உலகளவில் புகழ்பெற்ற தேடுபொறி தளமாக விளங்கி வருகிறது கூகுள். மனிதனின் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகவும் கூகுள் மாறிவிட்டது. ஏதேனும் தகவல் வேண்டுமானால் அனைவரும் முதலில் நாடுவது கூகுளை தான். அந்த அளவுக்கு பேமஸ் ஆன தேடுபொறி தளமாக விளங்கி வரும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வாக சுந்தர் பிச்சை பணியாற்றி வருகிறார். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை சென்னையில் தான் தன் பள்ளிப்படிப்பை முடித்தார்.
சுந்தர் பிச்சை சென்னையில் பள்ளி பயின்றபோது அசோக் நகரில் தான் வசித்து வந்தார். அங்கு சுந்தர் பிச்சையின் தந்தை ரெகுநாத பிச்சைக்கு சொந்தமாக வீடு இருந்தது. அந்த வீட்டை தற்போது விற்பனை செய்துள்ளார்களாம். சுந்தர் பிச்சை வளர்ந்த அந்த வீட்டை தமிழ் திரையுலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் சில படங்களில் பணியாற்றி இருக்கு சி மணிகண்டன் என்பவர் தான் தற்போது சொந்தமாக வாங்கி இருக்கிறாராம்.
இதையும் படியுங்கள்... குந்தவை - வந்தியத்தேவன் இடையேயான கியூட் ரொமான்ஸ் காட்சிகளுடன் கூடிய ‘அகநக’ பாடலின் முழு வீடியோ இதோ
இந்த சொத்தை வாங்கியது எப்படி என்பது பற்றி மணிகண்டன் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அதன்படி சுந்தர் பிச்சை வாழ்ந்த வீடு என தெரிந்ததும், அதனை வாங்க முடிவு செய்தாராம் மணிகண்டன். சுந்தர் பிச்சையின் தந்தை ரெகுநாத பிச்சை வாங்கிய முதல் சொத்து இது என்பதால் அவர் பெயரில் தான் இந்த வீடு இருந்ததாம். அவர் அமெரிக்காவில் இருந்ததால் இந்த வீட்டை வாங்குவதற்கான பணிகளை முடிக்க 4 மாதங்கள் ஆனதாம்.
வீட்டிற்கான சொத்து ஆவணங்களை தன்னிடம் வழங்கியபோது ரெகுநாத பிச்சை கண்கலங்கியதாக தெரிவித்துள்ள மணிகண்டன், சுந்தர் பிச்சையின் அம்மா தனக்கு சுவையான் பில்டர் காபி போட்டுக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். சுந்தர் பிச்சையின் தந்தை என அலட்டிக்கொள்ளாமல் பதிவாளர் அலுவலகத்தில் காத்திருந்து எல்லா வரிகளையும் செலுத்திவிட்டு சொத்துக்கான ஆவணங்களை ரெகுநாத பிச்சை தன்னிடம் ஒப்படைத்ததாக மணிகண்டன் கூறி உள்ளார்.