சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ரிலீஸ் ஆன திரைப்படம் அண்ணாத்த. இப்படம் கடந்த 2021-ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. சிறுத்தை சிவா இயக்கிய இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ள ரஜினி, நெல்சன் உடன் கூட்டணி அமைத்துள்ளார். அவர்கள் கூட்டணியில் தற்போது ஜெயிலர் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் முழுவதுமாக படமாக்கி முடிக்கப்பட்டுவிட்டது. இதர நடிகர்களின் காட்சிகள் தான் எஞ்சியுள்ளது. அதுவும் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது. இதையடுத்து பின்னணி பணிகளை மேற்கொள்ள உள்ளனர். சமீபத்தில் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி இருந்தது. அதன்படி இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தற்போது ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. இப்படத்தை ஆகஸ்ட் மாதத்தில் இருந்து செப்டம்பருக்கு தள்ளிவைத்து உள்ளனர். செப்டம்பர் மாதம் விநாயகர் சதூர்த்தி பண்டிகையை ஒட்டி ஜெயிலர் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளார்களாம். முன்னதாக ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆன படம் பாபா. அப்படம் படுதோல்வி அடைந்ததால், ஆகஸ்ட் மாத ரஜினிக்கு செட் ஆகாது என முடிவெடுத்து செப்டம்பருக்கு தள்ளிவைத்துள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.
இதையும் படியுங்கள்... 40 வயசுல யூத் ஐகான் விருது... சத்தியமா இத நான் எதிர்பார்க்கவே இல்லை - தனுஷ் ஓபன் டாக்