சினிமா நடிகைகளை இவ்வளவு கேவலமான முறையில் பேசுவது என்ன அரசியல் நாகரிகம். இதைத்தான் உங்கள் கொள்கை சொல்கிறதா? தலைவர்கள் கற்றுக் கொடுத்தார்களா? என நடிகர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சையாக பேசியது இப்போது பேசுபொருளாகியுள்ளது.
''அப்துல் கலாம் கனவு காணச் சொன்னார். ஸ்டாலின் ஒரு படி மேலே போய், உங்கள் கனவைச் சொல்லுங்கள் நான் நிறைவேற்றி வைக்கிறேன் என்கிறார். எனக்கு நயன்தாரா வேண்டும் என்று கனவு கண்டால், ஸ்டாலின் அதைச் செய்து கொடுப்பாரா?'' என்று பேசிய சி.வி.சண்முகத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
24
தென்னிந்த நடிகர் சங்கம் கண்டனம்
இந்த நிலையில், சி.வி.சண்முகம் பெண்களை அவதூறாக பேசுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தென்னிந்த நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், 'பாராளுமன்ற உறுப்பினர் திருவாளர்.சி.வி.சண்முகம் அவர்களுக்கு, சமீபத்தில் தாங்கள் பேசிய மிகவும் கீழ்த்தரமான கேட்கவே கூசுகின்ற காணொளி எங்கள் பார்வைக்கு வந்தது.
அடிப்படை கண்ணியம் வேண்டும்
தொடர்ந்து நடிகர் சமூகத்தின் கண்டனங்களும் கோபங்களும் கைப்பேசி வழியாக தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. தேர்தல் களத்தில் கருத்துரீதியாக கொள்கைரீதியாக கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அடிப்படை கண்ணியத்தோடு, அதுவும் பொறுப்பில் இருக்கின்றவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாளவேண்டி இருக்கிறது. ஆனால் தாங்கள் சபை நாகரீகத்தை விட்டொழித்து ஒலிபெருக்கி மூலமாக எங்கள் சகோதரி நயன்தாராவை உட்படுத்தி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது.
34
அண்டை நாட்டிடமா கேட்க முடியும்
ஐயா அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். சரி மக்கள் காண்கின்ற கனவை நினைவாக்கித் தர அண்டை நாட்டிடமா கேட்க முடியும். மக்களின் கனவு என்பது, ஒரு ஏழையின் கூரையாக இருக்கிறது. விவசாயி மகனின் கல்வியாக இருக்கிறது, நடுத்தர வர்க்கத்தின் பெண்ணின் வேலை வாய்ப்பாக இருக்கிறது. தொழிலதிபர்களின் உள்கட்டமைப்பாக இருக்கிறது, எல்லை காக்கும் ராணுவ வீரனுக்கு பாதுகாப்பாக இருக்கிறது, ஆனால் தங்கள் கனவு என்னவாக இருக்கிறது என்று வெட்கப்படாமல் பொதுக்கூட்டத்தில் வெளிப்படையாக பேசியதற்கு பாராட்டவா முடியும்.
இது பெண்களின் யுகம் அவர்கள் இல்லாத துறையே இல்லை வான் கிழிக்கும் ராக்கெட்டில் இருந்து மருத்துவராக, ஆசிரியராக, வழக்கறிஞராக பெரும் இயந்திரங்களை இயக்குபவர்களாக, பேருந்து ஓட்டும் பெண்களை சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது. அரசியலில் கோலோச்சிய இந்திரா காந்தி அம்மையார் உங்கள் தலைவி ஜெயலலிதா அம்மையாரை விடவா உதாரணம் இருக்க முடியும். அப்படி இருக்க, சினிமா நடிகைகளை இவ்வளவு கேவலமான முறையில் பேசுவது என்ன அரசியல் நாகரிகம்.
இனிமேல் இப்படி பேசக்கூடாது
இதைத்தான் உங்கள் கொள்கை சொல்கிறதா? தலைவர்கள் கற்றுக் கொடுத்தார்களா? அல்லது அவர்கள் ஆமோதிக்கிறார்களா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற மரியாதை இன்னும் இருக்கிறது என்ற காரணத்தினால் நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில் கேட்கிறோம். தங்களிடமிருந்து மன்னிப்பும் இனி எங்கள் துறை சார்ந்த பெண் திறன்களை மரியாதை குறைவாக பேசமாட்டேன் என்கின்ற உத்தரவாதமும்' என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.