
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக கடந்த சில வருடங்களாக தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான தெலுங்கு திரைப்படமான ‘வாத்தி’ திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நல்ல பெயரைப் பெற்று தந்தது. தொடர்ந்து இவர் சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார்் இந்த திரைப்படம் ஜூன் 20 ஆம் தேதி வெளியானது. தனுஷுடன் இணைந்து நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். படம் வெளியாகி ஐந்து நாட்களை கடந்துள்ள நிலையில் படம் ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளது.
குபேரா திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த திரைப்படமாகும். இந்த படத்தின் கதை குறித்து பார்த்தால், பிச்சைக்காரர்களை பயன்படுத்தி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு ஒரு கும்பல் முயன்று கொண்டிருக்கிறது. அதற்காக கீழ் திருப்பதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பிச்சைக்காரரான தனுஷும் அந்த வேலைக்காக அழைத்து வரப்படுகிறார். ஆனால் தனுஷ் ஒரு கட்டத்தில் அவர்களின் திட்டத்தை புரிந்து கொண்டு பணத்துடன் தப்பித்து விடுகிறார். தனுஷை தேடி அந்த கும்பல் அலைகின்றனர். அதன்பின்னர் என்ன நடந்தது? அவர்கள் கையில் தனுஷ் சிக்கினாரா? பிச்சைக்காரராக இருந்த தனுஷ் பணக்காரராக மாறினாரா? என்பதுதான் இந்த படத்தின் மையக்கரு. இந்த படம் வெளியான முதல் நாள் நல்ல விமர்சனங்களை பெற்றது. ஆனால் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் இரண்டு நிமிடங்கள் என்பது ரசிகர்களுக்கு சோர்வை ஏற்படுத்தியது.
முதல் பாதி வேகமாக சென்ற நிலையில் இரண்டாவது பாதி தொய்வை ஏற்படுத்தியதாக ரசிகர்கள் கவலை தெரிவித்தனர். இந்த படம் இரண்டரை மணி நேரங்களில் முடிந்திருந்தால் மிகவும் நன்றாக வந்திருக்கும் என்றும் கருத்துக்களை கூறினர். கார்ப்பரேட் முதலாளிகள், அவர்கள் செய்யும் சதி திட்டங்கள், பிச்சைக்காரர்களை சதித்திட்டத்திற்கு பயன்படுத்துதல் என முதல் பாதி விறுவிறுப்பை கூட்டியது. ஆனால் இரண்டாம் பாதி எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்தது. ஒட்டுமொத்த படத்தையும் தனுஷ் ஒருவரே தாங்கிக் கொண்டிருந்தார். நாகார்ஜூனா உள்ளிட்ட பிறர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தனர். ராஷ்மிகா மந்தனா கதாபாத்திரம் தேவை இல்லாத ஒன்றாக மாறியிருந்தது. இப்படியாக கலவையான விமர்சனங்களை பெற்று வந்த இந்த திரைப்படம் நான்காவது நாள் வசூல் பலத்த அடி வாங்கியுள்ளது.
படம் வெளியான முதல் நாளில் இருந்தே ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நல்ல வசூலை குவித்து வருகிறது. ஆனால் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் படத்தின் வசூல் மிக குறைவாகவே உள்ளது. முதல் நாளில் ரூ.14.75 கோடி வசூலித்திருந்த இந்த திரைப்படம், இரண்டாவது நாளில் ரூ.16.5 கோடியும், மூன்றாவது நாளில் ரூ.17.35 கோடியும் வசூலித்திருந்தது. வார இறுதி நாட்கள் என்பதால் முதல் மூன்று நாட்கள் வசூல் அதிகரித்து காணப்பட்டது. ஆனால் நான்காவது நாளான திங்கட்கிழமை வசூல் ஒரே அடியாக சரிந்துள்ளது. திங்கட்கிழமை ரூ.6.50 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. நான்கு நாள் முடிவில் குபேரா திரைப்படம் ரூ.55.10 கோடி வசூலை மட்டுமே குவித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை வெளியிடும் சாக் நிக் இணையதளம் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
குபேரா திரைப்படம் ரூ.120 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாகவும், இந்த படத்திற்காக தனுஷ் ரூ.30 கோடி சம்பளம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் படம் நான்கு நாட்களில் போட்ட முதலில் பாதியை கூட கடக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த படங்கள் வர இருப்பதால் இந்த வாரத்திற்குள் படத்தின் வசூல் மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. குபேரா திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்த படங்களின் பட்டியலில் இணையுமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.