தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஒன்று தீபாவளி. சினிமா ரசிகர்களுக்கும் இந்தப்பண்டிகை மிகவும் ஸ்பெஷலானது. ஏனெனில் தீபாவளிக்கு திரையரங்குகளில் ரிலீசாகும் படங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. பெரும்பாலும் தீபாவளி பண்டிகைக்கு அஜித், விஜய், ரஜினி, சூர்யா, கமல் போன்ற ஏதேனும் முன்னணி நடிகர்களின் படங்கள் ஒன்றாவது ரிலீசாகிவிடும்.
ஆனால் இந்த ஆண்டு தீபாவளி சற்று வித்தியாசமானதாகவே உள்ளது. ஏனென்றால் மேற்கண்ட நடிகர்களின் படங்கள் ஒன்றுகூட இந்த தீபாவளிக்கு ரிலீசாகவில்லை. அதற்கு பதிலாக கார்த்தி நடித்துள்ள சர்தார் படமும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படமும் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதற்கு முன் கார்த்தியின் கைதி படம் தீபாவளிக்கு ரிலீசாகி வெற்றி வாகை சூடியுள்ளது. ஆனால் சிவகார்த்திகேயனுக்கு பிரின்ஸ் தான் முதல் தீபாவளி ரிலீஸ் படமாகும். இதில் வெற்றிவாகை சூடியது யார் என்பதை தற்போது பார்க்கலாம்.
பிரின்ஸ்
தெலுங்கு பட இயக்குனரான அனுதீப் முதன்முறையாக சிவகார்த்திகேயனை வைத்து இயக்கி உள்ள படம் பிரின்ஸ். சிவகார்த்திகேயன் நடிப்பில் இதற்கு முன் வெளியான டாக்டர், டான் போன்ற படங்கள் சக்கைப்போடு போட்டதால் பிரின்ஸ் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இப்படம் விமர்சன ரீதியாக சற்று சறுக்கலை சந்தித்தாலும், பேமிலி ஆடியன்ஸ் ரசிக்கும் படி காமெடியாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வரவேற்பை பார்க்கும் போது டாக்டர், டான் பட வரிசையில் பிரின்ஸும் 100 கோடி கிளப்பில் இணைந்துவிடும் போல தெரிகிறது.
இதையும் படியுங்கள்... தீபாவளி ரேஸில் தட்டித்தூக்கினாரா சிவகார்த்திகேயன்?... ‘பிரின்ஸ்’ படத்தின் டுவிட்டர் விமர்சனம் இதோ
சர்தார்
கார்த்தியின் சர்தார் படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி உள்ளார். கார்த்திக்கு இந்த வருடம் அவரது கெரியரில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது. ஏனெனில் அவர் நடிப்பில் இதுவரை விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இருபடங்கள் வெளியாகின. இந்த இரண்டும் பிளாக்பஸ்டர் ஹிட்டானதால் சர்தார் மூலம் அவர் ஹாட்ரிக் ஹிட் கொடுப்பாரா என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகவே இப்படத்தின் விமர்சனங்களும் அமைந்துள்ளன. அதிகப்படியான பாசிடிவ் விமர்சனங்கள் வருவதால் இப்படமும் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வென்றது யார்?
இரண்டு படங்களுமே ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளதால் நிச்சயம் பாக்ஸ் ஆபிஸை பொறுத்தவரை இரண்டுமே வெற்றிப்படங்களாக அமைய அதிகளவு வாய்ப்பு உள்ளது. ஆனால் விமர்சன ரீதியாக பார்த்தோம் என்றால் பிரின்ஸை விட சர்தார் படத்துக்கு தான் அதிகளவில் பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. மற்றபடி கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்குமே இந்த படங்கள் ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கும் என்பது உறுதியாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்... கார்த்தியின் தீபாவளி சென்டிமெண்ட் மீண்டும் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா? - சர்தார் டுவிட்டர் விமர்சனம் இதோ