பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் ராக்கி சாவந்த். இவர் பாலிவுட் படங்களில் நடித்து பாப்புலர் ஆனதை விட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தான் பாப்புலர் ஆனார். இவர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானார். அதன்பின் மராத்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
இவர் இந்தி மட்டுமின்றி கன்னடா, மராத்தி, தெலுங்கு, ஒடியா போன்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு தனக்கான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்தியது பேசுபொருள் ஆனது.
முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததை அடுத்து, கடந்த சில வாரங்களுக்கு முன் அடில் துரானி என்பவரை திருமணம் செய்துகொண்டார் ராக்கி சாவந்த். திருமணமான பத்தே நாட்களில் நடிகை ஷெர்லின் சோப்ரா கொடுத்த புகாரின் பேரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார் ராக்கி சாவந்த். சில நாட்கள் சிறைவாசத்துக்கு பின் விடுதலை ஆகி வெளியே வந்தார்.
எப்போதும் தான் ஒரு பேசுபொருளாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இவர் அரசியலிலும் களமிறங்கினார். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு படுதோல்வி அடைந்த அவர், வெறும் 15 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.