
எம்.ஆர்.ராதா என்று சொன்னதும் எம்ஜிஆரை சுட்டவர் என்று தான் பலரும் நினைவில் வைத்திருப்பார்கள். ஆனால் அவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் கோலோச்சியவர். தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகராக வலம் வந்த எம்.ஆர்.ராதாவுக்கு மொத்தம் 8 மனைவிகளாம். இவர்கள் அனைவருடனும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார் எம்.ஆர்.ராதா. அதைப்பற்றி அவரது பேரனும் நடிகருமான வாசு விக்ரம் யூடியூப் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
அவர் கூறியதாவது “8 மனைவிகளுடன் அவர் ஒரே வீட்டில் வாழ்ந்ததால் அந்த காலத்தில் வீடே கலகலவென இருக்கும். கல்யாண வீடு போல தான் எங்கள் வீடு இருக்கும். தினசரி குறைந்தது 100 பேருக்கு சமைப்பார்கள். அவருக்கு ரொம்ப புடிச்சது திருச்சி வீடு தான். சுமார் 3 ஏக்கரில் 42 வீடுகள் கட்டி வாழ்ந்தார். அதை தற்போது பராமரிக்க முடியாததால் விற்றுவிட்டோம். ஒவ்வொரு மனைவிக்கும் 100 சவரன் நகை, ஒரு பெரிய பங்களா, ஒரு கார், 20 கறவை மாடு, 50 ஏக்கர் நிலம் என எல்லாரையும் செட்டில் பண்ணிவிட்டார்.
அந்த காலகட்டத்தில் சிவாஜிக்கு 15 ஆயிரம் சம்பளம், எம்ஜிஆர் 30 ஆயிரம் சம்பளம் வாங்கினர். ஆனால் தாத்தா அப்போது ஒரு படத்துக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கினார். அந்த காலகட்டத்தில் ராதா இல்லாத படம் சாதா என சொல்கிற அளவுக்கு செம மவுசு உள்ள நடிகராக இருந்து வந்தார். என் தாத்தாவின் கால்ஷீட்டுக்காக ஹீரோக்களே காத்திருப்பார்கள். எம்.ஆர்.ராதாவின் முதல் மனைவி சரஸ்வதி அம்மாள், அவர்களுக்கு ஒரே பையன், அந்த வாரிசுக்கு பிறந்தவர் தான் நான்.
எம்.ஆர்.ராதா தன்னுடைய பேமிலியில் ஒவ்வொருவருக்கும் பெயர் வைப்பதில் மிக கவனமாக இருப்பார். குறிப்பாக ஒரு பேத்திக்கு ரஷ்யா என பெயர் வைத்திருக்கிறார். அவருக்கு கம்மியூனிசம் ரொம்ப பிடிக்கும் என்பதால் ரஷ்யா என பெயர் வைத்தார். இங்கு பழனி, சிதம்பரம் என பெயர்வைப்பதில்லையா, அதேமாதிரி தான் இதுவும் என சொன்னார். என் தாத்தா எம்.ஆர்.ராதாவுக்கு வலது கரமாக இருந்தது என்னுடைய அப்பா வாசு தான்.
என் தாத்தா, அவரின் மனைவிகளில் ஒரே ஒருவருக்கு மட்டும் மணி மண்டபம் கட்டி இருக்கிறார். அவரின் இரண்டாவது மனைவியான பிரேமா என்பவருக்கு கோயம்புத்தூரில் மணிமண்டபம் கட்டினார். அப்போது எம்.ஆர்.ராதாவை பார்த்து ஜிடி நாயுடு கேட்டாராம். என்னப்பா முட்டாள் மாதிரி பொம்பளைக்கு மணிமண்டபம் கட்டியிருக்க என கேட்டாராம். அதற்கு பதிலளித்த எம்.ஆர்.ராதா, தாஜ் மஹாலை கட்டுன ஷாஜகானே முட்டாள்னா நானும் முட்டாள் தான் என கூறி இருக்கிறார்.
நடிகர் வாசு விக்ரம் ஒருமுறை கூட தன்னுடைய தாத்தா எம்.ஆர்.ராதா உடன் போட்டோவே எடுத்தது இல்லையாம். அப்போது அவர்களின் அருமை தெரியாததால் புகைப்படம் எடுக்கவில்லை என வாசு விக்ரம் கூறி உள்ளார். நான் நடிகனாகி சினிமாவிற்குள் வந்த பின்னர் தான் தாத்தாவின் அருமையெல்லாம் எனக்கு தெரிந்தது.
எம்.ஆர்.ராதாவின் கார் கலெக்ஷன் பற்றி பேசிய வாசு விக்ரம், என் தாத்தா மொத்தம் 6 கார் மற்றும் 2 வேன் வைத்திருந்தார். நாடகத்திற்கு பல ஊர்களுக்கு செல்லும் அவர், அப்போ வரும் லேட்டஸ்ட் காட்களையெல்லாம் வாங்கிவிடுவார். அவர் எந்த காரில் பிரச்சனை என்றாலும் அதை பிரித்து வேலை பார்த்துவிடுவார். அந்த அளவுக்கு புத்திசாலி. ஒரு முறை வீட்டில் இருந்த் சாப்பாடு வாங்கிவர ஹீரோ ஒருவரிடம் கார் கேட்டிருக்கிறார். அந்த ஹீரோ, அது புதுகார் என்பதால் தர மறுத்துவிட்டாராம்.
தான் கேட்டு கார் கொடுக்காததால் ஆத்திரமடைந்த எம்.ஆர்.ராதா அடுத்த ஷெட்யூலின் போது அந்த ஹீரோ வைத்திருந்த அதே காரை வாங்கி, அதில் மாட்டு சாணி மற்றும் வைக்கோல் ஏற்றிக் கொண்டு எல்லா பிலிம் ஸ்டூடியோவிலும் அந்த காரில் ரவுண்ட்ஸ் வந்திருக்கிறார். அவர் இப்படி செய்ததால் அந்த காரை அடுத்து யாருமே வாங்கவில்லையாம். அந்த கார் வைத்திருந்தவர்களும் அம்பாசிடர் காரில் வர ஆரம்பித்துவிட்டார்கள். இது சாணி ஏத்துன கார் என சொல்லி அந்த காரை அனைவரும் வெறுக்க ஆரம்பித்தார்களாம்.
அடிக்கடி புது கார் வாங்கும் பழக்கம் இருந்த எம்.ஆர்.ராதா. அந்த சமயத்தில் எம்ஜிஆர், சிவாஜி என எந்த நடிகரிடமும் இல்லாத ஒரு லேட்டஸ்ட் மாடல் காரை இறக்கி இருந்தாராம். அப்போது இந்தியாவின் முதல் குடியரசு தலைவரான ராதாகிருஷ்ணன் சென்னை வந்துள்ளார். அவரை வரவேற்க எம்.ஆர்.ராதா வாங்கிய இந்த புது கார் இருந்தால் நன்றாக இருக்கும் என கருதி ஐஏஎஸ் ஆபிஸர் ஒருவர் எம்.ஆர்.ராதாவிடம் கேட்க வந்திருக்கிறார்.
அதற்கு எம்.ஆர்.ராதா, நான் ஒரு கூத்தாடி நான் இந்த மாதிரி காரில் சென்றால் தான் மரியாதை, ஆனால் ராதாகிருஷ்ணன் இந்தியாவின் முதல் குடிமகன், அவர் நடந்து வந்தாலே மரியாதை. இந்த கார் வெறும் தகரம் இதனால் அவருக்கு மரியாதை கிடைக்காது என சொல்லி காரை தர முடியாது என சொல்லிவிட்டாராம்.