தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் கடந்த 1983-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி சென்னையில் பிறந்தார். இவர் 2 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக விஜேதா என்கிற படத்தில் நடித்தார். இதையடுத்து வளர்ந்து அனிமேட்டர் ஆக வேண்டும் என ஆசைப்பட்ட அல்லு அர்ஜுன், பின்னர் சினிமாவின் பக்கம் திரும்பினார். இவர் கடந்த 2003-ம் ஆண்டு வெளிவந்த கங்கோத்ரி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
கங்கோத்ரி படம் ஹிட் ஆனாலும் அல்லு அர்ஜுனை மிகவும் பேமஸ் ஆக்கியது அவர் 2004-ம் ஆண்டு நடித்த ஆர்யா திரைப்படம். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதும் இவருக்கான ரசிகர் வட்டமும் பெரிதானது. இதையடுத்து 2005-ல் இவர் நடித்த Bunny திரைப்படம் ரிலீசாகி அல்லு அர்ஜுனை முன்னணி நடிகராக உயர்த்திவிட்டது. பின்னர் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து இன்று தெலுங்கு திரையுலகின் தவிர்க்க முடியாத நாயகனாக உயர்ந்துவிட்டார் அல்லு அர்ஜுன்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அலவைகுண்டபுரமுலு மற்றும் புஷ்பா ஆகிய திரைப்படங்கள் அதிரி புதிரியான வெற்றியை ருசித்தது. குறிப்பாக புஷ்பா திரைப்படம் பான் இந்தியா அளவில் மாபெரும் வெற்றிபெற்று அவரை பான் இந்தியா ஸ்டாராக உயர்த்தியது. தற்போது புஷ்பா படத்தின் 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். அவர் தனது 41-வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தற்போதே சமூக வலைதளங்களில் களைகட்ட தொடங்கி உள்ளன.
நடிகர் அல்லு அர்ஜுன் படங்களைத் தவிர விளம்பரங்களிலும் அதிகளவில் நடித்து வருகிறார். இவர் ஒரு விளம்பரத்தில் நடிக்க ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். அதுமட்டுமின்றி இவர் ஐதராபாத்தில் சொந்தமாக நைட் கிளப் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதன்மூலமும் இவருக்கு லட்சக்கணக்கில் வருவாய் கிடைத்து வருகிறதாம்.
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கார் மீது அலாதி பிரியம். இவர் ரூ.1.2 கோடி மதிப்புள்ள ஜாகுவார் XJL, ரூ.86 லட்சம் மதிப்புள்ள ஆடி A7, ரூ.80 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ X5 ஆகிய சொகுசு கார்கள் உள்ளன. இதுதவிர தனக்கு தேவையான அதிநவீன வசதிகளுடன் கூடிய வேனிட்டி வேன் ஒன்றையும் சொந்தமாக வைத்துள்ளார் அல்லு அர்ஜுன். இந்த வேனின் மதிப்பு மட்டும் ரூ.7 கோடியாம்.
அல்லு அர்ஜுனுக்கு சொந்தமாக ஐதராபாத்தில் பிரம்மாண்ட பங்களா ஒன்றும் உள்ளது. அதன் மதிப்பு மட்டும் ரூ.100 கோடி இருக்குமாம். நடிகர் அல்லு அர்ஜுன் சொந்தமாக ஆஹா என்கிற ஓடிடி தளத்தையும் வைத்துள்ளார். இதன்மூலம் ஏராளமான பிளாக்பஸ்டர் படங்கள், வெப் தொடர்களையும் வெளியிட்டு வருகிறார். அல்லு அர்ஜுனுக்கு கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர் சினேகா ரெட்டி என்பவரை மணந்துகொண்டார். இந்த ஜோடிக்கு அல்லு அயன் என்கிற மகனும், அல்லு அர்ஹா என்கிற மகளும் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... மீண்டும் நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்ய ரெடியான ஜெய்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு