அப்பா போலீஸ்; கணவர் இன்ஜினியர்! சரோஜா தேவி பற்றி பலரும் அறிந்திராத ஆச்சர்ய தகவல்கள்

Published : Jul 14, 2025, 11:41 AM IST

நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். அவரைப் பற்றி பலரும் அறிந்திடாத ஆச்சர்ய தகவல்கள் சிலவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
17
Unknown facts about Saroja Devi

கன்னடத்துக்கு பைங்கிளி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சரோஜா தேவி, 1938-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி பெங்களூருவில் பிறந்தார். இவரது தந்தை பைரப்பா போலீஸ் அதிகாரியாக இருந்தார். 4வது மகளாக பிறந்த சரோஜா தேவிக்கு சிறு வயதிலேயே இசை ஆர்வம் இருந்தது. புனித தெரசா பள்ளியில் படித்தபோது இசைப் போட்டியில் கலந்துகொண்ட சரோஜா தேவி, ஏ ஜிந்தகி கே என்கிற இந்தி பாடலை பாடி இருக்கிறார் சரோஜா, அந்நிகழ்ச்சிக்கு கன்னட திரையுலகின் பிரபல பட அதிபரும், நடிகருமான பொன்னப்பா பாகவதர் வந்திருந்தாராம். சரோஜா தேவியின் குரல் வளம் நன்றாக இருந்ததை கண்ட அவர், தன்னுடைய படத்தில் அவரை பாட வைக்க முடிவு செய்து, அவரது தாயாரை அணுகியிருக்கிறார். அவரும் ஓகே சொல்ல பாடல் பதிவு நடந்திருக்கிறது.

27
சரோஜா தேவி சினிமாவில் அறிமுகமானது எப்படி?

பாடல் பதிவின் போது இவரை நடிகை ஆக்கினால் என்ன என்று பொன்னப்பாவுக்கு ஐடியா வர, உடனடியாக அவருக்கு மேக்கப் போட்டு பாத்திருக்கிறார்கள். அவரின் தோற்றம் பொன்னப்பா பாகவதருக்கும், படக்குழுவுக்கும் பிடித்துப் போனதால், சரோஜா தேவியை தன்னுடைய மகாகவி காளிதாஸ் என்கிற கன்னட படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார் பாகவதர். 1955-ம் ஆண்டு வெளியான அந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமின்றி தேசிய விருதையும் வென்றது. இதையடுத்து தனது அடுத்த படமான பஞ்சரத்னம் என்கிற கன்னட படத்திலும் சரோஜா தேவியை கதாநாயகியாக நடிக்க வைத்தார் பொன்னப்பா பாகவதர்.

37
சரோஜா தேவிக்கு நடிப்பு படிப்பாக மாறியது

ஒரு படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு படிக்க போய்விடலாம் என்கிற ஐடியாவில் இருந்த சரோஜா தேவிக்கு வரிசையாக படங்கள் அமைந்ததால், நடிப்பு அவருக்கு படிப்பாக மாறிப்போனது. 1958-ம் ஆண்டு மணாளனே மங்கையின் பாக்கியம் என்கிற தமிழ் திரைப்படத்திலும், அதை தொடர்ந்து தங்க மலை ரகசியம் படத்திலும் நடித்தார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் உடன் திருடாதே படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் சரோஜா தேவி, ஆனால் எம்ஜிஆருடன் அவர் நடித்த நாடோடி மன்னன் திரைப்படம் தான் முதலில் வெளியானது. அது சரோஜா தேவிக்கு தமிழில் ஒரு முக்கியமான இடத்தை பெற்றுத் தந்தது.

47
சரோஜா தேவியின் ஹிட் படங்கள்

அதன்பின்னர் இவர் நடித்த சபாஷ் மீனா, பாக பிரிவினை போன்ற படங்கள் அவரின் திறமைக்கு எடுத்துக்காட்டாய் அமைந்த போதிலும் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த கல்யாணப் பரிசு திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத் தந்தது. இதைத்தொடர்ந்து வாழ வைத்த தெய்வம், பார்த்திபன் கனவு, பாலும் பழமும், குடும்பத் தலைவன், பாசம், ஆலயமணி, பெரிய இடத்து பெண், தர்மம் தலைகாக்கும், எங்க வீட்டு பிள்ளை, நான் ஆணையிட்டால், அன்பே வா, தாய்மேல் ஆணை என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரமாக வெற்றிக் கொடி நாட்டினார் சரோஜா தேவி.

57
சரோஜா தேவியின் சாதனை

மக்கள் திலகம் எம்ஜிஆர் உடன் 26 படங்களில் ஜோடியாக நடித்துள்ள இவர், நடிகர் திலகம் சிவாஜி கணேஷன், காதல் மன்னன் ஜெமினி கணேசன், தெலுங்கு மொழியில் நாகேஸ்வர ராவ், கன்னடத்தில் ராஜ்குமார் எல்லா முன்னணி நடிகர்களுடனும் பல வெற்றிப் படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தொடர்ச்சியாக 161 படங்களில் கதாநாயகியாக நடித்த ஒரே ஹீரோயின் என்கிற சாதனையையும் சரோஜா தேவி படைத்துள்ளார்.

67
சரோஜா தேவி குடும்பம்

1967-ம் ஆண்டு இன்ஜினியரான ஸ்ரீ ஹர்ஷாவை திருமணம் செய்துகொண்டார் சரோஜா தேவி. இவர்களுக்கு புவனேஸ்வரி, இந்திரா என இரு மகள்களும், ராமச்சந்திரன், கெளதம் என இரு மகன்களும் உள்ளனர். நடிகைகள் திருமணம் செய்துகொண்டால் பட வாய்ப்புகள் குறைந்துவிடும் என்கிற கருத்தை போக்கியவர் சரோஜா தேவி. திருமணத்துக்கு பிறகு இவர் நடித்த பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. 1986-ம் ஆண்டு நடிகை சரோஜா தேவியின் கணவர் ஸ்ரீ ஹர்ஷா காலமானார். கணவர் மறைவுக்கு பின் 8 ஆண்டுகள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த சரோஜா தேவி, அதன்பின்னர் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.

77
சரோஜா தேவி வாங்கிய விருதுகள்

அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்கிற பெயரை பெற்றவர் சரோஜா தேவி. இவர் உடுத்திய ஆடைகள், அணிந்த அணிகலன்கள், இவரின் ஹேர்ஸ்டைல் போன்றவற்றை தான் அன்றைய காலகட்டத்தில் இளம் பெண்கள் பின்பற்றினார்கள். இந்திய அரசால் பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட இவர், தமிழக அரசின் எம்ஜிஆர் விருது, ஆந்திர அரசின் என்.டி.ஆர் தேசிய விருது, பெங்களூரு பல்கலைக்கழகம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டமும், 2008-ல் வாழ்நாள் சாதனையாளருக்கான இந்திய அரசின் தேசிய விருது, பிலிம்பேர் விருது என பல விருதுகளை பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

Read more Photos on
click me!

Recommended Stories