மறைந்த கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை தீவுத்திடலுக்கு வந்த கமல்ஹாசன், அவர் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசி உள்ளார்.
விஜயகாந்தின் மறைவுக்கு தமிழ்திரையுலகமே ஒன்றுதிரண்டு அஞ்சலி செலுத்தி வருகிறது. இன்று காலை முதல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு பொதுமக்கள் ஒருபுறம் அஞ்சலி செலுத்த மறுபுறம் சினிமா பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் படையெடுத்து வந்து தங்கள் நண்பனுக்கு பிரியா விடை கொடுத்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தூத்துக்குடியில் இருந்து கிளம்பி வந்த நிலையில், அவர் வந்து சென்ற உடன் உலகநாயகன் கமல்ஹாசன் வந்து கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார். அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்த விஜயகாந்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய கமல்ஹாசன், பின்னர் அளித்த பேட்டியில் கேப்டன் குறித்து நெகிழ்ச்சி உடன் பேசி இருக்கிறார்.
undefined
அந்த பேட்டியில் கமல்ஹாசன் கூறியதாவது : “எளிமை, நட்பு, உழைப்பு, பெருந்தன்மை என இத்தனை வார்த்தைகளையும் சேர்த்து ஒரே மனிதருக்கு சொல்ல முடியும் என்றால் அது விஜயகாந்துக்கு மட்டும் தான் பொறுந்தும். இவர் நட்சத்திர அந்தஸ்து வருவதற்கு முன்பு எப்படி என்னிடம் பழகினாரோ, அதேமாதிரி தான் இவ்வளவு பெரிய நட்சத்திரம் ஆன பின்னரும் என்னிடம் பழகினார்.
விஜயகாந்திடம் எனக்கு பிடித்தது என்னவென்றால், அவரிடம் எந்த அளவு பணிவு இருக்கிறதோ, அந்த அளவு நியாயமான கோபமும் வரும். அந்த கோபத்தின் ரசிகன் நான். அதனால் தான் அவர் மக்கள் பணிக்கே வந்தார் என நான் நம்புகிறேன். இப்படிப்பட்ட நேர்மையாளரை இழந்திருப்பது என்னைப்போன்ற ஆட்களுக்கு ஒருவித தனிமை தான். நல்ல நண்பருக்கு விடைகொடுத்துவிட்டு நான் செல்கிறேன்” என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... விஜயகாந்த் செய்த அந்த 2 உதவிகளை என்னால் என்றென்றும் மறக்க முடியாது... நண்பனை பற்றி ரஜினி பகிர்ந்த மெமரீஸ்