
90ஸ் கிட்ஸின் பேவரைட் ஹீரோக்களில் ஒருவர் சரத்குமார். 1990களில் இவர் நடிப்பில் வெளிவந்த நாட்டாமை, சூரியவம்சம், நட்புக்காக போன்ற படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த படங்களை தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் கூட அதற்கான மவுசு குறைவதில்லை. இப்படி காலம் கடந்து கொண்டாடப்படும் பல கிளாசிக் ஹிட் படங்களை கொடுத்தவர் சரத்குமார். இவருக்கு சினிமா வாய்ப்பு என்பது எளிதில் கிடைத்துவிடவில்லை. சினிமாவுக்கு வரும் முன் பல்வேறு கஷ்டங்களை சந்தித்திருக்கிறார். படிப்படியாக முன்னேறி தான் இந்த டாப் ஹீரோவாக உயர்ந்திருக்கிறார்.
சரத்குமாரின் அப்பா ஆல் இந்தியா ரேடியோவில் வேலை பார்த்தவர். சரத்குமாருக்கு பிட்னஸில் ஆர்வம் அதிகம். இதனால் தன்னுடைய 20 வயதிலேயே மிஸ்டர் மெட்ராஸ் போட்டியில் கலந்துகொண்டு, அதில் பட்டமும் வென்றார். இதையடுத்து சரிவர வேலை எதுவும் கிடைக்காததால் பேப்பர் பாய் ஆக வேலை பார்த்த சரத்குமார், பின்னர் படிப்படியாக முன்னேறி தான் பேப்பர் பாய் ஆக வேலை பார்த்த நாளிதழிலேயே பத்திரிகையாளராக பணியாற்றினார். இதையடுத்து நடிப்பின் மீதிருந்த ஆர்வம் காரணமாக சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த சரத்குமார், சூரியன் படம் மூலம் சோலோ ஹீரோவாக மாறினார்.
சினிமாவில் சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுடன் தோன்றிய நடிகர்களில் சரத்குமாரும் ஒருவர். இவரின் முதல் மனைவி பெயர் சாயா தேவி. இந்த ஜோடிக்கு மகளாக பிறந்தவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். சில கருத்து வேறுபாடுகள் காரணமாக சாயா தேவியை விவாகரத்து செய்து பிரிந்த சரத்குமார், கடந்த 2001-ம் ஆண்டு நடிகை ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ராகுல் என்கிற மகன் இருக்கிறார். சூரியவம்சம் படத்தில் ஜோடியாக நடித்தபோது தான் ராதிகாவுக்கும் சரத்குமாருக்கும் இடையே காதல் மலர்ந்தது. சரத்குமார் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்தாலும் அவருடன் தற்போதும் நட்புடன் பழகி வருகிறார்.
சரத்குமார் சினிமாவில் தற்போது பிசியான நடிகராக வலம் வருகிறார். ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல், தன்னுடைய வயதுக்கு ஏற்ற வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் இவர் நடித்த 3 பிஹெச்கே திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தில் நடிகர் சித்தார்த்துக்கு தந்தையாக நடித்திருந்தார் சரத்குமார். சூரியவம்சம் படத்துக்கு பின்னர் சரத்குமாரும் தேவையானியும் இப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். நடிகர் சரத்குமார் தற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
நடிகர் சரத்குமார் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நடிகர் சரத்குமாரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி அவரது சொத்து மதிப்பு ரூ.35 முதல் 40 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவருக்கு சொந்தமாக சென்னை கொட்டிவாக்கத்தில் பிரம்மாண்ட பங்களா ஒன்றும் உள்ளது. இதுதவிர ரியல் எஸ்டேட்டிலும் நிறைய முதலீடு செய்துள்ளார் சரத்குமார். இவரின் மனைவி ராதிகா, சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். அதன் மூலம் சின்னத்திரை சீரியல்களை தயாரித்து வருகிறார். அவரது சொத்து மதிப்பு 57 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.