வழக்குகளைப் பற்றியெல்லாம் தான் கவலைப்படவில்லை என்றும், அதெல்லாம் துணிக்கடைக்கு போய் கட்டப்பை வாங்கிட்டு வர்ற மாதிரினு TTF வாசன் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
சினிமா பிரபலங்களுக்கு இணையாக யூடியூப் பிரபலங்களும் தற்போது வளர்ந்து வருகின்றனர். யூடியூப்பில் மில்லியன் கணக்கில் பாலோவர்களை வைத்திருப்பவர்களில் TTF வாசனும் ஒருவர். இவர் பைக் ஓட்டும் வீடியோக்களை பதிவிட்டு யூடியூப்பில் சம்பாதித்து வருகிறார். குறிப்பாக இவரை அதிகம் பின் தொடர்வது 2கே கிட்ஸ் தான்.
அவர்களை கவரும் விதமாக பைக்கில் அதிவேகமாக செல்வது, சாகசம் செய்வது என தொடர்ந்து சில வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்த வீடியோக்கள் இளைஞர்களை தவறான வழியில் கொண்டு செல்லும் வகையில் உள்ளதால் வாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கண்டனக் குரல்களும் எழுந்த வண்ணம் உள்ளன.
இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டு வரும் TTF வாசன், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிக்பாஸ் பிரபலம் ஜிபி முத்துவை தனது பைக்கில் உட்கார வைத்து அதிவேகமாக சென்ற வீடியோவை வெளியிட்டு இருந்தார். இதையடுத்து அவர்மீது போத்தனூர் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளிலும், சூலூர் காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் மதுக்கரை நீதிமன்றத்தில் சரணடைந்து இந்த வழக்குகளில் இருந்து ஜாமீன் பெற்றார் TTF வாசன். இதையடுத்து தன்னைப்பற்றி அவதூறு பரப்புவதாக ஊடத்தினரை எச்சரித்து வீடியோ வெளியிட்ட அவர், அதன்பின் சில மாதங்கள் எந்தவித சர்ச்சைக்குரிய வீடியோக்களையும் வெளியிடாமலும், பிரச்சனைகளில் சிக்காமலும் இருந்து வந்தார்.
இதையும் படியுங்கள்... மரண பயத்தில் ஜி.பி.முத்து… பைக்கில் பறக்கும் TTF வாசன்… கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!
இதனிடையே கடந்த சில வாரத்திற்கு முன் கடலூரில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சினிமா அலுவலகம் ஒன்றை திறந்து வைப்பதற்காக சென்றிருந்தார். அப்போது அங்கு வந்திருந்த TTF வாசனின் யூடியூப் பாலோவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக பைக்குகளில் ஹாரன்களை ஒலிக்கவிட்டு அட்ராசிட்டி செய்து வந்தனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக TTF வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் நேரலையில் பேசிய TTF வாசன், போலீசுக்கு சவால் விடும் தொனியில் பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
தான் வழக்குகளைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை என்றும், அதெல்லாம் துணிக்கடைக்கு போய் கட்டப்பை வாங்கிட்டு வர்ற மாதிரினு பேசியுள்ள அவர், தன்மீது கைவச்சா கூட வருத்தப்பட்டிருக்க மாட்டேன். ஆனால் பசங்க மேல கைவச்சதை தான் தாங்கிக்க முடியல என கூறிய அவர், யாரெல்லாம் விரட்டி அடித்தார்களோ அவர்களே ராஜ மரியாதையாடு நம்மை உட்கார வைப்பார்கள் என அந்த வீடியோவில் பேசி உள்ளார். இப்படி ஒருத்தன தொடர்ந்து குத்திக்கிட்டே இருந்தா அவன் ஆலமரமா வளர்றதவிட அசுர மரமா வளர்ந்திடுவான்னு பஞ்ச் டயலாக் லாம் பேசி இருக்கும் TTF வாசனின் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. சிலர் தமிழ்நாடு காவல்துறையை டேக் செய்து அந்த வீடியோவை பதிவிட்டு வருவதால், சீக்கிரமே போலீஸ் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள்... டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு… பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் நடவடிக்கை!!