சாதனை படைத்த ரவிவர்மன்; கேக் வெட்டி கொண்டாடிய லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு!
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் செய்துள்ள சாதனையை விக்னேஷ் சிவனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் செய்துள்ள சாதனையை விக்னேஷ் சிவனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கும் இப்படத்தில் கெளரி கிஷான், எஸ்.ஜே.சூர்யா, சீமான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் அப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் செய்த சாதனையை கொண்டாடும் விதமாக அவருக்காக பிரம்மாண்ட கேக் ஒன்றை வாங்கி வெட்டி இருக்கின்றனர். அப்படி அவர் என்ன சாதனை செய்துவிட்டார் என்பதை விரிவாக பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... தன்னை அறிமுகப்படுத்திய மலையாள இயக்குநருக்காக ஒரு கோடி ரூபாயை விட்டுக்கொடுத்த தமிழ் ஒளிப்பதிவாளர்...
ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தில் உறுப்பினராக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இந்தியாவில் இதுவரை சந்தோஷ் சிவன் மட்டுமே இந்த பெருமை மிகு சங்கத்தில் உறுப்பினராக இருந்து வந்தார். அந்த பட்டியலில் தற்போது ரவிவர்மனும் இடம்பெற்று இருக்கிறார். அந்த சங்கத்தில் உலகெங்லும் உள்ள திறமை வாய்ந்த ஒளிப்பதிவாளர்கள் மட்டுமே இடம்பெற்று இருப்பார்கள். அந்த சங்கத்தில் இரண்டாவது இந்தியராக ரவிவர்மன் இடம்பிடித்துள்ளதை தான் தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு கொண்டாடி உள்ளது.
இதுகுறித்து ரவிவர்மன் கூறுகையில், உலகெங்கும் இருக்கும் ஒளிப்பதிவாளர்கள், இந்த சங்கத்தில் இணைவதை வாழ்நாள் கனவாகக் கொண்டிருப்பார்கள். ஆஸ்கர் விருது வென்ற பல்வேறு முன்னணி ஒளிப்பதிவாளர்கள் உறுப்பினர்களாக இருக்கும் இந்த சங்கத்தில் நானும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது என தெரிவித்தார். வேட்டையாடு விளையாடு, ஆட்டோகிராப், தசாவதாரம், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரவிவர்மன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.
இதையும் படியுங்கள்... நானு போறேன் பாலிவுட்டுக்கு.. ஹிந்தியில் களமிறங்கும் சூர்யா - பட்ஜெட் 500 கோடியாம் - இயக்குனர் யார் தெரியுமா?