சீமான், விஜயலட்சுமி போன்று பலரும் அவர்களது பிரச்சினைகளை என்னிடம் கூறுகிறார்கள், அதே போன்று சீமானும், விஜயலட்சுமியும் என்னிடம் அவர்களது பிரச்சினைகளை கூறினால் நான் ஆலோசனை வழங்குவேன் என லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் கிராம உதயம் என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி அந்த அமைப்பின் 25வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு அப்துல் கலாம் விருது வழங்கும் விழா மற்றும் 2000 பேருக்கு மரக்கன்று மற்றும் மஞ்சள் பை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு மரக்கன்றுகள் மற்றும் விருதுகளை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாகவே உள்ளது. தற்போது மீடியா மற்றும் செல்போன், வாட்ஸ் அப் உள்ளிட்ட நவீன சாதனங்கள் மூலம் இந்த குற்றங்கள் வெளியே தெரிகின்றன. இது வரவேற்க வேண்டிய விஷயம். இந்த குற்றங்களை தடுக்க பல்வேறு சட்டங்கள் உள்ளன. ஆனால் இவற்றை முறையாக கட்டுப்படுத்த பல கட்டங்களில் முடியவில்லை. சட்டங்கள் முறையாக செயல்படுத்த முடியாமல் சட்டங்களில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தப்பித்து விடுகின்றனர். இதை தடுக்க வேண்டும்.
அதேபோன்று மன அழுத்தத்தினால் திடீரென்று சில நிமிடங்களில் எடுக்கும் தவறான முடிவால் தற்கொலைகள் நடக்கின்றன. இதற்கு வாழ்க்கையில் எந்த பிரச்சினை வந்தாலும் எதிர்த்து போராடக்கூடிய மனநிலையை உருவாக்க வேண்டும். மரணத்திற்கு தற்கொலை தீர்வாகாது. வாழ்க்கையில் போராட பழகிக் கொள்ள வேண்டும்.
தற்போது மத்திய அரசு 33 சதவீத இட ஒதுக்கீடு பெண்களுக்காக கொண்டுவந்துள்ளது. இது வரவேற்க வேண்டிய ஒன்று. இது வெரும் பேப்பராக இல்லாமல் நடைமுறைக்கு வர வேண்டும். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசு நிர்வாகங்களில், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் பதவியில் இருக்கிறார்கள். ஆனால் அதற்கு பின்னால் அவர்களது கணவர் மற்றும் உறவினர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இவ்வாறு இல்லாமல் பெண்கள் உரிய முறையில் செயல்பட அனுமதிக்க வேண்டும். அப்பொழுதுதான் பெண்களுக்குரிய பிரச்சினைகளில் தீர்வு காண முடியும்.
சீமான், விஜயலட்சுமி விவகாரம் குறித்து கூறுகையில், தன்னிடம் இது போன்று பாதிக்கப்பட்டோர் நேரடியாக வருகிறார்கள். அவர்களுக்கு உரிய தீர்வை நான் கூறி வருகிறேன். அதேபோன்று இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவர்கள், சம்பந்தப்பட்டவர்கள் என்னிடம் கேமரா முன்பு வந்து பேசினால் என்னுடைய ஆலோசனையை வழங்குவேன். அவ்வாறு அவர்கள் இல்லாமல் இந்த பிரச்சனையை பற்றி பேசுவது தவறானதாகும்.
சென்னையில் வயதான தம்பதியரை கட்டிப்போட்டு 75 சவரன் நகை, 3 லட்சம் ரொக்கம் கொள்ளை
விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேட்டபோது அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் அவர்கள் மக்கள் சேவை ஆற்றி இருக்க வேண்டும். கீழ் மட்டத்தில் பல்வேறு பணிகள் செய்துவிட்டு பின்னர் அரசியலுக்கு வர வேண்டும். மேலும் தமிழக மக்கள் வணிக ரீதியான படங்களை மற்றும் வெற்றியடைய வைக்காமல் நல்ல கருத்துள்ள தரமான படங்களையும், சிறிய படங்களையும் திரையரங்கிற்கு வந்து பார்த்து வெற்றியடைய வைக்க வேண்டுமென கூறினார்.