காட்டாமணி என்னும் நச்சுத் தாவரத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்...
நெய்வேலி காட்டாமணக்கு/காட்டாமணி (Ipomoea carenea)
இது எக்காளச்செடி எனவும் அழைக்கப்படும். பெரிய ஊதா நிறம் கலந்த வெள்ளைப்பூக்களுடனும், பெரிய இலைகளுடனும் காணப்படும். அழகுக்கென்றும், பசுந்தாள் உரத்திற்கு என்றும் அறிமுகப்படுத்தப்பட்ட இச்செடி பெரும் பிரச்சனைகளை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறது.
இது ஏற்படுத்தும் பெரும் பிரச்சனைகளைத் தஞ்சாவூர் மாவட்டத்தில் காணலாம். வாய்க்கால்களைப் பெரும் அளவில் மூடி நீரோட்டத்தைத் தடுக்கிறது. ஆடுகளுக்கும் பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
சில ஆடுகள் இத்தழையை உண்பதில்லை. ஆனால், சில ஆடுகள் தாராளமாக மேய்ந்துவிடும். சிறப்பாகப் புதிதாகத் தஞ்சைப் பகுதிக்குக் கொண்டு வரப்படும் ஆடுகள் முழுவதுமாக இத்தழையை மேய்ந்து மாண்டு போகும்.
முன்பு தஞ்சையில் தலைச்சேரி, சமுனாபாரி இனக்கடா ஆடுகளை அவ்வூர் மக்கள் வாங்கிய சூழ்நிலையில் அவை பல இறந்துவிட நேர்ந்தது.
இத்தழையில் கழிச்சலை உண்டாக்கும் நச்சுப்பொருளும் இரத்த அணுக்களை அழிக்கும் நச்சுப் பொருளும், நரம்புகளைத் தாக்கும் நச்சுப் பொருளும் உண்டு. இதனால் இத்தழையை அதிக அளவில் ஏற்கும் வெள்ளாடுகள் இறந்துவிடும். சிறிய அளவில் மேய்ந்துவிடும் ஆடுகளுக்குச் சிகிச்சை அளித்துக் குணமாக்கலாம்.
இத்தழை உள்ள பகுதிகளில் மேய அனுமதிக்காமல் இருப்பதே சிறந்த பாதுகாப்பு முறையாகும். முக்கியமாகப் புதிதாக வாங்கிய வெள்ளாடுகளைப் பொருத்த மட்டில் மிகக் கவனம் தேவை.