
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். இவர் 1985ம் ஆண்டு ஜூன் மாதம் 19ந் தேதி அன்று மும்பையில் பிறந்தார் காஜல் அகர்வால். கடந்த 2004-ம் ஆண்டு இந்தியில் வெளியான தில் ஹோ கயானா படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி படம் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் காஜல். அதேபோன்று தெலுங்கிலும் லட்சுமி கல்யாணம், சந்தமாமா ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கில் ராம்சரணுடன் இவர் நடித்த மகதீரா படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தை ராஜமெளலி இயக்கி இருந்தார்.
தமிழில் இவருக்கு முதலில் சில படங்கள் சரிவர வெற்றியை கொடுக்காவிட்டாலும், 2011-ம் ஆண்டு கார்த்தியோடு நடித்த நான் மகான் அல்ல திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதோடு, காஜலுக்கு தமிழில் மேலும் பல பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. 2012-ம் ஆண்டு தெலுங்கில் மகேஷ் பாபுவோடு பிசினஸ்மேன் படத்தில் நடித்த காஜல் அகர்வால், தமிழில் சூர்யாவோடு மாற்றானிலும், விஜய்யோடு துப்பாக்கியிலும் கலக்கினார். தொடர் ஹிட் படங்களின் காரணமாக முன்னணி நாயகியாக உயர்ந்தார் காஜல் அகர்வால். இதையடுத்து அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக இந்தியில் சிங்கம் பட ரீமேக்கில் நடித்ததன் மூலம் பாலிவுட்டிலும் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார்.
இதையடுத்து பல புதுமுக நடிகைகளின் வரவால் தனது மார்க்கெட்டை படிப்படியாக இழந்த காஜல் அகர்வால், மீண்டும் விஜய்யுடன் மெர்சல், தனுஷின் மாரி, அஜித்துடன் விவேகம் என முன்னணி நடிகர்களின் படங்களில் இடம்பெற தொடங்கினார். இந்த படங்களில் காஜல் அகர்வாலின் கேரக்டர் வலுவானதாக இல்லாவிட்டாலும் அவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படங்களின் ரிசல்ட் எப்படி அமைந்தாலும், அகர்வால் கடை ஸ்வீட் போல தான் ரசிகர்களுக்கு பிடித்தவராக இருந்து வருகிறார் காஜல்.
நடிகை காஜல் அகர்வாலுக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர் கெளதம் கிச்சிலு என்கிற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு நீல் கிச்சிலு என்கிற ஆண் குழந்தையும் உள்ளது. திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் நடிக்க கணவர் கிரீன் சிக்னல் கொடுத்ததால், நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் காஜல். அந்த வகையில் அவர் கடைசியாக தமிழில் நடித்த படம் இந்தியன் 3. ஷங்கர் இயக்கிய இந்த பிரம்மாண்ட படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியன் 2ம் பாகத்திலேயே காஜல் அகர்வால் இடம்பெற்று இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவரது காட்சிகள் இந்தியன் 3 படத்தில் தான் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்திற்காக குதிரையேற்றப் பயிற்சி எடுத்து நடித்திருக்கிறார் காஜல். இந்தியன் 3 படம் மூலம் கம்பேக் கொடுக்கலாம் என ஆவலோடு காத்திருக்கிறார் காஜல். ஆனால் அப்படம் ரிலீஸ் ஆவதே கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில் இந்தியன் 2 படத்தின் ரிசல்ட்டால் இந்தியன் 3 படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்படத்தை கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். அதேபோல் கடைசியாக நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் இந்தியில் சிக்கந்தர் திரைப்படம் வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல், ஆனால் அப்படம் பிளாப் ஆனது.
நடிகை காஜல் அகர்வால் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு சுமார் ரூ.80 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. கடைசியாக அவர் நடித்த சிக்கந்தர் படத்திற்காக அவருக்கு ரூ.5 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு இருந்தது. அவரது கெரியரிலேயே அதிக சம்பளம் வாங்கியது இந்த படத்திற்காக தான் என கூறப்படுகிறது.
சினிமா மட்டுமின்றி விளம்பரங்களில் நடித்தும் கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார் காஜல் அகர்வால். இதுதவிர அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார் காஜல் அகர்வால். தற்போது சினிமாவில் நடிகையாக ஜொலித்து வரும் காஜல், விரைவில் இயக்குனராகும் ஐடியாவில் இருக்கிறாராம். அவர் இயக்கும் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
நடிகை காஜல் அகர்வால் கைவசம் தற்போது இரண்டு பிரம்மாண்ட படங்கள் உள்ளன. அதில் ஒன்று கன்னப்பா. இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார் காஜல். முதலில் அவர் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத்தை தான் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தனர். அவர் நடிக்க மறுத்துவிட்டதால் காஜலை நடிக்க வைத்துள்ளனர். இதுதவிர இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா திரைப்படத்திலும் காஜல் அகர்வால் நடித்து வருகிறாராம். அப்படத்தில் ராவணனாக நடிக்கும் நடிகர் யாஷுக்கு ஜோடியாக மண்டோதிரி கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்க உள்ளாராம்.