Published : Jun 19, 2026, 01:00 PM ISTUpdated : Jun 19, 2026, 01:02 PM IST
EPFO - PMVBRY Benefits - முதல்முறையாக வேலைக்கு சேர்ந்து பிஎப் கணக்கில் இணைந்தவர்களுக்கு ரூ.15,000 இன்று முதல் வரவு வைக்கப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், இளைஞர்கள் வேலைக்கு செல்வதை ஊக்குவிக்கவும் ‘பிரதம மந்திரி விக்சித் பாரத வேலைவாய்ப்பு திட்டம்’ கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி தனியார் துறையில் வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு மொத்தம் ரூ.15,000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இது முதல்முறை வேலைக்கு சேரும் பணியாளர்களுக்கு மட்டுமல்லாமல் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகிறது.
ஒருவர் இதற்கு முன் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் எந்த நிறுவனத்திலும் வேலை பார்த்து இருக்கக் கூடாது. முதல் முறையாக வேலை பெற்று, பிஎப் கணக்கில் இணைந்திருக்க வேண்டும். மாத சம்பளம் ஒரு லட்சம் ரூபாய்க்குள் குறைவாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் பணியில் இருக்க வேண்டும். வேலையில் இணைந்து ஆறு மாதம் பூர்த்தி செய்தவர்களுக்கு முதல் தவணையில் ரூ.7,500-ம் இரண்டாவது தவணையில் ரூ.7,500-ம் மொத்தம் ரூ.15,000 நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
அதேபோல் புதிய ஊழியர்களை பணியில் சேர்க்கும் நிறுவனங்களுக்கு ஒரு ஊழியருக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத்தொகை என இரண்டு ஆண்டுகள் வரை வழங்கப்படும். கடந்த ஏப்ரல் மாதம் 6 மாத பணியை நிறைவு செய்த 4.4 லட்சம் ஊழியர்களுக்கு 446 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. அதேபோல் புதிய ஊழியர்களை வேலைக்கு சேர்த்த 18,000 நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த தவணையாக 15 லட்சம் ஊழியர்களுக்கான ரூ.2,400 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்.
டெல்லி விஞ்ஞான் பவனில் நடக்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ஊக்கத்தொகை நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் இந்த திட்டம் துவங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை புதிதாக 63 லட்சம் பேர் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதில் 30% பெண்கள் ஆவர்.
இந்தத் திட்டம் 2027 ஆம் ஆண்டு வரை செயல்பட உள்ளது. அதற்குள் மூன்று கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், இதற்கு ரூ.99,446 கோடி செலவிடவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது..
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.