கமல்ஹாசன் தயாரிக்கும் படத்திலிருந்து உதயநிதி ஸ்டாலின் விலகியதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக யார் நடிக்க போவது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் சூர்யா நடித்த ஆதவன் படத்தின் மூலம் சிறப்பு தோற்றத்தில் நடித்ததன் மூலமாக அடுத்து வந்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். ஒரு நடிகரோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்கிறார். அதுமட்டுமின்றி விநியோகஸ்தராகவும் இருக்கிறார். இனி என்ன, பின்னணி பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என்று அடுத்தடுத்த லெவலுக்கு செல்ல வேண்டியது தான்.
கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், அதற்குள்ளாக அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவே, அமைச்சராகிவிட்டதால் இனி படங்களில் கவனம் செலுத்த முடியாது. ஆகையால், கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாக இருந்த புதிய படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வந்த நிலையில், படத்திற்கும், கதைக்கும் விஜய் சேதுபதி தான் கச்சிதமாக இருப்பார். ஆகையால், அவரை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டில் திரைக்கு வந்த விக்ரம் படத்தில் கமல் ஹாசன் படத்தில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால், அண்மையில் விஜய் சேதுபதி நடிப்பில் டிஎஸ்பி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.