Rahman Music
தமிழ் சினிமாவை பொறுத்தவரை இளையராஜா என்கின்ற மாமேதையின் ஆட்சி தான் எங்கும் பறந்து விரிந்து கிடந்தது. இந்த சூழலில் தான் ஏ.ஆர் ரகுமான் என்கின்ற இளம் புயல் ஒன்று தமிழ் திரை உலகில் அறிமுகமானது. அவருடைய இசையில் வெளியான அனைத்து பாடல்களும் மக்களுக்கு மிகவும் புதிதாய் தோன்றியது. 1992 ஆம் ஆண்டு வெளியான "ரோஜா" என்ற திரைப்படம் தொடங்கி, இந்த 2024ம் ஆண்டு வரை கடந்த 32 ஆண்டுகளாக தமிழ் திரை உலகை தனது இசையால் கட்டிப்போட்டு இருக்கிறார் ஏ.ஆர் ரகுமான்.
அந்த வகையில் அவருடைய பாடல்களில் பல சிறப்புகள் இருக்கிறது. இருப்பினும் டிரம்பெட் என்னும் இசை கருவியை வைத்து, பல படங்களில் மிகச்சிறந்த பிஜிஎம்-ஐ கொடுத்து அசத்தியவர் ரகுமான். அந்த வகையில் கடந்த 1997ம் ஆண்டு பிரபல நடிகர் நாகார்ஜுனா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் "ரட்சகன்". இதுதான் நாகர்ஜுனாவிற்கு முதல் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரவீன் காந்தி இயக்கத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவான இந்த திரைப்படத்தில் நாகர்ஜுனா கோவப்படும் பொழுதெல்லாம் ஒரு பிஜிஎம் தோன்றும். அதை உன்னிப்பாக கவனித்தீர்கள் என்றால், அதை முழுக்க முழுக்க டிரம்பெட் கொண்டு வாசித்து அசத்தியிருப்பார் ஏ.ஆர் ரகுமான். உண்மையிலும் இன்றும் பலரது செல்போன்களில் இது காலர் டியூனாக உள்ளது என்றால் அது மிகையல்ல.
நம்ரதாவுக்காக சூப்பர் ஸ்டார் மகளை நிராகரித்த மகேஷ் பாபு!
Muthu Movie BGM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர் ரகுமானுக்கு ஒரு மிக நெருங்கிய தொடர்பு உண்டு. இவர்கள் இருவரின் காம்போவில் வெளியான பல பாடல்கள் மெகா ஹிட் பாடல்களாக மாறியிருக்கிறது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் கடந்த 1995ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் முத்து. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இன்ட்ரோ காட்சியில் வரும் பிஜிஎம் முழுக்க முழுக்க ட்ரம்பெட் இசைக்கருவியால் வாசிக்கப்பட்டிருக்கும். இன்றளவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு இந்த பிஜிஎம் மறக்க முடியாத ஒரு பிஜிஎம் என்றே கூறலாம்.
Padayappa
அதேபோல 1999ம் ஆண்டு பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் ஆன திரைப்படம் தான் "படையப்பா". இந்த திரைப்படத்தில் உறவினர்களால் ஏமாற்றப்பட்டு, தனது தந்தை கொடுத்த நிலத்தை வைத்து உயரும் ரஜினிகாந்துக்கு ஒரு மாஸ் போட்டிருப்பார் ரகுமான். அது தான் "வெற்றிக்கொடி கட்டு" என்ற பாடல். பலருக்கும் உத்வேகம் அளிக்கும் ஒரு பாடல் இது, இதில் இடையில் ஒரு மாஸ் BGMஐ டிரம்பெட் இசை கருவியை மட்டுமே பயன்படுத்தி உச்சகட்ட சுவாரசியத்தை கூட்டி இருப்பார் ஏ.ஆர் ரகுமான்.
Indian movie
அதேபோல 1996ம் ஆண்டு பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இந்தியன். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் இன்றளவும் பலருக்கு மிகவும் பிடித்தமான பாடல்கள். அந்த வகையில் இந்தியன் படத்தில் வரும் "மாயா மச்சீந்திரா" என்ற பாடல் 90ஸ் கிட்ஸ்களில் மிகவும் ஃபேவரட் பாடல்களில் ஒன்று. இன்று அந்த பாட்டை கேட்டால் கூட ஒரு தனி வைப் தான். அது மட்டுமல்ல இந்த பாடலின் இடையில் வரும் அந்த பிஜிஎம் பலருக்கு பிடித்தமான பிஜிஎம், இதிலும் முழுக்க முழுக்க டிரம்பெட் கருவியினால் இசைத்து அசத்தியிருப்பார் ஏ.ஆர் ரகுமான்.
Pathu Thala
கடந்த 2023 ஆம் ஆண்டு பிரபல நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் ரகுமான் இசையில் வெளியான திரைப்படம் தான் "பத்து தல". இந்த திரைப்படம் பெரிய அளவில் வசூல் ரீதியாக சாதனை புரியவில்லை என்றாலும் இப்படத்தின் பின்னணி இசை பெரிய அளவில் பலராலும் பாராட்டப்பட்டது. அந்த வகையில் நடிகர் சிம்பு தோன்றும் காட்சிகளில் மாஸ் பின்னணி இசை ஒன்று அமைக்கப்பட்டு இருக்கும். அது முழுக்க முழுக்க ட்ரம்பெட் இசை கருவியால் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரே ஒரு இசை கருவியை வைத்துக்கொண்டு பல சிறப்பான பின்னணி இசைகளை கொடுத்து அசத்தியவர் தான் ரகுமான்.
"சண்டைக்கு வரமாதிரியே பேசுறாங்க" ஜாக்குலினை டார்கெட் செய்யும் சுனிதா - கூட்டணியின் இணையும் அன்ஷிதா!