
கோடிகளில் புரளும் பிசினஸ் என்றால் அது சினிமா தான். ஒரு படம் உருவாகி அதில் பலரின் உழைப்பு நிறைந்திருக்கிறது. இத்தனை உழைப்பையும் கடந்து படங்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ரிலீஸ் ஆனால் அந்த கதை என்னுடையது என யாரேனும் புகார் கொடுப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அப்படி கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய தமிழ் படங்களின் பட்டியலை விரிவாக பார்க்கலாம்.
ராஜா ராணி
அட்லீ இயக்கிய முதல் படமான ராஜா ராணி, பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படம் மணிரத்னம் இயக்கிய மெளன ராகம் படத்தின் கதையை காப்பியடித்து எடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
மெட்ராஸ்
பா.இரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்து ஹிட் ஆன திரைப்படம் மெட்ராஸ். இப்படம் தனது கறுப்பர் நகரம் படத்தின் காப்பி என்று இயக்குனர் கோபி நாயினார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மான்ஸ்டர்
எஸ்.ஜே சூர்யா ஹீரோவாக நடித்த படம் மான்ஸ்டர். இப்படத்தில் எலி செய்யும் அட்டகாசம் உள்ளிட்ட காட்சிகளை அப்படியே தன் கதையில் இருந்து திருடி இயக்குனர் நெல்சன் எடுத்துவிட்டதாக பத்திரிகையாளர் லதானந்த் குற்றம் சாட்டினார்.
கத்தி
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் கத்தி. இப்படத்தின் கதை தன்னுடையது என்றும் அதை திருடி ஏ.ஆர்.முருகதாஸ் படமாக்கியதாக கோபி நாயினார் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
சர்கார்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சர்க்கார் படமும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. விஜய் நடித்த இப்படம் செங்கோல் என தான் பதிவு செய்த கதையை மையமாக வைத்து உருவாகி இருப்பதாக வருண் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்தார். அதில் அவருக்கு வெற்றியும் கிடைத்தது.
96
விஜய் சேதுபதியின் கெரியரில் மிகப்பெரிய வெற்றியை ருசித்த படம் 96. இப்படத்தை பிரேம் குமார் இயக்கி இருந்தார். இது நீ நான் மழை இளையராஜா என தான் எழுதிய படத்தின் கதை என பாரதிராஜாவின் உதவி இயக்குனர் சுரேஷ் புகார் அளித்தார்.
கேப்டன் மில்லர்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் கேப்டன் மில்லர். இப்படம் தான் எழுதிய பட்டத்து யானை என்கிற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டு உள்ளதாக நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி குற்றம்சாட்டினார்.
இதையும் படியுங்கள்... பணத்தை பதுக்குகிறார்... அவர் ஒரு குப்பை - யோகிபாபுவை சரமாரியாக சாடி சவால்விட்ட வலைப்பேச்சு
எந்திரன்
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் எந்திரன். ஷங்கர் இயக்கிய இப்படம் தன்னுடைய கதையை திருடி எடுக்கப்பட்டதாக எழுத்தாளர் ஆரூர் தமிழ் நாடன் வழக்கு தொடர்ந்தார்.
வலிமை
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த படம் வலிமை. இப்படத்தின் கதை தான் தயாரித்த மெட்ரோ பட கதையை ஒத்து இருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்தார்.
மகாராஜா
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரூ.100 கோடி வசூல் அள்ளிய திரைப்படம் மகாராஜா. இது தான் தயாரித்த அத்தியாயம் ஒன்று என்கிற குறும்படத்தை திருடி எடுக்கப்பட்டுள்ளதாக மருதமுத்து என்பவர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
வாழை
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த வாழை திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டு வரும் நிலையில், அது தான் எழுதிய சிறுகதையை ஒத்து இருப்பதாக எழுத்தாளர் சோ தர்மன் கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... காப்பியடித்தாரா மாரி செல்வராஜ்? வாழை படத்தின் கதை என்னுடையது - புயலை கிளப்பிய எழுத்தாளர்