ராஞ்சனா படத்தின் மறுவெளியீட்டிற்கு நடிகர் தனுஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் செய்யப்பட்ட மாற்றம்தான் அவரை கோபப்படுத்தியுள்ளது. AI தொழில்நுட்பம் மூலம் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றியதன் மூலம் படத்தின் ஆன்மா இழந்துவிட்டதாகவும், அதற்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்தும் படக்குழுவினர் அதைப் பொருட்படுத்தவில்லை என்றும் நடிகர் தனுஷ் கூறியுள்ளார். நடிகர் தனுஷின் இந்த பதிவு இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
24
ராஞ்சனா ஏஐ கிளைமாக்ஸ்
12 ஆண்டுகளுக்கு முன்பு தான் ஒப்புக்கொண்ட படம் இதுவல்ல. AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கலைப்படைப்புகளில் மாற்றங்களைச் செய்வது கவலையளிக்கிறது. இது சினிமாவின் பாரம்பரியத்திற்கும் நேர்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இதைத் தடுக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் தனுஷ் வலியுறுத்தியுள்ளார். அசல் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷின் கதாபாத்திரம் இறந்துவிடும். ஆனால், மறுவெளியீட்டில் அவர் மருத்துவமனையில் கண்விழிப்பது போலக் காட்டப்பட்டுள்ளது.
34
ரிலீசுக்கு ரெடியான ராஞ்சனா 2
2013 ஆம் ஆண்டு வெளியான ராஞ்சனா படத்தை, ஹிமாஷு சர்மா எழுதி ஆனந்த் எல் ராய் இயக்கி இருந்தார். இப்படம் மூலம் தான் நடிகர் தனுஷ் இந்தியில் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்தார். இப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. தேரே இஸ்க் மெயின் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் மாதம் 28-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
ராஞ்சனா படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதன் முதல் பாகத்தை கடந்த ஆகஸ்ட் 1ந் தேதி ரீ-ரிலீஸ் செய்தனர். அப்படத்தை விளம்பரப்படுத்தும்போதே ஏஐ மூலம் புது கிளைமாக்ஸ் உடன் இந்தப் படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக கூறினர். இதன் காரணமாகவே இதனை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி இருந்தனர். ஆனால் அந்த ஏஐ கிளைமாக்ஸுக்கு நடிகர் தனுஷ் தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், அது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.