
நடிகர் ஸ்ரீகாந்த் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ரோஜா கூட்டம்’ என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். அதன் பின்னர் மனசெல்லாம், வர்ணஜாலம், கனா கண்டேன், ஒருநாள் கனவு, பம்பரக் கண்ணாலே, மெர்குரி பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை, பூ, சதுரங்கம், நண்பன் போன்ற படங்களில் நடித்துள்ளார். ‘பார்த்திபன் கனவு’ திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு தமிழ்நாடு அரசின் திரைப்பட சிறப்பு விருதும் கிடைத்தது. தற்போது ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நுங்கம்பாக்கம் மதுபான விடுதியில் நடந்த மோதலில் அதிமுக பிரமுகர் பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் வெளிநாடுகளில் இருந்து போதை பொருட்களை இறக்குமதி செய்து நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலருக்கு விநியோகித்ததாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து ஸ்ரீகாந்தை கைது செய்த போலீசார் நீண்ட நேரமாக விசாரணையில் ஈடுபடுத்தினர். பின்னர் அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போதைப் பொருள் சர்ச்சையில் சிக்கி இருக்கும் நடிகர் ஸ்ரீகாந்த் 18 ஆண்டுகளுக்கு முன்பே திருமண சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறார்.
ஸ்ரீகாந்தின் மனைவியாக இருக்கும் வந்தனாவை மூன்று மாதம் குடும்பம் நடத்திவிட்டு பின்னர் அவரை ஏற்க மறுத்துள்ளார். வந்தனா மிகப்பெரிய சட்டப் போராட்டம் நடத்தி அதன் பின்னரே ஸ்ரீகாந்தை திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீகாந்த் வந்தனா திருமணத்தில் என்ன நடந்தது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். எம்.சி.ஏ பட்டதாரியான ஸ்ரீகாந்த் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர். தந்தை சித்தூரையும், தாய் கும்பகோணத்தையும் பூர்வீகமாக கொண்டவர்கள். ஸ்ரீகாந்தின் தந்தை வங்கிப் பணியாளர் என்பதால் அவர் திருப்பதியில் வசித்து வந்தார். ஸ்ரீகாந்த்திற்கு திரைத்துறையில் இருக்கும் ஆர்வம் காரணமாக அவர் படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு வந்தனா என்கிற ஒரு பெண்ணை ரகசிய திருமணம் செய்ததாக தகவல் வெளியானது.
ஆனால் இந்த தகவலை ஸ்ரீகாந்த் மறுத்தார். மூன்று மாதங்கள் தன்னுடன் குடும்பம் நடத்தி விட்டு ஸ்ரீகாந்த் தன்னை மனைவியாக ஏற்க மறுப்பதாக வந்தனா போலீஸில் புகார் அளித்தார். வடபழனி காவல் நிலையத்தில் வந்தனா அளித்த புகாரில், “அடையாறு ஸ்டார் ஹோட்டலில் தோழிகள் மற்றும் நடிகைகளுடன் பிறந்தநாள் கொண்டாடினேன். அப்போது நடிகை ஒருவருடன் ஸ்ரீகாந்த் பார்ட்டிக்கு வந்தார். அந்த நடிகை ஸ்ரீகாந்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து ராயல் லீ மெரிடியன் ஹோட்டலில் நடந்த ஸ்ரீகாந்த் பிறந்தநாள் விழாவிற்கு எனக்கு அழைப்பு வந்தது. நான் அந்த விழாவில் கலந்து கொண்டேன். அப்போது எனக்கும் ஸ்ரீகாந்துக்கும் நெருக்கம் அதிகமானது. ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்த் என்னிடம் காதலை வெளிப்படுத்தினார். திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறினார்.
ஆனால் எங்களது காதலை ஸ்ரீகாந்த் பெற்றோர்கள் ஏற்கவில்லை. எனவே நண்பர்களாகவே இருந்து வந்தோம். ஸ்ரீகாந்த் உடனான திருமணத்திற்கு எங்கள் வீட்டார் சம்மதம் தெரிவித்தனர். அப்போது ஸ்ரீகாந்த் தெலுங்கு படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த படத்தின் தயாரிப்பாளர் மனைவி கீதா என்பவரிடம் பேசி எங்களை சேர்த்து வைக்கும்படி ஸ்ரீகாந்த் கேட்டார். தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு கீதாவுடன் காக்கிநாடாவில் உள்ள பிரபல ஜோதிடர் ஒருவரை சந்திக்க கீதாவுடன் நானும் ஸ்ரீகாந்தும் சென்றோம். அப்போது ஸ்ரீகாந்த் அங்கேயே திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறினார். எனவே என்னுடைய பெற்றோரை வரவழைத்தேன். அந்த ஜோதிடர் மற்றும் தயாரிப்பாளரின் மனைவியான கீதா முன்னிலையில் வேணுகோபால்சாமி கோயிலில் வைத்து ஸ்ரீகாந்த் என்னை திருமணம் செய்து கொண்டார்.
ஹைதராபாத்தில் திருமணத்தை பதிவு செய்துவிட்டு, சென்னையில் எனது வீட்டில் இருந்தேன். என்னை பார்க்க அடிக்கடி ஸ்ரீகாந்த் வந்து செல்வார். நாங்கள் இருவரும் மூன்று மாதங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்தோம். ஷூட்டிங் சமயத்தில் கூட என்னை வந்து சந்தித்து விட்டுச் செல்வார். இந்த விஷயம் தெரிந்த கொண்ட ஸ்ரீகாந்த் பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். திருமண அழைப்பிதழ், மண்டபம், நகைகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் என் மேல் வழக்கு இருப்பதாக கூறி திருமணத்தை நிறுத்தி விட்டனர். எனவே நான் ஸ்ரீகாந்தின் வீட்டில் குடியேறினேன். ஆனால் ஸ்ரீகாந்த் பெற்றோர்கள் அந்த வீட்டில் இருந்து வெளியேறி ஹோட்டலில் அறை எடுத்து தங்கிக் கொண்டனர். எனவே எங்களை சேர்த்து வைக்க வேண்டும்” என அந்த புகாரில் வந்தனா கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து ஸ்ரீகாந்தின் தந்தை, அத்துமீறி வந்தனா எங்கள் வீட்டிற்குள் நுழைந்திருப்பதாகவும், அவரை வெளியேற்ற வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி கணவர் வீட்டில் இருந்து மனைவியை வெளியேற்ற உத்தரவிட முடியாது என்று கூறி ஸ்ரீகாந்த் வீட்டில் வந்தனாவை வசிக்க அனுமதித்தார். இதற்கிடையே வந்தனா மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் பேசி சமரசம் செய்து கொண்டனர். வந்தனா விவகாரத்தால் ஸ்ரீகாந்தின் இமேஜ் வெகுவாக பாதிக்கப்பட்டது. அவருக்கு சினிமா வாய்ப்புகளும் குறைந்தது. இதனால் வந்தனா உடன் சேர்ந்து வாழ ஸ்ரீகாந்த் முடிவெடுத்தார். வந்தனாவை மருமகளாக ஏற்க தனது பெற்றோர்கள் ஒப்புக்கொண்டதாக ஸ்ரீகாந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.
அதன் பின்னர் இருவரும் சென்னையில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தற்போது ஸ்ரீகாந்த் வந்தனா தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமண சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீகாந்த், தற்போது போதைப் பொருள் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவர் கொக்கேன் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியதற்காக தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.