
ஓடிடி தளங்களின் வளர்ச்சியால் சினிமாவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஓடிடி தளங்களின் வருகைக்கு முன்பு வரை, ஒரு படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனால் அதன் 25வது, 50வது, 100வது நாள் என கொண்டாடப்படும். ஆனால் தற்போதைய சூழலில் ஒரு படம் ஒரு வாரத்திற்கு மேல் திரையரங்கில் ஓடுவதே கேள்விக்குறி ஆகி உள்ளது. இதோடு படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன 28 நாட்களில் ஓடிடியில் வந்துவிடுவதால், தற்போது ஒரு படம் ஒரு மாதம் திரையரங்கில் ஓடுவதே சவாலானதாக இருக்கிறது. ஓடிடி தளங்களின் வளர்ச்சியே படங்கள் தியேட்டரில் அதிக நாட்கள் ஓடாததற்கு காரணம். அப்படி ஓடிடி தளங்களில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 படங்கள் மற்றும் வெப் தொடர்கள் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.
இந்த டாப் 5 லிஸ்டை ஓர்மேக்ஸ் தளம் வெளியிட்டு உள்ளது. அதன்படி கடந்த ஜூன் 16ந் தேதியில் இருந்து ஜூன் 22ந் தேதி வரை ஓடிடி தளங்களில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியல் தான் வெளியாகி உள்ளது. டாப் 5 படங்கள் பட்டியலில் அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வரும் சிங்கிள் திரைப்படம் தான் இந்த வாரம் ஐந்தாம் இடத்தை பிடித்திருக்கிறது. தெலுங்கு படமான இதை கார்த்திக் ராஜு இயக்கி உள்ளார். இந்த படம் அமேசான் பிரைமில் கடந்த வாரம் மட்டும் 30 லட்சம் பார்வைகளை பெற்றிருக்கிறது.
சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வரும் ஆலப்புழா ஜிம்கானா என்கிற மலையாளப் படம் இந்த பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளது. நஸ்லின், அனகா ரவி ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை கலீத் ரகுமான் இயக்கி உள்ளார். இப்படம் திரையரங்கில் பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது ஓடிடியிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. இப்படம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 32 லட்சம் வியூஸ் அள்ளி டாப் 5 பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
இந்த டாப் 5 பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ள படம் டூரிஸ்ட் ஃபேமிலி. சசிகுமார் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை அபிஷன் ஜீவிந்த் இயக்கி உள்ளார். இதில் சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர், கமலேஷ், ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தியேட்டரில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இப்படம் ஓடிடியில் இம்மாத தொடக்கத்தில் ரிலீஸ் ஆனது. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இத்திரைப்படம் 34 லட்சம் பார்வைகளுடன் 3ம் இடத்தில் உள்ளது.
டாப் 5 பட்டியலில் முதல் 2 இடங்களை இந்தி படங்கள் தான் ஆக்கிரமித்து உள்ளன. சன்னி தியோல் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ஜாட் திரைப்படம் தான் இரண்டாம் இடத்தில் உள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இப்படம் 35 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக அக்ஷய் குமார் நடித்த கேசரி சாப்டர் 2 திரைப்படம் ஓடிடியில் கடந்த வாரம் அதிகம் பார்க்கப்பட்ட படமாக மகுடன் சூடி இருக்கிறது. ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இப்படம் 58 லட்சம் வியூஸ் அள்ளி உள்ளது.
ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 வெப் தொடர்கள் பட்டியலில் "Lafangey" என்கிற இந்தி வெப் தொடர் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. அமேசான் எம் எக்ஸ் பிளேயர் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த வெப் தொடர் 28 லட்சம் பார்வைகளை பெற்று இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகும் தி கிரேட் இந்தியன் கபில் ஷோ சீசன் 3 நிகழ்ச்சி நான்காம் இடத்தை பெற்றிருக்கிறது. கடந்த வாரம் மட்டும் இந்த நிகழ்ச்சியை 30 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகும் தி டிரெய்டர்ஸ் என்கிற வெப் தொடர் 42 லட்சம் பார்வைகளுடன் 3ம் இடத்தை பிடித்திருக்கிறது. அடுத்ததாக இரண்டாவது இடத்தை ராணா நாயுடு சீசன் 2 என்கிற வெப் தொடர் பிடித்துள்ளது. ராணா டகுபதி நாயகனாக நடித்துள்ள இந்த வெப் தொடர் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இந்த வெப் சீரிஸ் 52 லட்சம் பார்வைகளை பெற்று 2ம் இடத்தில் உள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் Criminal Justice: A Family Matter என்கிற வெப் தொடர் தான் இந்த வாரமும் முதலிடத்தில் உள்ளது. இந்த வெப் தொடர் கடந்த வாரத்தில் மட்டும் 57 லட்சம் பார்வைகளை பெற்றிருக்கிறது.