
ராஷ்மிகா முதன் முதலில் திரைப்பயணம் என்பது பல சவால்கள் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாகவே உள்ளது. ஆன்லைனில் ட்ரோல் செய்யப்பட்டது தொடங்கி இன்று பான் இந்தியா நடிகையாக மாறி உள்ளார் ராஷ்மிகா. அவரின் திரைப்பயணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
2016 ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ராஷ்மிகா. தனது நடிப்பின் மூலம் முதல் படத்திலேயே ரசிகர்களை ஈர்த்தார். அவர் ஏற்று நடித்திருந்த சான்வி ஜோசப் கதாப்பாத்திரத்திற்கு நல்ல பெயர் கிடைத்தது. இதனால் அவர் ஓவர் நைட்டில் ஸ்டாராக மாறினார். ரசிகர்கள் அவரை நேஷனல் க்ரஷ் என்று அழைக்கின்றனர்..
பெங்களூரில் உள்ள எம்.எஸ்.ராமையா கல்லூரியில் படிக்கும் போது, ராஷ்மிகா மந்தனா பல அழகுப் போட்டிகளில் பங்கேற்றார். இதன் மூலம் அவருக்கு மாடலிங்கில் வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அப்போது தான் அவர் ரிஷப் ஷெட்டி, ரக்ஷித் ஷெட்டியின் கண்களில் பட்டுள்ளார். இதை தொடர்ந்து தான் அவருக்கு கிரிக் பார்ட்டி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
புதுமுக நடிகையாக இருந்தாலும் முதல் படமே, அவரின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இதை தொடர்ந்து தெலுங்கு, கன்னடத்தில் அவரு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருடன் அஞ்சனி புத்ரா (2017) மற்றும் கணேஷ் சமக் (2017) ஆகிய படங்களில் நடித்தார். இந்த இரு படங்களுமே சூப்பர் ஹிட்டானது.
பின்னர் தெலுங்கில் அறிமுகமான ராஷ்மிகா தெலுங்கிலும் அவரின் படங்கள் ஹிட்டானது. சலோ (2018), கீதா கோவிந்தம் (2018) ஆகிய படங்கள் ராஷ்மிகாவும் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தன.
இதனிடையே 2017-ம் ஆண்டு கன்னட நடிகரும் தனது முதல் பட ஹீரோவுமான ரக்ஷித் ஷெட்டியுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்ததது.. இருப்பினும், 2018-ம் ஆண்டு இருவரும் பிரேக் அப் செய்து கொண்டனர்.
ஆனால் ராஷ்மிகாவின் இந்த முடிவு ஆன்லைனில் பின்னடைவுக்கு வழிவகுத்தது. சில கன்னட ரசிகர்கள் ஆன்லைனில் அவரை கடுமையாக விமர்சிக்கவும், ட்ரோல் செய்யவும் தொடங்கினர்.
கீத கோவிந்தம் படத்திற்கு பின் இரண்டாவது முறையாக டியர் காம்ரேட் (2019) படத்தில் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் சேர்ந்து நடித்தனர். இதனால் இருவரும் டேட்டிங் செய்வதாக வெளியான தகவல்களால் ராஷ்மிகா மீதான் ட்ரோல்கள் அதிகரிக்க தொடங்கியது.
கன்னடம், தெலுங்கி பல ஹிட் படங்களை கொடுத்த போதிலும், ராஷ்மிகா தனது நடிப்பு மற்றும் ஊடக தொடர்புகளால் விமர்சனத்திற்கு ஆளானார். ஆரம்பத்தில் கன்னட ரசிகர்கள் மட்டும் ட்ரோல் செய்து வந்த நிலையில், பின்னர் தெலுங்கு ரசிகர்களும் அவரை ட்ரோல் செய்ய தொடங்கினர்.
ராஷ்மிகா மந்தனாவின் கேரியரில் 2021-ம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டு.. போகரு (2021) என்ற கன்னட படத்தில் நடித்த பின்னர், ராஷ்மிகா கார்த்தியின் சுல்தான் (2021) படம் மூலம் தமிழில் அறிமுகமானார். படம் பாக்ஸ் ஆபிஸில் சுமாரான வெற்றியை பெற்றாலும் ராஷ்மிகாவுக்கு மீண்டும் தெலுங்கில் வாய்ப்பு கிடைத்தது.
அப்படி 2021-ம் ஆண்டு சுகுமாறன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்தார். அவரின் திரை வாழ்க்கையின் மிக முக்கியமான மைல்கற்களில் ஒன்றாக புஷ்பா மாறியது. அந்த படத்தில் ராஷ்மிகா நடித்திருந்த ஸ்ரீவல்லி கதாப்பாத்திரம் மிகவும் பிரபலமானது.
குறிப்பாக ஸ்ரீவள்ளி மற்றும் சாமி சாமி பாடல்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்தியா முழுவதும் பிரபலமானார் ராஷ்மிகால்.
துல்கர் சல்மான் மற்றும் மிருணால் தாக்கூர் நடிப்பில் வெளியாகி வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்ட சீதா ராமம் படத்தில் ராஷ்மிகா முக்கிய ரோலில் நடித்தார். தொடர்ந்து குட்பை (2022) என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
ராஷ்மிகாவின் பாலிவுட் அறிமுகம், அவரது தொழில் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் ஒன்றாகும், அவர் நடித்த படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும், சுமாரான வசூலையே பெற்றது. மேலும் அவர் பாலிவுட்டில் அவர் நடித்த படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
இதனிடையே மீண்டும் தனது சில வார்த்தைகளால் மீண்டும் விமர்சனங்களை எதிர்கொண்டார் ராஷ்மிகா. தென்னிந்திய சினிமாவைப் பற்றிய நேர்காணல்கள் மற்றும் விளம்பர நிகழ்வுகளின் போது அவர் தெரிவித்த கருத்துக்கள் விமர்சனத்திற்கு வழிவகுத்தன.
உதாரணமாக, தென்னிந்திய படங்களில் அதிகளவில் 'ஐட்டம்' பாடல்கள் இருப்பதாகவும், பாலிவுட்டில் அதிக காதல் பாடல்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். இதனால் கடுமையான ட்ரோல்களை ராஷ்மிகா எதிர்கொண்டார்.
விஜய்யின் ராஷ்மிகா இணைந்து நடித்த வாரிசு, ரன்பீர் கபூர் நடித்த இந்தி திரைப்படம் அனிமல் அவரின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் வெளியான வாரிசு படம், உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் செய்தது.
சந்தீப் வங்கா ரெட்டி இயக்கத்தில் 2023-ம் ஆண்டு வெளியான அனிமல் படம் ராஷ்மிகாவின் கேரியரில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இப்படம் வணிகரீதியாக வெற்றியடைந்தது, உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூ.920 கோடி வசூலித்தது, மேலும் அந்த ஆண்டின் மூன்றாவது அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படமாகும்.
இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புஷ்பா 2 படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. ப்ரீ ரிலீஸ் வியாபரத்திலே சாதனை படைத்துள்ள இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது பாகுபலி 2 மற்றும் டங்கல் போன்றவற்றை விஞ்சி அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படமாக மாறுமா என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது. 2024 -ல் புஷ்பா 2 ராஷ்மிகாவின் ஒரே படம் என்பதால், அவர் ஸ்ரீவல்லியாக மீண்டும் வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான புஷ்பா 2 பாடலுக்கு கிடைத்த வரவேற்பு, அல்லு அர்ஜுனுக்கும் ராஷ்மிகாவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரியை காண ரசிகர்கள் எவ்வளவு ஆவலுடன் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.
மராட்டிய மன்னர் சாம்பாஜியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட சாவா என்ற ஹிந்தி படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விக்கி கௌஷலுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14, அன்று வெளியாக உள்ளது.. தனுஷ், நாகார்ஜுனா நடிப்பில் உருவாகி வரும் குபேரா என்ற தமிழ் படத்தில் ராஷ்மிகாவும் நடிக்கிறார். இந்த படம் டிசம்பர் 2024 இன் பிற்பகுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் சிக்கந்தர் படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியப் படங்களில் ஒன்றாகும். மேலும், தினேஷ் விஜனின் மேடாக் சூப்பர்நேச்சுரல் யுனிவர்ஸ் (MSU) திரைப்படத்தில் ராஷ்மிகா நடித்து வருகிறார். இவை தவிர, இரண்டு தெலுங்கு மற்றும் தமிழ் படங்களும் அவர் கைவசம் உள்ளன.
எத்தனை விமர்சனங்கள், ட்ரோல்களை எதிர் கொண்டாலும் தனது படத்தின் வெற்றிகள் மூலம் அவற்றுக்கு பதிலடி கொடுத்து வந்தார் ராஷ்மிகா. இந்த நிலையில் புஷ்பா 2 படத்தின் மூலம் ராஷ்மிகா தனது நேஷனல் க்ரஷ் நிலையைப் பெறுவாரா அல்லது மீண்டும் ட்ரோல்களை எதிர்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.