நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு மாலையில் தொடங்க உள்ள நிலையில், அங்கு காலையிலேயே மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கி அக்கட்சியின் முதல் மாநாட்டை இன்று நடத்துகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலை எனும் கிராமத்தில் தான் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டு உள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முழுமையாக நிறைவடைந்து இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் முதல் மாநாடு என்பதால் இதில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விஜய் ரசிகர்கள் விக்கிரவாண்டி நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்காக உணவு, குடிநீர் வசதி என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை அருகே தவெக மாநாட்டு திடல் அமைக்கப்பட்டு இருப்பதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... விக்ரவாண்டியில் த.வெ.க மாநாடு; திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்!
தவெக மாநாடு இன்று மாலை நான்கு மணிக்கு தொடங்க உள்ளது. இருப்பினும் இதற்காக நேற்று இரவில் இருந்தே மாநாட்டு திடலில் மக்கள் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளது. சிலர் இரவு அங்கு வந்து தங்கிவிட்டனர். இந்த நிலையில், இன்று மாலை நடக்க உள்ள மாநாட்டுக்கு தற்போதே கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் கூடியது மட்டுமின்றி அவர்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி உள்ளே நுழைந்துள்ளனர்.
நடிகர் விஜய்யின் தவெக கட்சி மாநாட்டில் பங்கேற்க அலைமோதிய மக்கள் கூட்டம் pic.twitter.com/i5zGC5SeS4
— Asianetnews Tamil (@AsianetNewsTM)மாலை நடக்க உள்ள மாநாட்டுக்கு காலையிலேயே மாநாட்டு திடல் ஹவுஸ் புல் ஆனதால், ஏற்பாட்டாளர்களும் செய்வதறியாது திகைத்துப் போய் உள்ளனர். மாலை வரை மேலும் கூட்டம் அதிகரித்தால் அதை கட்டுப்படுத்த முடியுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. விஜய் மாநாட்டுக்கு கூட்டம் குவிந்து வருவதால் வி சாலை பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. அங்கு பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இதுதவிர விஜய்யின் பாதுகாப்புக்காக அங்கு பவுன்சர்களும் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதையும் படியுங்கள்... மஞ்ச சேலையில் த.வெ.க மாநாட்டுக்கு வருகிறாரா திரிஷா? குவியும் கேரவன்கள் யாருக்கு?