
கடக ராசியினருக்கு ஆறு மற்றும் 9 ஆம் வீட்டின் அதிபதியாக விளங்கி வரும் குருபகவான் 26-05-2026 முதல் ஜென்ம குருவாக அமர்ந்து பலன் தரப்போகிறார். ஜென்ம குருவின் காலத்தில் ராமர் வனவாசம் சென்றார் என்பது புராண கதையாகும். எனவே கடக ராசிக்காரர்களுக்கு ஜென்ம குரு வனவாசம் செல்ல வைப்பாரா அல்லது வாழ வைப்பாரா என்கிற சந்தேகம் எழுகிறது. ஜாதக ரீதியாக தசா புத்திகள் சாதகமாக இருந்தால் ஜென்ம குரு உங்களை வாழ வைப்பார். தசாபுத்தி சாதகமற்ற நிலையில் இருப்பவர்களுக்கு சில பாதகமான பலன்கள் கிடைக்கக்கூடும்.
ஜென்ம ராசிக்குள் வரும் குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும், ஒன்பதாவது பார்வையால் பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார். மேலும் அதிசாரமாக சிம்ம ராசியில் 43 நாட்கள் நேர்கதியிலும், 42 நாட்கள் வக்ர கதியிலும் சஞ்சரிக்க இருக்கிறார். குரு பகவானின் இந்த பெயர்ச்சியால் கடக ராசியினருக்கு ஏற்படக்கூடிய பலன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
ஜென்ம குரு காலகட்டத்தில் ராமர் வனவாசத்திற்கு சென்றார் என்பது புராணங்களில் கூறப்பட்டுள்ள கதையாகும். ஜென்மத்தில் குரு வரும் காலத்தில் பிரச்சனை வந்துவிடும் என்கிற பயம் ஏற்படுகிறது. ஆனால் கடக ராசியில் உச்சம் பெற்றிருக்கும் குரு பகவான் ஏழு மாதங்கள் மட்டுமே இந்த ராசியில் சஞ்சரிப்பார். பின்னர் அதிசாரமாக சிம்மத்திற்கு சென்று அங்கு நேர் கதியிலும், வக்ர நிலையிலும் பயணிக்கிறார். குருவின் சஞ்சாரங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆறு மாதங்களுக்கு மட்டுமே நீடிக்கிறது.
இதன் காரணமாக கடக ராசிக்காரர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தளராத இறை நம்பிக்கை கடக ராசிக்காரர்களுக்கு பாதுகாப்பை கொண்டு வரும். இழந்த அனைத்து விதமான இன்பங்களையும் மீட்டுத் தரும். அபரிமிதமான சுப பலன்கள் கிடைக்கும். குருவின் நிலை மாற்றத்தால் உங்கள் வாழ்க்கையில் பொற்காலம் தொடங்க இருக்கிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு தனது உச்ச ராசிக்கு வந்து இருப்பதால் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான வளர்ச்சிகளும், முன்னேற்றங்களும் கிடைக்க இருக்கிறது.
குருவின் ஐந்தாம் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் விழ இருக்கிறது. ஐந்தாம் வீடு என்பது பூர்வீகம், குலதெய்வம், குழந்தை, அதிர்ஷ்டம் ஆகியவற்றை குறிக்கும் இடமாகும். எனவே இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்ட லட்சுமி உங்கள் கதவுகளை தட்டுவார். தங்கம், வெள்ளி போன்றவற்றில் செய்த முதலீடுகள் பல மடங்கு உயரும். உழைப்பின் மூலம் பெரிய வருமானத்தைக் காண்பீர்கள். இழந்த அனைத்தையும் மீட்டு எடுக்கும் யோகம் கிடைக்கும். பல வருடங்களாக தவறிய ஆசைகள், கனவுகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களின் நிலவிய தகராறுகள் விலகும். ஒரு தலை காதல் திருமணத்தில் முடியும். கண் திருஷ்டி, செய்வினை கோளாறுகள், புத்திர தோஷங்கள் போன்ற பாதிப்புகள் அகலும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன சஞ்சலம் விலகும்.
குருவின் ஏழாம் பார்வை சம சப்தம ஸ்தானமான களத்திர ஸ்தானத்தில் விழுகிறது. களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவை அகலும் நேரமாகும். சில்லறைக் காரணங்களை கூறி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தவர்கள் கூட தற்போது திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பார்கள். தடைபட்டவை அனைத்தும் மீண்டும் கிடைக்கும். உடலும் உள்ளமும் குளிரும் வகையில் நிகழ்வுகள் நடக்கும். மனம் நிம்மதி பெறும். தொழிலில் சாதகமான வாய்ப்புகள் உருவாகும். மன உளைச்சலை தந்தவர்கள் விலகிச் செல்வார்கள். புதிய நட்புகள் உருவாகும். காலமும், நேரமும் சாதகமாக இருக்கும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கைகூடிவரும்.
குருவின் ஒன்பதாம் பார்வை பாக்கிய ஸ்தானத்தில் பதிய இருக்கிறது. இதனால் உத்தியோக ரீதியான நன்மைகள் கிடைக்கலாம். வெளியூர், வெளிநாடு சென்று வேலை பார்க்கும் வாய்ப்புகள் உருவாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு பொற்காலமாக இருக்கும். குடும்பம், வியாபாரம், வருமானம், உற்பத்தி என அனைத்தும் சாதகமாக இருக்கும். குலதெய்வத்தின் முழு அருளும் கிடைக்கும். வீட்டு விசேஷங்களில் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். கிரகங்களின் ஆசி உங்களை மகிழ்விக்கும். முன்னோர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும். தந்தை வழி உறவுகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் சீராகும்.
02-06-2026 முதல் 18-06-2026 வரை சுமார் 16 நாட்கள் குரு பகவான் தனது சொந்த நட்சத்திரமான புனர்பூசத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். கடக ராசியினர் இந்த கிரக பெயர்ச்சியால் சாதகமாக சூழலை அனுபவிப்பீர்கள். வாழ்க்கையில் செட்டில் ஆவதற்கான வாய்ப்புகள் உருவாகும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் நல்ல பலன் கிடைக்கும். 2026 ஆம் ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு பிறவிக் கடன்களையும், பொருள் கடன்களையும் தீர்க்கக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும்.
19-06-2026 முதல் 19-08-2026 வரை குரு பகவான் சனி பகவானின் சொந்த நட்சத்திரமான பூச நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக குடும்பத்தின் நிலவிய கடும் வேதனைகள் முடிவுக்கு வரும். தரித்திரம் நீங்கும். பசி, பட்டினி, அழுகை ஆகியவை விலகும். துரதிஷ்டம் குறையும். கடன் சுமை அகலும். தொழில் விஷயங்களில் சாதகமான நிலை உருவாகும். கோச்சாரத்தில் எட்டாமிடத்தில் நிற்கும் ராகு பகவானால் பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்வதற்கான நாட்கள் நெருங்கியுள்ளது. உங்களை அவமானப்படுத்திய வம்பு வழக்குகளில் இருந்து மீண்டு வருவீர்கள்.
புதன் பகவானுக்கு சொந்தமான ஆயில்ய நட்சத்திரத்தில் குருபகவான் 20-08-2026 முதல் 31-10-2026 வரை பயணிப்பார். அதன் பின்னர் 15-04-2027 முதல் 26-06-2027 வரை சஞ்சாரம் செய்வார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு மன நிம்மதியான நாட்கள் கிடைக்கும். நிம்மதியாக தூங்குவீர்கள். எதிர்காலத்தில் நடக்க இருப்பதை முன்கூட்டியே அறிந்து அதற்கு ஏற்ப செயல்படுவீர்கள். ஆவணங்கள், சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் தீரும். உடன் பிறந்தவர்களால் ஏற்பட்ட மன உளைச்சல்கள் சரியாகும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் நடக்கும்.
இந்த காலகட்டத்தில் 26-01-2026 முதல் 13-04-2027 வரை குரு பகவான் வக்ர கதியில் அதாவது பின்னோக்கிய நிலையில் ஆயில்ய நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். இந்த காலகட்டத்தில் குருவும், கேதுவும் இணைவதால் கடன் பிரச்சனைகள் அதிகரிக்கலாம், சொத்து பத்திரத்தை அடமானம் வைத்தல் போன்றவை கூடாது. அடமானப் பொருட்களை இழக்க நேரிடும் என்பதால் சிந்தித்து செயல்பட வேண்டியது அவசியம். யாருக்கும் ஜாமின் கையெழுத்து போடுதல் கூடாது.
கடக ராசியில் இருக்கும் பொழுதே குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைவார். 01-11-2026 முதல் 13-12-2026 வரை அவர் அதிசாரமாக சிம்ம ராசியில் கேதுடன் இணைவார். இதன் காரணமாக முக்தி, மோட்சம், மறுபிறவி, புண்ணியம், பாவம் பற்றிய சிந்தனைகள் உருவாகும். உத்தியோகத்திலிருந்து விருப்ப ஓய்வு பெறுவீர்கள். யாத்திரைகள் சென்று வரக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். 14-12-2026 முதல் 25-01-2026 வரை சிம்ம ராசியில் வக்ர கதியில் குரு பகவான் சஞ்சரிப்பார். இது உங்கள் அதிர்ஷ்டத்தைக் குறைக்கலாம். காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகள் அதிகரிக்கலாம். கடன் தொல்லைகள் உயரக்கூடும். எதிர்காலம் பற்றிய பயம் உண்டாகும். எனவே வெளிப்படை தன்மை உடன் இருக்க வேண்டியது அவசியம்.
பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீ ராமரை வழிபடுவது ஜென்ம குருவால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும். அனுமன் வழிபாடு அனைத்து துன்பங்களையும் போக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)