Published : Jan 30, 2025, 11:18 AM ISTUpdated : Jan 30, 2025, 11:20 AM IST
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. அது யாருடைய கதை என்பதை பார்க்கலாம்.
சூரரைப் போற்று படத்திற்கு பின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி வரும் படம் பராசக்தி. இப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகிறார் ஸ்ரீலீலா. மேலும் வில்லனாக ரவி மோகன் நடிக்க, அதர்வா முரளியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
25
மொழிப்போர் தியாகியின் கதை
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவானதை போல் பராசக்தி திரைப்படமும் தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக உள்ளதாம். கடந்த 1965-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற மொழிப்போரில் உயிர்நீத்த ஒரு கல்லூரி மாணவனின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் பராசக்தி திரைப்படம் உருவாகி வருகிறதாம்.
அந்த மாணவரின் பெயர் இராசேந்திரன். தாய்மொழி காக்க இந்தி எதிர்ப்புப் போரில் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியான மாணவன் தான் இந்த மு.இராசேந்திரன். கடந்த 1965-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி, இந்தி மொழி திணிப்பை எதிர்த்து தீக்குளித்த இளைஞர்களுக்கு வீரவணக்கம் செலுத்தவும், மதுரையில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய பக்தவச்சலம் அரசின் கீழ் இயங்கும் காவல் துறையை கண்டித்தும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி நடத்தினர்.
45
இராசேந்திரனாக சிவகார்த்திகேயன்
அந்த பேரணியின் போது காவல்துறையினர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் இராசேந்திரன் நெற்றியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மொழிப்போரில் உயிர்நீத்த இராசேந்திரனின் உடல், சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் அடக்கம் செய்யப்பட்டது. 1969ம் ஆண்டு இராசேந்திரனின் தியாகத்தை பறைசாற்றும் விதமாக அவரது திருவுருவச் சிலை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியால் நிறுவப்பட்டது.
55
கிளைமாக்ஸ்
அந்த மொழிப்போர் தியாகி இராசேந்திரனின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் பராசக்தி திரைப்படம் உருவாகி வருகிறது. அதில் இராசேந்திரனாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதன்மூலம் அமரன் பட கிளைமாக்ஸில் குண்டடி பட்டு இறந்ததை போல் இந்தப் படத்தின் கிளைமாக்ஸிலும் சிவகார்த்திகேயன் கொல்லப்படும் காட்சி இடம்பெறும் என்பது உறுதியாக தெரிகிறது. இதனால் ரசிகர்கள் மனதை கல்லாக்கிக் கொண்டு தான் இப்படத்தையும் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.