தனக்கும் தன்னுடைய குழந்தைக்கும் ஏதாவது ஏற்பட்டால் அதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஜாய் கிரிசில்டா மகளிர் ஆணையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கும், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கும் இடையே திருமணம் நடைபெற்றதா... இல்லையா என்பதே கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக பேசுபொருளாக மாறி இருக்கிறது. இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குறை கூறி வரும் நிலையில், நிறைமாத கர்ப்பிணியான ஜாய், தனக்கு நீதி வேண்டும் கமிஷனர் அலுவலகத்தை தொடர்ந்து, மகளிர் ஆணையத்தின் கதவையும் தட்டி உள்ளார்.
25
ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ்
ஜாய் கிரிசில்டா தனது முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற நிலையில், மாதம்பட்டி ரங்கராஜை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக அண்மையில் தெரிவித்தார். அதுதொடர்பான போட்டோக்களையும் இணையத்தில் பதிவிட்டு, பரபரப்பை கிளப்பினார். தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தனது குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை எனவும் கூறி இருந்தார். இதுதொடர்பாக ஒன்றரை மாதத்திற்கு முன் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார் ஜாய்.
35
திருமண மோசடி புகார்
அதில் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை ஏமாற்றி திருமண மோசடி செய்ததாக குற்றம் சாட்டி இருந்தார். தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்து இருந்தார். அதன்பேரில் இருவரையும் தனித் தனியாக அழைத்து போலீசார் பல மணிநேரம் விசாரணை நடத்தினர். இருந்தபோதும் தனது புகாரின் பேரில் ரங்கராஜ் மீது போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், தனது தரப்பு வழக்கறிஞரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுதாவுடன் சென்று சேப்பாக்கத்தில் உள்ள மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார் ஜாய். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னைப் போல 10 பெண்களை மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டி உள்ளார். அத்துடன், தனக்கும் தனது குழந்தைக்கும் ஏதாவது நடந்தால் அதற்கு ரங்கராஜ் தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
55
10 பெண்களை ஏமாற்றியுள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ்
இதையடுத்து பேசிய ஜாய் கிரிசில்டா தரப்பு வழக்கறிஞர் சுதா, இதுவரை அடையாறு, திருவான்மியூர், நீலாங்கரை காவல் நிலையங்களில் இருந்து பேசியதாக கூறினார். ஆனால் அவர்கள் இந்த வழக்கு தங்கள் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வராது எனக் கூறி ஜகா வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த விவகாரத்தில் மகளிர் ஆணையத்தின் மூலம் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஜாய் கிரிசில்டா, தனது குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என அழுத்தம், திருத்தமாக கூறி வருகிறார். ஆனால் அதற்கு ரங்கராஜ் தரப்பில் எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதேவேளையில் மாதம்பட்டி ரங்கராஜால், மேலும் 10 பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் விரைவில் வெளியே வந்து புகார் அளிப்பார்கள் என்றும் கூறப்பட்டு உள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.