மறைந்த ஊடக தொழிலதிபர் ராமோஜி ராவின் குடும்பம், தொழில்கள் மற்றும் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஊடக தொழிலதிபரும், ராமோஜி ராவ் ஸ்டூடியோ நிறுவனருமான ராமோஜி ராவ் இன்று அதிகாலை காலமானார். உடல் நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 87. அவரின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ராமோஜி ராவின் குடும்பம், தொழில்கள் மற்றும் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
செருகுரி ராமோஜி ராவ், 1936 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி, ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பெடபருபுடி கிராமத்தில் ஸ்ரீ செருகூரி வெங்கட சுப்பம்மா மற்றும் செருகூரி வெங்கட சுப்பையா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு ரங்கநாயகம்மா மற்றும் ராஜ்யலட்சுமி என்று இரு சகோதரிகள் உள்ளனர்.
விவசாய குடும்பத்தை சேர்ந்த அவர், தனது குழந்தைப் பருவத்தில், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும், ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்வதற்கும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர் வெற்றிகரமான தொழிலதிபராகவும், ஊடகத் தொழிலதிபராகவும் ஆனார் மற்றும் ரமா தேவியை மணந்தார். சுமன் பிரபாகர் மற்றும் கிரண் பிரபாகர் என்ற இரு மகன்கள் அவருக்கு உள்ளனர்.
1996 ஆம் ஆண்டு ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி என்ற ஸ்டூடியோவை தொடங்கினார். இது தான் உலகின் மிகப்பெரிய திரைப்பட ஸ்டுடியோவாகும். இது பல ஊழியர்களின் வாழ்வாதாரமாகவும், உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் பொழுதுபோக்கு இடமாகவும் உள்ளது.
ராமோஜி ராவ், பெண் உரிமை, சமத்துவத்திற்கான நீதி மற்றும் பல மனித நலத் திரைப்படங்களை சித்தரிக்கும் சக்திவாய்ந்த திரைப்படங்கள் மூலம் தெலுங்கு பார்வையாளர்களின் இதயங்களில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்தார். திரைப்படங்களுக்கான வசனங்களைத் தேர்ந்தெடுத்து பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் ராமோஜி ராவ் முக்கிய பங்கு வகித்தார்.
ராமோஜி ஃபிலிம் சிட்டி தவிர, ராமோஜி ராவ் மற்ற நிறுவனங்களை சொந்தமாக வைத்திருக்கிறார். தனது அசாத்திய முயற்சியால் அதை சிறந்த நிலைக்கு கொண்டு வந்தார். அந்த வகையில் அவர் 1995 இல் E TV நெட்வொர்க் சேனலின் கீழ் 12 சேனல்களைக் கொண்ட குழுவைத் தொடங்கினார், பல்வேறு மொழிகளில் பொழுதுபோக்கு ஆதாரங்களுடன் தகவல்களை ஒளிபரப்பினார். E Tv சேனல் தினசரி தொலைக்காட்சி தொடர்கள், தெலுங்கு, ஹிந்தி, பங்களா, மராத்தி, கன்னடம், ஒரியா, குஜராத்தி மற்றும் உருது ஆகிய மொழிகளில் நாட்டின் பிற மாநிலங்களில் பார்வையாளர்களை மகிழ்விக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் பிரபலமான சேனல்களில் ஒன்றாகும்.
1974 தொடங்கப்பட்டதில் இருந்தே செய்திகள் மற்றும் ஊடகங்களின் பயணத்தை மாற்றியமைத்தது ஈநாடு. தெலுங்கு மக்களுக்கு தேசிய செய்திகளுடன் மாவட்ட பதிப்புச் செய்திகளையும் காட்சிப்படுத்திய முதல் செய்தித்தாள் இதுவாகும். தேசிய மற்றும் மாவட்ட நிகழ்வுகள் பற்றிய வலுவான தகவல்களை வழங்கும் சிறந்த செய்தித்தாள் ஈநாடு. விளையாட்டு, திரைப்பட மதிப்புரைகள், வணிகம், வேலைவாய்ப்பு, அரசியல் செய்திகள் என நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய செய்திகளையும் உள்ளடக்கிய முதல் செய்தித்தாள் இதுவாகும். ஈநாடு இன்று வரை சிறந்த செய்தித்தாள்களை வாசகர்களுக்கு எடுத்துச் செல்கிறது.
மேலும் ராமோஜி ராவ் ‘அன்னதாதா’ இதழைத் தொடங்கினார், விவசாயிகள் பற்றிய செய்திகள், அவர்களின் பணி மற்றும் மேம்பாடு ஆகிய கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. பின்னர் அவர் E TV சேனலில் விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் விவசாயத்தின் முறைகளை பிரத்தியேகமாக ஒளிபரப்பும் அன்னதாதா தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொடங்கினார்..
1980 ஆம் ஆண்டு, ஊறுகாய், மசாலாப் பொருட்கள், சமையல் எண்ணெய்கள் மற்றும் பிற தின்பண்டங்களை வழங்கும் பிரியா ஃபுட்ஸ் என்ற நிறுவனத்தையும் தொடங்கினார். இவை தவிர டால்பின் குழும ஹோட்டல்களின் உரிமையாளராகவும் ராமோஜி ராவ் இருக்கிறார்.. மயூரி ஃபிலிம்ஸ் என்ற திரைப்பட விநியோக நிறுவனமும் அவருடையது தான்.
1974 ஆம் ஆண்டு ராமோஜி ராவ் மார்க்தர்ஷி என்ற சிட் பன்ஃப் நிறுவனத்தை தொடங்கினார். ராமோஜி ராவ் 2002 இல் ஹயாத்நகரில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியின் முதல் கேட் அருகே தனது மனைவி ‘ராமா தேவி பப்ளிக் ஸ்கூல்’ பெயரில் புகழ்பெற்ற பள்ளியை நிறுவியவர்.
ராமோஜி ராவ் தனது சொந்த திரைப்பட விநியோக நிறுவனமான மயூரி ஃபிலிம் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி தயாரிப்புக்குப் பிறகு படங்களை விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ளார், மேலும் அதையே தங்கள் சொந்த பேனரிலும் செய்து வருகிறார். தெலுங்கு திரைப்படங்களை விமர்சனம் செய்வதற்காக ‘சித்தாரா இதழை அவர் அறிமுகப்படுத்தினார்.
பல தொழில்களில் கொடி கட்டி பறந்து வரும் ராமோஜி ராவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.41,706 கோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..
ராமோஜி ராவ் 4 பிலிம்பேர் விருதுகளையும், தெலுங்கு திரைப்படத் துறையில் அவரது அபாரமான பணிக்காக தேசிய திரைப்பட விருதையும் பெற்றவர். பத்திரிகை மற்றும் இலக்கியத்தில் அவர் ஆற்றிய அர்ப்பணிப்புப் பணிக்காக அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. ராமோஜி ராவ் பயணம் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு ஊக்கமளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..
எத்தனை தடைகள் வந்தாலும், துணிச்சலுடன் நின்று, சக்திவாய்ந்த தொழில் அதிபராக, பத்திரிகையாளராக, திரைப்படத் தயாரிப்பாளராக, ஊடகத் தொழிலதிபராக, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சேவை செய்யும் சிறந்த மனிதராக ராமாஜி ராவ் விளங்கினார்.. அவர் இந்த உலகை விட்டு பிரிந்தாலும், அவரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதே உண்மை..