
நடிகை சமந்தாவின் தந்தை தெலுங்கர், அவரது அம்மா ஒரு மலையாளி. ஆனால் நடிகை சமந்தா பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். இவர் பள்ளிப்படிப்பை பல்லாவரத்தில் தான் முடித்தார். இதையடுத்து கல்லூரி படிப்பை ஸ்டெல்லாம் மேரிஸ் கல்லூரியில் முடித்தார். இப்படி சென்னை பல்லாவரத்தில் பிறந்த வளர்ந்த பொண்ணு தான் தற்போது பாலிவுட் வரை சென்று பட்டைய கிளப்பி வருகிறது. நடிகை சமந்தா சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அவரின் இந்த 13 வருட பயணத்தை பற்றி தற்போது பார்க்கலாம்.
நடிகை சமந்தாவை ஹீரோயினாக அறிமுகப்படுத்தியது கவுதம் மேனன் தான். அவர் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சமந்தா. அதேபோல் தமிழிலும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவின் தோழியாக ஒரு கேமியோ ரோல் பண்ணி இருந்தார். முதல் படமே அதிரி புதிரியான வெற்றியை பதிவு செய்ததால் சமந்தாவுக்கு அடுத்தடுத்து ஹீரோயின் சான்ஸ் குவிந்தது.
இதையடுத்து தமிழில் பத்ரி வெங்கடேஷ் இயக்கிய பானா காத்தாடி திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்தார் சமந்தா. இது சிறு பட்ஜெட் படமாக இருந்தாலும், இப்படத்தில் சமந்தாவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. குறிப்பாக இப்படத்தின் பாடல்கள் வேறலெவலில் ஹிட் ஆனதால் படமும் வெற்றிவாகை சூடியது. பின் மாஸ்கோவின் காவிரி படத்தில் நடித்த சமந்தா அதன் பின் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.
இதையும் படியுங்கள்... சம்பளத்தை அதிரடியாக குறைத்த திரிஷா... லியோ படத்திற்காக அவர் வாங்கியது இவ்வளவு தானா?
அங்கு வம்சி இயக்கிய பிருந்தாவனம், ராஜமவுலியின் நான் ஈ என தொடர்ந்து முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து தன் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்திக் கொண்ட சமந்தாவுக்கு பின் கோலிவுட்டில் விஜய்யுடன் கத்தி மற்றும் தெறி, சூர்யாவுக்கு ஜோடியாக அஞ்சான், தனுஷுடன் தங்கமகன், சிவகார்த்திகேயன் ஜோடியாக சீமராஜா என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன்மூலம் டாப் ஹீரோயின் லிஸ்ட்டில் இணைந்தார் சமந்தா.
இப்படி சினிமாவில் டாப் கியரில் சென்று கொண்டிருந்தபோதே தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டு அதிர்ச்சி கொடுத்த சமந்தா, திருமணத்துக்கு பின்னரும் படங்களில் செம்ம பிசியாக நடித்து வந்தார். குறிப்பாக திருமணத்துக்கு பின் இவர் நடித்த யு டர்ன், சூப்பர் டீலக்ஸ், ஓ பேபி, மஜிலி, இரும்புத்திரை ஆகிய திரைப்படங்கள் வேறலெவலில் ஹிட் அடித்ததால், சமந்தாவின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கியது.
இப்படி சூப்பராக சென்றுகொண்டிருந்த சமந்தாவின் கெரியரில் தடங்கலாக அமைந்த திரைப்படம் தான் ஜானு. 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான இப்படம் அங்கு அட்டர் பிளாப் ஆனது. இப்படத்துக்கு பின் கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் கடும் மன உளைச்சலில் இருந்த சமந்தாவுக்கும், அவரது கணவர் நாகசைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதையும் படியுங்கள்... குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷனில் நடந்த திடீர் டுவிஸ்ட்... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
விவாகரத்துக்கு பின்னர் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிய சமந்தா, புஷ்பா படத்தில் ஐட்டம் சாங்கிற்கு படு கவர்ச்சியாக ஆட்டம் போட்டு தன் மார்க்கெட்டை மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டார். இதன்பின்னர் இவர் நடிப்பில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றியடைந்ததால் சமந்தாவுக்கு பாலிவுட்டில் இருந்தும் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
இப்படி அசுர வேகத்தில் சென்றுகொண்டிருந்த சமந்தாவின் கெரியரில் திடீரென வீசிய புயல் போல் வந்தது தான் மயோசிடிஸ் நோய் பாதிப்பு. இந்த அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த சமந்தா கடந்த 4 மாதங்களா படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். தற்போது அதிலிருந்து படிப்படியாக மீண்டு வரும் சமந்தா, தான் ஒரு சிங்கப்பெண் என்பதை மீண்டும் நிரூபிக்க தீவிரமாக உடற்பயிற்சி செய்து கம்பேக் கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறார். இவர் நடித்துள்ள சாகுந்தலம் என்கிற வரலாற்று திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், இன்றுடன் சினிமாவில் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகை சமந்தாவுக்கு வாழ்த்து மழை குவிந்து வருகிறது. இதுகுறித்து டுவிட்டரில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள சமந்தா, “உங்களது அன்பை புரிந்துகொள்கிறேன். இத்தகைய அன்பு தான் என்னை தொடர்ந்து பயணிக்க வைக்கிறது. இப்போதும், எப்போதும் நான் என்னவாக இருக்கிறேனோ அது உங்களால் தான். இப்போது தான் தொடங்கியது போல் உள்ளது ஆனால் 13 ஆண்டுகள் ஆகிவிட்டது” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வனா இது..? சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஜெயம் ரவி