பிரேம்ஜியின் அறிமுகம்
நடிகரும், இசையமைப்பாளருமான கங்கை அமரனின் இளைய மகனான பிரேம்ஜி, சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையில் கடந்த 1997-ம் ஆண்டு வாண்டட் என்கிற படத்தை இயக்கினார். இப்படத்தில் வெங்கட் பிரபு மற்றும் எஸ்.பி.பி.சரண் நாயகர்களாகவும், கங்கை அமரன் மற்றும் எஸ்.பி.பி காமெடியன்களாகவும் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் இப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.
பாப்புலர் ஆக்கிய சென்னை 28
இதையடுத்து யுவன் சங்கர் ராஜாவிடம் உதவியாளராக சேர்ந்த பிரேம்ஜி, பல்வேறு படங்களில் பாடல் பாடுவது, சில படங்களுக்கு பின்னணி இசை அமைப்பது என இசையின் மீது ஆர்வம் காட்டி வந்தார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கிய முதல் படமான சென்னை 28 மூலம் இவரது நகைச்சுவை நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததை அடுத்து நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் பிரேம்ஜி.
பன்முகத்திறமை கொண்ட கலைஞன்
அஜித், சிம்பு, சூர்யா, ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து அசத்திய பிரேம்ஜி, அவ்வப்போது சில படங்களுக்கு இசையமைப்பது, பாடல்கள் பாடுவது என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கி வந்தார்.
பிரேம்ஜி வில்லனா?
இந்நிலையில், நடிகர் பிரேம்ஜி வில்லனாக நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே 20 படத்தில் நடித்து வருகிறார். அனுதீப் இயக்கும் இப்படத்தில் தான் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பிரேம்ஜி நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதுவரை நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த பிரேம்ஜிக்கு வில்லன் ரோல் செட் ஆகுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.