
தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத ஜோடி என்றால் அது விக்னேஷ் சிவன் - நயன்தாரா தான். ஏனெனில் இவர்களின் காதல் முதல் கல்யாணம் வரை அனைத்துமே சர்ச்சைகள் நிரம்பியதாக இருந்தது. நானும் ரவுடிதான் திரைப்படத்தில் பணியாற்றிய போது தான் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது. அப்படத்தில் உடன் பணியாற்றியவர்களுக்கே தெரியாமல் ரகசியமாக இருவரும் காதலித்து வந்தனர். பின்னர் அரசல் புரசலாக இவர்கள் லவ் மேட்டர் லீக் ஆனதால், இருவரும் ஜோடியாகவே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்தனர். அது மட்டும் இன்றி இருவரும் ஒன்றாக வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வது, அங்கு எடுத்த புகைப்படங்களை பதிவிடுவது என இன்ஸ்டாவில் ட்ரெண்டிங் ஜோடியாக வலம் வந்தனர்.
ஒரு கட்டத்தில் இருவருமே காதலை அறிவித்த பின்னர் அவர்கள் செல்லும் இடமெல்லாம் ‘உங்களுக்கு எப்போ கல்யாணம்?’ என்கிற கேள்வி தான் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது. அந்தக் கேள்விக்கு விடை அளிக்கும் விதமாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான நான்கே மாதங்களில் தாங்கள் பெற்றோர் ஆகிவிட்டதாக கூறி பரபரப்பை கிளப்பியது இந்த ஜோடி. பின்னர் தான் தாங்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதை அறிவித்தனர்.
விக்னேஷ் சிவன் மீது அதீத காதல் கொண்டிருக்கும் நயன்தாரா அவரை ஒரு இடத்தில் கூட விட்டுக் கொடுத்து பேசியதில்லை. அப்படி இருக்கையில் அவர் தன் கணவரை பற்றி மிகவும் இழிவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பின்னர் அந்த பதிவை நீக்கி விட்டதாக குறிப்பிட்டு ஒரு ஸ்கிரீன் ஷாட் இணையத்தில் வைரல் ஆகி வந்தது. அதில் முட்டாளை திருமணம் செய்து கொள்வது மிகப்பெரிய தவறு என்றும், உங்கள் கணவரின் நடவடிக்கைகளுக்கெல்லாம் நீங்கள் பொறுப்பாக முடியாது. ஆண்கள் வளருவதே இல்லை. எல்லாம் முடிந்து விட்டது என்னை தனியே விட்டு விடுங்கள் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பதிவில் ஒரு கெட்ட வார்த்தையும் இடம் பெற்று இருந்தது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் நயன்தாராவா இப்படி பதிவிட்டிருந்தார் என ஷாக் ஆகி அந்தப் பதிவின் ஸ்கிரீன் ஷாட்டை வைரலாக்கி வருகிறார்கள்.
நயன்தாரா பதிவிட்டு உடனே டெலிட் செய்து விட்டதாக குறிப்பிட்டு அந்த ஸ்கிரீன்ஷாட்டை வைரலாக்கி வந்தாலும், அந்தப் பதிவில் 17 மணி நேரத்திற்கு முன்னர் போடப்பட்டது என குறிப்பிடப்பட்டு இருந்ததால், அது நயன்தாரா மீது அவதூறு பரப்ப எடிட்டிங் செய்யப்பட்டது என்பது உறுதியாகி உள்ளது. இந்த பதிவில் 17 மணி நேரத்திற்கு முன் போடப்பட்டது என இருக்கும் நிலையில், அதை உடனே டெலிட் செய்துவிட்டதாக கூறுவது எப்படி என கேள்வி எழுப்பும் நயன்தாரா ரசிகர்கள் ‘மண்ட மேல இருக்க கொண்டைய மறந்துட்டீங்களே பாஸ்’ என கிண்டல் அடித்து வருகிறார்கள்.
நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற பெயரில் ஒரு படத்தை எடுத்து வருகிறார். அந்தப் படத்தில் நடன இயக்குனர் ஜானி மாஸ்டரும் பணியாற்றி இருப்பதை குறிப்பிட்டு அவருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன் ஸ்வீட் மாஸ்டர் என குறிப்பிட்டு இருந்தார். ஜானி மாஸ்டர் கடந்த ஆண்டுதான் பாலியல் வழக்கில் கைதானார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதன் காரணமாக அவருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜானி மாஸ்டருக்கு தன் படத்தில் விக்னேஷ் சிவன் வாய்ப்பளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அப்படத்தின் தயாரிப்பாளரான நயன்தாராவையும் நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். இந்த சர்ச்சைகளுக்கு நயன்தாரா பதில் அளித்தது போல ஒரு போலி பதிவை தான் தற்போது வைரல் ஆக்கி வருகிறார்கள்.