கோலிவுட்டின் சர்ச்சை ராணி நயன்தாரா... காதல், கல்யாணம் முதல் குழந்தை பெற்றது வரை அவர் எதிர்கொண்ட சர்ச்சைகள்..!

First Published | Nov 18, 2022, 7:49 AM IST

நயன்தாராவை லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டு வந்தாலும், சினிமாவில் அறிமுகமானதில் இருந்து தற்போது வரை அவர் சர்ச்சைகளின் ராணியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவருடைய 19 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட சர்ச்சைகள் ஏராளம். நயன்தாராவின் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் பல வலிகளும், கண்ணீரும், சர்ச்சைகளும் இருக்கிறது. அப்படி அவர் கடந்த வந்த பாதையில் எதிர்கொண்ட சர்ச்சைகளைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நயன்தாரா முதன்முதலில் சிக்கிய சர்ச்சை என்றால் அது சிம்பு உடனான காதல் சர்ச்சை தான். வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவுடன் நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டது. அப்போது இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், அப்பட ரிலீசுக்கு பின் திடீரென பிரேக் அப் செய்து பிரிந்தனர். அப்போது இவர்கள் இருவரும் படுக்கையறையில் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி கோலிவுட்டில் புயலைக் கிளப்பியதை இன்னும் யாரும் மறந்திருக்க முடியாது.

சிம்புவுடனான காதல் சர்ச்சை ஓய்ந்த பின்னர், நயன்தாரா அடுத்ததாக பிரபுதேவாவை காதலிக்கத் தொடங்கினார். ஏற்கனவே திருமணமான பிரபுதேவாவை நயன்தாரா விடாமல் காதலித்தது தான் இந்த சர்ச்சைக்கு காரணம். அந்த சமயத்தில் நயன்தாராவை பார்த்தால் காலால் எட்டி உதைப்பேன் என பிரபுதேவாவின் மனைவி சொன்னது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு கட்டத்தில் பிரபுதேவாவை திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு சென்ற நயன்தாராவின் இந்த காதலும் தோல்வியில் தான் முடிந்தது.

Tap to resize

பிரபுதேவாவை காதலித்தபோது நயன்தாரா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதாவது தெலுங்கில் உருவான ராமன் சீதை திரைப்படம் தான் நயன்தாராவின் கடைசி திரைப்படம் என்றும், அப்படத்திற்கு பின்னர் நடிக்கப்போவதில்லை என்றும் அறிவித்திருந்தார். அப்பட ஷூட்டிங் முடிந்தபோது கூட கண்ணீர்மல்க அவர் விடைபெற்ற வீடியோக்கள் வெளியாகி வைரலானது. அதுமட்டுமின்றி இப்படத்தில் அவர் சீதையாக நடிக்கவும் எதிர்ப்பு கிளம்பியது.

நயன்தாரா அடுத்ததாக சிக்கிய சர்ச்சை என்றால் அது விக்னேஷ் சிவன் உடனான காதல் தான். ஏற்கனவே இரண்டு முறை காதல் தோல்வியை சந்தித்த நயன்தாரா, மூன்றாவதாக விக்னேஷ் சிவனை காதலிப்பதாக வெளியான செய்தியை அனைவரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த காதல் எத்தனை ஆண்டுகளுக்கு என்று விமர்சித்தவர்களுக்கு, உண்மை காதல் ஜெயிக்கும் என்று நிரூபித்து காட்டி, 7 ஆண்டு காதல் வாழ்க்கைக்கு பின் இந்த ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார் நயன்தாரா.

இதையும் படியுங்கள்... வாவ்... கௌதம் கார்த்தி - மஞ்சிமா மோகன் திருமண பத்திரிக்கையில் இப்படி ஒரு ஸ்பெஷலா? குவியும் பாராட்டு!

நயன்தாராவின் திருமணம் சர்ச்சையில் சிக்காமல் நடைபெற்றாலும், அது முடிந்த உடனே அவர் ஒரு சர்ச்சையில் சிக்கினார். அதாவது திருமணம் முடிந்த உடன் நயன் - விக்கி ஜோடி திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். அப்போது கோவில் வளாகத்தில் நடிகை நயன்தாரா, காலணி அணிந்து வலம் வந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பின்னர் இதுகுறித்து வருத்தம் தெரிவித்த விக்னேஷ் சிவன், இது தெரியாமல் நடந்துவிட்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

நயன்தாரா, அடுத்ததாக சிக்கிய சர்ச்சை என்றால் அது அவர் குழந்தை பெற்றது தான். திருமணமான நான்கே மாதத்தில் தங்களுக்கு குழந்தை பிறந்துவிட்டதாக அறிவித்தது பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் தான் அவர்கள் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றது தெரியவந்தது. அதிலும் அவர்கள் விதிகளை மீறியதாக கூறப்பட்ட நிலையில், தாங்கள் முறைப்படி தான் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்று கொண்டதாக தெரிவித்ததோடு மட்டுமின்றி தங்கள் இருவரும் கடந்த 2016-ம் ஆண்டே பதிவுத் திருமணம் செய்துகொண்ட உண்மையையும் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தனர்.

இவ்வாறு நடிகையானதில் தொடங்கி தாயானது வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும், அவற்றால் துவண்டுவிடாமல் சிங்கப்பெண் போல் ஒவ்வொரு சர்ச்சைகளையும் கடந்து வந்தது தான் அவரின் தனிச்சிறப்பு. இவ்வாறு சர்ச்சை ராணியாக வலம் வரும் நயன்தாரா இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளது.

இதையும் படியுங்கள்...  பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போகும் பிரபலம் யார் தெரியுமா? வெளியான பரபரப்பு தகவல்!

Latest Videos

click me!