
சினிமாவில் ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பது அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தான். சுமார் ஆன படங்கள் கூட வெற்றியடைந்திருக்கின்றன, அதற்கு முக்கிய காரணம் அதன் வசூல் தான். இப்படி பாக்ஸ் ஆபிஸில் அதிரி புதிரியான வெற்றியை கொடுத்த படங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் ஒரு படத்தை பற்றி தான் பார்க்க உள்ளோம். அந்த படம் வெறும் 35 லட்சம் பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட்டது. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் பட்ஜெட்டைவிட 1328 சதவீதம் அதிகம் வசூலித்து இருக்கிறது. தமிழ் சினிமாவில் அதிக லாபம் ஈட்டித் தந்த படமாகவும் அது கருதப்படுகிறது.
அந்த படம் வேறெதுவுமில்லை... கரகாட்டக்காரன் தான். கடந்த 1989-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தை கங்கை அமரன் இயக்கி இருந்தார். இப்படத்தில் ராமராஜன் ஹீரோவாகவும், கனகா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். மேலும் செந்தில், கவுண்டமணி, சண்முகசுந்தரம், சந்தான பாரதி, காந்திமதி, கோவை சரளா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தார். இப்படம் கடந்த 1989-ம் ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸ் ஆனது. இப்படம் வெளியாகி 36 ஆண்டுகள் ஆகிறது. இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளது.
கரகாட்டக்காரன் திரைப்படத்தை விஜயா மூவீஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் திரைப்படமாக பார்க்கப்படுகிறது. இப்படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு மாதம் முன்னர் தான் கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் படம் வெளியாகி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வந்தது. அந்த சமயத்தில் ராமராஜன் போன்ற வளர்ந்து வரும் ஹீரோ நடித்த படத்தை வெளியிடுவது தவறான முடிவு என பலரும் கருத்து தெரிவித்தார்கள். ஆனால் விமர்சித்தவர்களின் வாயை அடைக்கும் விதமாக கரகாட்டக்காரன் படத்தின் ரிசல்ட் அமைந்தது.
கரகாட்டக்காரன் படத்திற்கு அனைத்துமே பிளஸ் ஆக அமைந்தது. குறிப்பாக இளையராஜாவின் இசையில் வெளிவந்த பாடல்கள் படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. இதையடுத்து செந்தில் - கவுண்டமணியின் காமெடி படத்திற்கு மேலும் வலு சேர்த்தன. இது அவர்களின் 100வது படமாகும். இப்படத்தில் இடம்பெற்ற வாழைப்பழ காமெடி இன்றளவும் பேமஸ் ஆக உள்ளது. அதுமட்டுமின்றி ராமராஜன் - கனகா ஜோடியின் கெமிஸ்ட்ரி என அனைத்தும் பக்காவாக இருந்ததால் படம் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது.
கரகாட்டக்காரன் படத்தின் ஏகோபித்த வெற்றிக்கு காரணம் இப்படம் சி செண்டர் (கிராமப்புர) ரசிகர்களை சென்று சேர்ந்தது தான். இப்படம் சி செண்டரில் மட்டும் ரூ.1 கோடி வசூல் ஈட்டியதாம். அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரது படங்கள் கூட சி செண்டரில் இந்த அளவுக்கு வசூலித்ததில்லை. வெறும் 35 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கரகாட்டக்காரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.5 கோடிக்கு மேல் வசூலித்தது. அதுமட்டுமின்றி இப்படம் திரையரங்குகளிலும் ஓராண்டுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
அந்த காலகட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித் தந்த படம் என்றால் அது கரகாட்டக்காரன் தான். இப்படம் பட்ஜெட்டை விட 1328 மடங்கு அதிகம் வசூலித்திருந்தது. ராமராஜன் படத்தின் வெற்றியை பார்த்து அப்போது சூப்பர்ஸ்டார்களாக இருந்த ரஜினி, கமல் ஆகியோரே மிரண்டு போனார்களாம். நடிகர் ராமராஜன் தன்னுடைய கெரியரில் உச்சம் தொட்டதும் இந்த படத்தில் தான். இப்படத்திற்கு பின்னர் தான் அவர் மக்கள் நாயகனாக கொண்டாடப்பட்டார். அண்மையில் கரகாட்டக்காரன் இரண்டாம் பாகம் உருவாக்க திட்டமிட்டு வருவதாக பேச்சு அடிபட்டது. ஆனால் அதன்பின் அதுபற்றிய அப்டேட் எதுவும் வரவில்லை.