
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கடைசியாக கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் 'வேட்டையன்'. இந்த படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ ஞானவேல் இயக்கியிருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இந்த திரைப்படம், எதிர்பார்த்த அளவுக்கு வசூலையும்... விமர்சனத்தையும்... பெறாதது இந்த படத்தின் தோல்விக்கு வழி வகுத்தது.
வசூல் ரீதியாக போட்ட பணத்தை எடுத்தாலும், ரஜினிகாந்துக்கு 'ஜெயிலர்' திரைப்படம் கொடுத்த வெற்றியை இந்த படம் தரவில்லை. இந்த படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் 'கூலி' இந்த படத்தில் தேவா என்கிற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். மேலும் இவருடன் சேர்ந்து நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகீர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், ரெபேக்கா மோனிகா ஜான், ஜூனியர் எம்ஜிஆர், அமீர்கான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். மேலும் கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக 'கூலி' மாறி உள்ள நிலையில், அவ்வபோது இந்த படம் குறித்த சில தகவல்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே கூலி படத்தை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய பட குழு முடிவு செய்திருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ரஜினிகாந்தின் சென்டிமென்ட் படி இந்த படத்தை ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆன ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்றே ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனமும் முடிவு செய்துள்ளது. 'ஜெயிலர்' திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்த நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரித்திருந்தது. இப்படம் உலக அளவில் சுமார் ரூ.650 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து, தன்னுடைய ஹிஸ்டாரிக் வெற்றியை பதிவு செய்தது.
'கூலி' திரைப்படத்தை முடித்த பின்னர், நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கான பணிகள் ஏற்கனவே துவங்கி விட்டது. சமீபத்தில் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தின் டீசரை பட குழு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் என்கிற ஓய்வு பெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். மேலும் இவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க, வசந்த் ரவி, மிர்னா மேனன், யோகி பாபு, சுனில், விநாயகன், ரித்விக், மாரிமுத்து, VTV கணேஷ், உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர். முந்தைய பாகத்தில் இடம் பெற்ற நடிகர்கள் இரண்டாவது பாகத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்பட்டாலும், இன்னும் சில பிரபலங்கள் புதிதாக இப்படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.