நடிகை அதிதி ராவ் ஹைடரி, கடந்த 1986-ம் ஆண்டு அக்டோபர் 28-ந் தேதி ஐதராபாத்தில் பிறந்த இவர், வளர்ந்தது எல்லாம் டெல்லியில் தான். இவரது பெற்றோர் இவருக்கு 2 வயது இருக்கும்போதே விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
இதையடுத்து தாயுடன் டெல்லியில் குடியேறிய அதிதி ராவ், கல்லூரி படிப்பை முடித்ததும் மாடலிங் துறையில் ஆர்வம் காட்டினார். பின்னர் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இவர் கடந்த 2006-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரஜாபதி என்கிற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் தமிழில் சிருங்காரம் என்கிற படத்தில் நடித்தார்.
இதையடுத்து பாலிவுட் பக்கம் சென்ற இவர் அங்கு அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர், அக்ஷய் குமார், அமிதாப் பச்சன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார்.
இதையடுத்து மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார். பின்னர் உதயநிதி உடன் சைக்கோ, துல்கர் சல்மான் உடன் ஹே சினாமிகா என தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்தார்.
தற்போது காந்தி டாக்ஸ் என்கிற படத்தில் விஜய் சேதுபதி உடன் நடித்து வருகிறார் அதிதி. இது ஒரு மவுன படமாகும். இப்படத்தை கிஷோர் பாண்டுரங் இயக்குகிறார்.
இவ்வாறு நடிப்பில் பிசியாக இருக்கும் அதிதி, மறுபுறம் காதல் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இவர் நடிகர் சித்தார்த்தை காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் பரவி வருகிறது.
இதனை இருவரும் உறுதிபடுத்தாவிட்டாலும், எங்கு சென்றாலும் ஜோடியாகவே சுற்றி வருகின்றனர். இன்று கூட தனது பிறந்தநாளை சென்னையில் சித்தார்த் உடன் தான் கொண்டாடி வருகிறார் அதிதி.