பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ள நிலையில், இந்தியில் அமீர் கானின் மகனும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூரும் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் கதை நல்லா இருந்தா போதும். அது லோ பட்ஜெட் படமா, ஹை பட்ஜெட் படமா என்பதெல்லாம் தேவையில்லை. இதுதவிர காலத்திற்கு ஏற்ற வகையில் பட கதை இருக்கனும். இதுதான் ரொம்ப முக்கியம். அந்த வகையில் காலத்திற்கு ஏற்ற வகையில் படங்களை கொடுத்த நம்ம இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு முதலில் ஒரு சல்யூட். இவர் கொடுத்த கோமாளியும் சரி, லவ் டுடே படமும் சரி இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சியால் என்னெல்லாம் பிரச்சனைகள் ஏற்படுகிறது? இளைஞர்களுக்கும், காதலுக்கும் உள்ள முக்கியத்துவம் என்ன? என்பதையும் தெள்ள தெளிவாக தனது ஸ்டைலில் கொடுத்திருக்கிறார்.
கடந்த ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ரொமாண்டிக் காமெடி கதையை மையப்படுத்தி வெளியான படம் லவ் டுடே. இந்தப் படத்தில் ஹீரோவும் அவர் தான். அதான் பிரதீப் ரங்கநாதன். லோ பட்ஜெட்டில் இப்படியொரு படத்தை கொடுக்க முடியுமா? என்று கேட்டால் கொடுத்துவிட்டாரே. அது மட்டுமின்றி வசூலையும் இந்தப் படம் அள்ளியுள்ளது. ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் தான் இப்போ ரூ.150 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.
லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அம்மாவாக ராதிகாவும், ஜோடியாக இவானாவும் நடித்திருக்கிறார்கள். இவானாவுக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்திருக்கிறார். யோகி பாபு முக்கியமான ரோலில் கலக்கியிருக்கிறார். இவர்கள் தவிர, ரவீனா ரவி, அக்ஷயா உதயகுமார், ஆதித்யா கதிர் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர். திரையரங்கில் வெற்றிநடை போட்ட இந்தப் படம் தான் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த இந்தப் படம் தான் தற்போது ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்படுகிறது. இதில், அமீர் கானின் மகன் ஜூனைத் கான் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூனைத் கான் இதற்கு முன்னதாக மகாராஜா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் இன்னும் திரைக்கு வரவில்லை. தற்போது இவர் நடிக்க உள்ள லவ் டுடே இவரது 2ஆவது படம். குஷி கபூருக்கும் இது 2ஆவது படம். தற்போது ஆர்ச்சீஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். லவ் டுடே ஹிந்தி ரீமேக்கில் நடிப்பதற்கு இருவரிடமும் பேசப்பட்டதாகவும், அந்தப் படத்தில் நடிப்பது தங்களுக்கு மகிழ்ச்சி என்று இருவரும் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.