
தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். அவர் நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகின. அதில் கடந்த பிப்ரவரி மாதம் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆனது. லைகா நிறுவனம் தயாரித்திருந்த அப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த அஜித், ஆதிக் ரவிச்சந்திரனின் குட் பேட் அக்லி திரைப்படம் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தார். கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.240 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
நடிகர் அஜித் குமாருக்கு ஒரு இயக்குனரின் ஒர்கிங் ஸ்டைல் பிடித்துவிட்டால் அவர்களுடன் தொடர்ச்சியாக பணியாற்றுவார். அதன்படி இதற்கு முன்னர் சிறுத்தை சிவா, எச்.வினோத் ஆகியோருடன் தொடச்சியாக படங்களில் பணியாற்றிய அஜித், தற்போது ஆதிக் உடன் அடுத்தடுத்த படங்களில் பணியாற்ற உள்ளார். குட் பேட் அக்லி படத்தினால் அஜித்தின் கவனத்தை ஈர்த்த ஆதிக்கிடம் தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் பொறுப்பை ஒப்படைந்துள்ளாராம் ஏகே. அதன்படி அஜித்தின் 64வது படத்தையும் ஆதிக் தான் இயக்க உள்ளாராம். அதை தயாரிக்கப்போவது யார் என்பது தான் புரியாத புதிராக இருந்து வந்தது.
அஜித்தின் ஏகே 64 திரைப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளதாக கடந்த மாதம் பேச்சு அடிபட்டது. ஆனால் அவரோ தன்னுடைய அடுத்த 10 படங்களின் இயக்குனர்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டபோது அதில் ஆதிக் பெயர் இடம்பெறவில்லை. இதனால் ஏகே 64 படத்தை யார் தான் தயாரிக்கப்போகிறார்கள் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்த நிலையில், ஏகே 64 படத்தை தயாரிக்கும் வாய்ப்பை தன்னுடைய தீவிர ரசிகர் ஒருவரிடமே ஒப்படைத்து இருக்கிறாராம் அஜித் குமார்.
அந்த தீவிர ரசிகர் வேறு யாருமில்லை... ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தான். இவர் இதற்கு முன்னர் அஜித்தின் வேதாளம், விவேகம் ஆகிய படங்கள் எக்சிக்யூடிவ் புரொடியூசராக பணியாற்றி இருக்கிறார். இதுதவிர அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ததும் இவர்தான். தற்போது அவரே அஜித்தின் ஏகே 64 திரைப்படத்தின் தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். ஏகே 64 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஏகே 64 திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளதாம். நடிகர் அஜித்தின் கெரியரில் அதிக பட்ஜெட்டில் உருவான படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளது. தற்போது நடிகர் அஜித் கார் ரேஸில் பிசியாக உள்ளதால், அதை முடித்த பின்னர் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.