிப்பை முடித்த கையோடு தனது தந்தையைப் போலவே திரை திரைக்குள் வர முடிவெடுத்தார் கீர்த்தி பாண்டியன். 2019 ஆம் ஆண்டில் வெளியான ‘தும்பா’ திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவரது முதல் படமே குடும்பங்களை கவரும் விதமாக அமைந்திருந்தது. மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஹெலன்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அன்பிற்கினியாள்’ படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவரது தந்தை அருண்பாண்டியனும் நடித்திருந்தார்.
சிறிய இடைவெளிக்குப் பின்னர் அவருக்கு ‘ப்ளூ ஸ்டார்’ என்னும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்திருந்தார். படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அசோக் செல்வனுடன் கீர்த்தி பாண்டியனுக்கு காதல் ஏற்பட்டது. எனவே அவரையே திருமணம் செய்து கொண்டார். தற்போது மீண்டும் தனது தந்தை அருண்பாண்டியனுடன் இணைந்து ஹாரர் திரில்லர் படமான அஃகேனம் படத்தில் நடித்து முடித்துள்ளார். அருண்பாண்டியனின் மகளாக இருந்த போதிலும் அவருக்கு திரைப்பயணம் எளிதாக அமையவில்லை. அவரது உடல் தோற்றம், நிறம் குறித்து எழுந்த விமர்சனங்கள், வாய்ப்புகள் மறுக்கப்படுவது என பல சவால்களை அவர் கடந்து நடிகையாக உயர்ந்துள்ளார். அனைத்து தடைகளையும் தாண்டி தனது தன்னம்பிக்கையாலும், திறமையாலும் தமிழ் திரையுலகில் தனக்கான இடத்தை உருவாக்கி வைத்துள்ளார். நடிகையாக மட்டுமல்லாமல் அவர் இயற்கை விவசாயத்திலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் கீர்த்தி பாண்டியன் வீட்டில் பொழுது போகாமல் இருந்துள்ளார். அப்போது அவருக்கு விவசாயம் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் திருநெல்வேலியில் உள்ள சொந்த ஊருக்கு சென்ற அவர், அங்கு குடும்ப நிலத்தில் விவசாயம் செய்யத் தொடங்கினார். வெறும் பெயருக்காக விவசாயம் செய்யாமல், முழு ஈடுபாட்டுடன் விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினார். விவசாய நுணுக்கங்களை கற்றுக் கொண்டு விவசாயத்தில் ஈடுபடுத்த தொடங்கியுள்ளார். விவசாயம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு முதலில் டிராக்டர் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும். எனவே கீர்த்தி முதலில் டிராக்டர் ஓட்டப் பழகினார். சுமார் ஒரு மாத காலமாக தினமும் காலை முதல் மாலை வரை டிராக்டர் ஓட்டி நிலத்தை உழுது இருக்கிறார். டிராக்டர் ஓட்டி நிலத்தை பயன்படுத்தியது தனக்கு உற்சாகமான அனுபவமாக இருந்ததாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
நிலத்தை உழுத போது வெவ்வேறு வகையான மண்கள் இருப்பதை கவனித்துள்ளார். கருப்பு, சிகப்பு, பழுப்பு என வித்தியாசமான மண்கள் இருப்பதை கண்ட அவர் அதற்கு ஏற்ற வகையில் பயிர்களை பயிரிடுவது குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார். எந்த பருவத்தில் எந்த பயிரை நட்டால் விளைச்சல் கிடைக்கும் போன்ற தகவல்களை சேகரித்துள்ளார். மண் வகைகளுக்கு ஏற்ற பயிர்களையும் பயிரிட்டு அதற்கு ஏற்ற சாகுபடியில் ஈடுபட்டுள்ளார். தினமும் 5:30 மணிக்கு எழுந்து நிலத்திற்கு சென்று நீர் பாய்ச்சுவது, களை எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளார். மத்திய உணவிற்கு சிறிதளவு மட்டுமே இடைவேளை எடுத்துக் கொண்டு மாலை வரை நிலத்தில் பணிபுரிந்துள்ளார். தான் விவசாயம் செய்தபோது நிலத்தில் பறவைகள், மீன்கொத்திகள் ஆகியவை புழுக்களைப் பிடிக்க வரும் காட்சிகள் மிக அழகாக இருந்ததாகவும், அது தனக்கு இயற்கையுடன் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்தியதாகவும் கீர்த்தி பாண்டியன் கூறியுள்ளார்.
விவசாயம் என்பது ஒருமுறை கற்றுக் கொண்டால் போதாது. அது ஒரு தொடர்ச்சியான கற்றல் செயல்முறை என்பதை கீர்த்தி உணர்ந்தார். இதன் காரணமாக அவர் விவசாய தொழில்நுட்பங்கள், விவசாயத்தில் பயன்படுத்தப்படும் நடைமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியுள்ளார். எதிர்காலத்தில் சினிமா மற்றும் விவசாயம் இரண்டிற்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தி இரண்டிலும் ஈடுபட விரும்புவதாக அவர் கூறியுள்ளார். நகர்ப்புற வாழ்க்கையில் வாழ்ந்த ஒரு இளம் நடிகை, விவசாயத்தில் ஆர்வம் காட்டி அதனை நடைமுறைப்படுத்தியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. விவசாயம் மட்டுமல்லாமல் கால்நடைகள் வளர்ப்பது, கால்நடைகள் மேய்ப்பது, ஆடு மாடு, கோழி, குதிரை வளர்ப்பது என்று கீர்த்தி முழு விவசாயியாகவே மாறி இருக்கிறார்.
விவசாயம் என்பது இன்றியமையாதது. விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் உணர்த்தும் விதமாக கீர்த்தி பாண்டியனின் செயல்பாடுகள் அமைந்துள்ளது. வெறும் நடிகையாக மட்டுமல்லாமல், நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு தனது பங்களிப்பை செலுத்தி முன் மாதிரியாக கீர்த்தி பாண்டியன் திகழ்ந்து வருகிறார். கலைப்பயணத்துடன் நின்று விடாமல் விவசாயத்திலும் தனது பங்களிப்பை அவர் தொடர்வார் என எதிர்பார்க்கலாம். அவரின் இந்த செயல்முறை இன்றைய காலை இளைஞர்கள் பலருக்கும் உத்வேகமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.