
இந்த பிரபல நடிகை தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி பல பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, தேவ் படேலுக்கு ஜோடியாக ஒரு ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார். விக்கி கௌஷல், அனில் கபூர், அதிவி சேஷ் மற்றும் ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்ட பல பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் அவர் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் தென்னிந்திய நடிகருக்கும் இவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அவர் வேறு யாருமில்லை.. நடிகை சோபிதா துலிபாலா தான். அவரின் திரை வாழ்க்கை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1992-ம் ஆண்டு ஒரு தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்தார் சோபிதா துலிபாலா. அவரின் தந்தை வேணுகோபால் ஆந்திரப் பிரதேசத்தில் கடற்படைப் பொறியாளராக இருந்தார். அவரின் தாய் சாந்தா காமாட்சி ஆரம்பப் பள்ளி ஆசிரியராக இருந்தார். சோபிதாவுக்கு சமந்தா என்ற சகோதரியும் உள்ளார். விசாகப்பட்டினத்தில் வளர்ந்த சமந்தா உயர் கல்விக்காக தனது 11-வது வயதில் மும்பை சென்றார். மும்பை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் மற்றும் பொருளாதார கல்லூரியில் கார்ப்பரேட் சட்டம் படித்தார்.
படிப்பைத் தவிர, சோபிதா துலிபாலா குச்சிப்புடி மற்றும் பரதநாட்டியம் ஆகியவற்றில் பயிற்சி பெற்ற கிளாசிக்கல் நடனக் கலைஞர் ஆவார். சோபிதா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது அவரின் தோழி ஒருவர் மிஸ் இந்தியா அலுவலகத்தில் பயிற்சி பெற்று வந்தார். அப்போது வரவிருக்கும் போட்டிக்கான தேர்வில் கலந்து கொள்ளுமாறு பரிந்துரைத்ததை அடுத்து, அதில் பங்கேற்றார். பின்னர், சோபிதா மிஸ் எர்த் 2013 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், ஆனால் முதல் 20 இடங்களுக்குள் வர முடியவில்லை. இருப்பினும், நடிகைக்கு மிஸ் ஃபோட்டோஜெனிக், மிஸ் பியூட்டி ஃபார் எ காஸ், மிஸ் டேலண்ட் மற்றும் மிஸ் பியூட்டிஃபுல் ஃபேஸ் ஆகிய துணைத் தலைப்புகள் கிடைத்தன.
2016 ஆம் ஆண்டு ராமன் ராகவ் 2.0 படத்தின் மூலம் சோபிதா துலிபாலா சினிமாவில் அறிமுகமானார். அதில் விக்கி கவுஷலுக்கு ஜோடியாக நடித்தார். 2018 இல் அதிவி சேஷுடன் இணைந்து கூடாச்சாரி மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்தார். இருப்பினும், 2019-ம் ஆண்டு Amazon Prime ஒளிபரப்பான மேட் இன் ஹெவன் சீரிஸ் சோபிதாவின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது.
கீது மோகன்தாஸ் இயக்கிய மூத்தோன் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார். அதே நேரத்தில், சோபிதா தி பாடி என்ற ஹிந்தி படத்தில் இம்ரான் ஹாஷ்மியுடன் நடித்தார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1, 2 படங்களில் சோபிதா நடித்திருந்தார். சோபிதா பின்னர் அனில் கபூர் மற்றும் ஆதித்யா ராய் கபூர் ஆகியோருடன் தி நைட் மேனேஜர் என்ற வெப் சீரிஸில் நடித்தார். ஹாலிவுட்டில் தேவ் படேலின் இயக்குனராக அறிமுகமான மங்கி மேன் படத்தில் நடித்திருந்தார்.
இப்போது பிரபலமான முகமாக இருக்கும் சோபிதா துலிபாலா ஒரு முறை தனது ஸ்கின் டோனுக்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.தனது நிறத்தின் காரணமாக பலமுறை நிராகரிக்கப்பட்டதாகவும் சோபிதாவே ஒருமுறை கூறியிருந்தார். இதுகுறித்து பேசிய அவர் “ எனது விளம்பர ஆடிஷன்களின் போது நான் கலராக இல்லை என்று பல முறை சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. முகத்திற்கு நேராகவே பலர் என்னை விமர்சித்தனர். நீங்கள் அழகாக இல்லை என்று கூறினர்.” என்று தெரிவித்தார்.
இதனிடையே நாக சைதன்யாவும் சோபிதாவும் டேட்டிங்கில் இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் வெளியான நிலையில் இருவரும் அதிகாரப்பூர்வமாக தங்கள் உறவை அறிவித்தனர். கடந்த 8-ம் தேதி நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
நாக சைதன்யா முன்னதாக நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். படப்பிடிப்பில் சந்தித்த இந்த ஜோடி சில நாட்கள் டேட்டிங் செய்த நிலையில் 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இந்த திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. 2021-ம் ஆண்டில் நாக சைதன்யா - சமந்தா இருவரும் பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.