பிரபலமாக்கிய லொல்லு சபா
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொல்லு சபா நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆனவர் சந்தானம். இவரின் திறமையை பார்த்து வியந்துபோன நடிகர் சிம்பு தனது படங்களில் நகைச்சுவை நடிகராக நடிக்க தொடர்ந்து வாய்ப்பளித்து வந்தார். அந்த வகையில், காதல் அழிவதில்லை, அலை, மன்மதன், வல்லவன், வானம் என பல்வேறு படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றி உள்ளனர்.
பிசியான காமெடியன்
நாளடைவில் தமிழ் சினிமாவின் பிசியான காமெடியனாக உருவெடுத்தார் சந்தானம். குறுகிய காலத்தில் விஜய், அஜித், ரஜினி, சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக ஜொலித்தார். தமிழ் சினிமாவில் இவரது காமெடிக்கென ஓடிய படங்கள் ஏராளம் உள்ளன.
ஹீரோவாக உயர்ந்த சந்தானம்
இதையடுத்து படிப்படியாக படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட சந்தானம், ஹீரோவாக அவதாரம் எடுத்தார். கடந்த 2014-ம் ஆண்டு வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் மூலம் இவர் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, ஏ1, டகால்டி, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி என பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்தார்.
மாஸ்டர் பிரபலத்துடன் கூட்டணி
தற்போது இவர் கைவசம் ஏஜண்ட் கண்ணாயிரம், மண்ணவன் வந்தானடி, சர்வர் சுந்தரம் ஆகிய படங்கள் உள்ளன. இந்நிலையில், நடிகர் சந்தானம் அடுத்ததாக இயக்குனர் ரத்னகுமாருடன் கூட்டணி அமைத்துள்ளார். வைபவ்வின் மேயாத மான், அமலா பால நடித்த ஆடை போன்ற படங்களை இயக்கியுள்ள ரத்ன குமார், விஜய்யின் மாஸ்டர், கமலின் விக்ரம் போன்ற படங்களுக்கு டயலாக் ரைட்டராகவும் பணியாற்றி உள்ளார்.